உள்நாடு

வெள்ளம், மற்றும் ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ISRC நிறுவனம் நடத்தி வரும் இலவச மருத்துவ முகாம்கள்..!

ISRC நிறுவனம் இலங்கையில் பல தசாப்தங்களாக மனிதாபிமான, சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. அதன்படி அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ‘சைக்ளோன் டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் வகையில் தனது அவசர உதவி நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாகப் பல பகுதிகளில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் ECOSOC அங்கீகாரத்தைப் பெற்றுள்ள ISRC நிறுவனம் அரச சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து இவ்விலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. இதன் மூலம் பாதிப்பு அதிகம் ஏற்பட்ட மக்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்துள்ளதாக அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகளாக நாட்டில் பணியாற்றி வரும் ISRC நிறுவனம் நீர் மற்றும் , சுகாதார சேவைகள், கல்வி உதவி, வீட்டுத்திட்டம், அனாதை பராமரிப்பு, வாழ்வாதாரம், மற்றும் பருவகால நிவாரணங்கள் போன்ற துறைகளில் சேவைகளை வழங்கி வருகிறது.

ISRC நிறுவனத்தின் திட்டமிடலின் படி, திட்டமிடப்பட்ட 14 இலவச மருத்துவ முகாம்களில் பத்து முகாம்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இவை அனைத்தும் புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நடத்தப்பட்டன

இவ் இலவச மருத்துவ முகாம்களில் மருத்துவ பரிசோதனை, மருத்துவ ஆலோசனை, சுகாதார வழிகாட்டுதல், காயங்களுக்கு மருந்து கட்டுதல் மற்றும் இலவச மருந்துகள் வழங்குதல் போன்ற சேவைகள் இடம்பெற்றன.

இது வரை பத்து மருத்துவ முகாம்களின் மூலம் சுமார் நான்காயிரம் நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். அதன்படி அஷ்ரஃபிய்யா அரபுக் கல்லூரி, மணல்குன்று, அசன் குத்தூஸ் முஸ்லிம் வித்யாலயம், வெட்டாளை, மஸ்ஜிதுல் ஹசனாத் ஜும்ஆ பள்ளிவாசல், அல் ஜித்தா, தில்லையடி, ISRC அலுவலகம், நுரைச்சோலை, G.R.C. தமிழ் வித்யாலயம், ஏத்தாளை, கண்டக்குளி அவசர குடியேற்ற முன்பள்ளி, எளுவன்குளம் M.M.V., வனாத்தவில்லுவ. கரம்பை ஹுசைனியாபுரம், பலாவி நாகவில்லு, புத்தளம் செவ்வந்தீவு, ஆகிய இடங்களில் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றன.

மேலும் தொடர்ந்து நடைபெற உள்ள மருத்துவ முகாம்கள் டிசம்பர் மாதம் 14 முதல் 17 வரை முந்தல், கருவலகஸ்வெவ, ஆராச்சிக்கட்டுவ மற்றும் நாத்தாண்டி ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளதாகவும் ISRC நிறுவனம் அறிவித்துள்ளது.

அரச சுகாதாரத் துறைகள், மருத்துவக் குழுக்கள், தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரின் ஒத்துழைப்புக்கு ISRC நிறுவனம் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.

இயற்கைப் பேரிடர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நீண்டகால மனிதாபிமான உதவிகளை வழங்குவதே இம்முயற்சியின் நோக்கமாக இருப்பதாக ISRC நிறுவனத்தின் எச்.எம் அஷான் மேலும் தெரிவித்துள்ளார்.

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *