உள்நாடு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை..! -புத்தளத்தில் ஜனாதிபதி

அரசாங்கம் பேணும் வலுவான நிதி ஒழுக்கத்தின் காரணமாகவே மக்களுக்கு அதிகமான இழப்பீடுகளை வழங்க முடிந்தது

பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் பணியை டிசம்பர் 25 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுங்கள்

இறால் பண்ணையாளர்களுக்கு நியாயமான இழப்பீடு மற்றும் சலுகை கடன் திட்டம்

நிர்மாணங்களை மேற்கொள்ளும்போது, பிரதேசமாக மாத்திரமன்றி, நாடாகவும் கிடைக்கும் பொருளாதார நன்மைகளில் கவனம் செலுத்துங்கள்- ஜனாதிபதி

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், சேதங்களுக்கான இழப்பீடு வழங்கும் பணியை விரைவுபடுத்தி, விவசாயம், மீன்பிடி மற்றும் தொழில்துறைகளை மீட்டெடுக்க துரித நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் பணியை டிசம்பர் 25 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார்.

புத்தளம் மாவட்ட செயலகத்தில் சனிக்கிழமை (13) முற்பகல் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அண்மையில் ஏற்பட்ட சூறாவளி, முழு நாடும் ஒன்றாக முகங்கொடுத்த மிகப் பாரிய பேரழிவு என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க முப்படைகள், பொலிஸ் மற்றும் அரச அதிகாரிகள் செய்த பெரும் அர்ப்பணிப்பைப் பாராட்டியதோடு, அந்த அர்ப்பணிப்பின் காரணமாகவே, மின்சாரம், நீர் மற்றும் வீதிகள் போன்ற அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகள் கணிசமான அளவு புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், அரசாங்கம் பேணும் வலுவான நிதி ஒழுக்கத்தின் காரணமாகவே, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வளவு அதிக அளவிலான இழப்பீட்டை வழங்க முடிந்தது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதுவரை கொடுப்பனவுகள் மற்றும் உதவிகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைக் கவனத்தில் கொண்டு, உரியவர்களுக்கு மட்டும் உரிய இழப்பீடு வழங்கப்படுவதை உறுதிசெய்யவும், எந்த சூழ்நிலையிலும் அந்தக் கொள்கையை மீறுவதற்கு இடமளிக்கக் கூடாது என்றும், இது தொடர்பாக முழுமையாகத் தலையிடுமாறும் ஜனாதிபதி, பிரதேச செயலாளர்களுக்குப் பணிப்புரை விடுத்தார்.

மாவட்டத்தில் சேதமடைந்த பாதைகள் மற்றும் பாலங்களை புனரமைப்பது குறித்து இங்கு விசேட கலந்துரையாடல் நடைபெற்றதுடன், அந்த நடவடிக்கைகளில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்து, அந்த சந்தர்ப்பத்திலேயே தீர்வுகளை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.

கலா ஓயா, கீழ் பாலத்தின் நிர்மாணம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், சுற்றுலாத் துறைக்கு அவசியமான வகையில் தற்காலிக பாலம் ஒன்றை அந்த இடத்தில் அமைக்குமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, நிர்மாணங்களை மேற்கொள்ளும் போது அதன் அவசியத்தை தெளிவாகப் புரிந்துகொண்டும், முறையான சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொண்டும் செயற்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மேலும், பாரிய நிர்மாணத் திட்டங்கள், எந்தவொரு பயனும் இல்லாமல், தேவையான நன்மைகளை அடைய முடியாமல் கைவிடப்பட்டுள்ள விதம் குறித்து இங்கு நினைவு கூர்ந்த ஜனாதிபதி, நிர்மாணங்களை மேற்கொள்ளும்போது, பிரதேசமாக மாத்திரமன்றி ஒரு நாடு என்ற வகையில் கிடைக்கும் பொருளாதார நன்மைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மாவட்டத்தில் மின்சார விநியோகத்தை சீர் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்ததுடன், அதனை விரைவாக நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேலும், நீர் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்தார். மாவட்டத்தில் கிணறுகளை சுத்தம்

செய்யும் பணிகள் திருப்திகரமானதாக இல்லாததால், அதற்காக உள்ளூராட்சி நிறுவனங்கள் அவசரமாக தலையிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மாவட்டத்தில் பெரும்போக நெல் பயிர்ச்செய்கைக்கு விவசாயிகளை தயார்படுத்துவதற்காக தொடங்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்த ஜனாதிபதி, பயிர்ச்செய்கைக்கு ஏற்ற சூழலை விவசாயிகளுக்கு விரைவில் உருவாக்கிக் கொடுக்குமாறும், மாற்று முறைகளில் கவனம் செலுத்தி, கைவிடப்படும் விவசாய நிலங்களை இயன்ற அளவில் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீடுகளை டிசம்பர் 25 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கி நிறைவு செய்யுமாறும், அந்த இழப்பீடுகளை வழங்கும்போது, வனப்பகுதியா? அல்லது சட்டபூர்வமானதா? என்பதை கருத்திற்கொள்ளாமல் இழப்பீடுகளை வழங்குமாறும்,

வனப்பகுதிகளில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளைத் தடுக்க முறையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

கற்பிட்டி போன்ற பகுதிகளில் மண்வளத்தைப் பாதுகாப்பதற்கான விரிவான வேலைத்திட்டத்தின் அவசியம் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கவனம் செலுத்தினார்.

கால்நடைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கிய ஜனாதிபதி, அதற்காக கீழ் மட்டத்தில் துல்லியமான தகவல்கள் தேவை என்றும், அனைத்து கால்நடைப் பண்ணைகளையும் பதிவு செய்வதற்கான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் இங்கு சுட்டிக்காட்டினார்.

அனர்த்த நிலைமை காரணமாக மாவட்டத்தில் 627 வீடுகள் முழுமையாகவும், 20,813 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அந்த மக்களுக்கு அவசியமான இழப்பீடு வழங்குவதை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, மீள்குடியமர்த்தலின் போது அவர்களை அரச காணிகளில் மீள்குடியேற்றுவதற்கு முன்னுரிமை அளிக்குமாறும், அரச காணியை வழங்க முடியாத நிலைமையில், காணி வாங்குவதற்காக வழங்கப்படும் 05 மில்லியன் ரூபாயை அவர்களுக்கு வழங்குமாறும் அறிவுறுத்தினார்.

மேலும், வீடுகள் முழுமையாக சேதமடைந்தவர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும்போது 50 இலட்சம் மதிப்புள்ள வீட்டின் உரிமையைப் பெறும் வகையில், முறையாக இந்த வேலைத்திட்டத்தை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மீன்பிடித் தொழில் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், சேதமடைந்த மீன்பிடி படகுகளை பழுதுபார்ப்பதற்கு உதவி வழங்குவது, இறால் பண்ணைகளுக்கு நியாயமான இழப்பீடு வழங்குவது மற்றும் வங்கிகள் மூலம் சலுகைக் கடன் வேலைத்திட்டம் ஒன்றை செயல்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

சிலாபம் வைத்தியசாலையின் செயல்பாடுகள் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்ததுடன், அடுத்த வாரத்திற்குள் நோயாளிகளை அனுமதிக்கும் பணிகளையும், பல பிரிவுகளின் செயற்பாடுகளையும் ஆரம்பிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் சந்தன அபேரத்ன, சுற்றாடல் பிரதி அமைச்சர் என்டன் ஜயகொடி, வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, புத்தளம் மாவட்ட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமேல் மாகாண செயலாளர் மற்றும் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, புத்தளம் மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *