உள்நாடு

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு கஹட்டோவிட்ட மக்களின் உதவிக்கரம்..!

தமது ஊரில் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்தபின் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரணப்பொருட்கள் சேகரித்து வழங்கியும்,தன்னார்வ தொண்டர் பணியாகவும் உதவிக்கரம் நீட்டிய மனிதநேயமிக்க கஹட்டோவிட்ட வாழ் மக்களின் உபகாரம்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் , மண்சரிவு காரணமாக நாடளாவிய ரீதியிலும் பல்வேறு இடங்களிலும் பல்வேறு விதமாக மிகவும் மோசமான நிலையில் பல இடங்களும் வீடுகளும் , உடமைகளும் பாதிக்கப்பட்ட தோடு பல உயிர் இழப்புக்களையும் ஏற்படுத்தியது.

அந்த வகையில் அத்தனகல்ல ஆற்றுப்பெருக்கால் கஹட்டோவிட்டாவின் தாழ்நிலப்பகுதிகளும் இதன் காரணமாக வெள்ள அனர்த்தததினால் மிகவும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்தும் மூன்று நான்கு நாட்களாக குறித்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தனகல்ல பிரதேச செயலகம் மற்றும் ஊரிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் சமூக சேவை அமைப்புக்கள் , தக்கியாக்கள், ஸாவியாக்கள் மற்றும் சமூக தொண்டு நிறுவனங்கள் , ஊர் மக்கள் , வெளிநாட்டில் வாழும் கஹட்டோவிட்ட சகோதரர்கள் ,தனவந்தர் கள்,வெளியூரை சேர்ந்த நிவாரண உதவிகள் என்பவை மூலம் இந்த அனர்த்தினால் பாதிக்கப்பட்ட கஹட்டோவிட்ட , ஓகடபொள, குரவலான போன்ற பகுதிகளில் பாதிக்கப்பட்ட சுமார் 160 குடும்பங்கள் இதன் மூலம் பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் அடுத்த கட்டமாக எமதூரை விட கடுமையாக பாதிக்கப்பட்ட ஊர்களில் ஒன்றாகிய கெலி ஓயா நகரை மையப்படுத்தி அவர்களுக்கு தேவையான உலர் உணவு பொருட்கள், ஆடைகள், மற்றும் இதர , தண்ணீர் போத்தல்கள் மற்றும் தேவையான பிற பொருட்கள் அனைத்தும் சேகரித்து வழங்கும் முயற்சியில் கஹட்டோவிட்டா அல் பத்றியாவின் 2009 ஆம் ஆண்டு வகுப்பினர் களமிறங்கினார்கள்.

இந்த முயற்சிக்கு ஊர் மக்கள் பேராதரவு வழங்கியதோடு இவர்களுடன் அனைவரும் கைகோர்த்து இதனை வெற்றிகரமாக செய்வதற்கு ஊர் மக்கள் இவர்களுக்கு உதவி புரிந்தார்கள்.

அந்தவகையில் கடந்த 7 ஆம் திகதி ஊர் மக்களிடம் இருந்தும் பல்வேறு சமூக சேவை அமைப்புக்களிடமிருந்தும் வெளிநாட்டில் வாழும் உள்ளூர் சகோதரர்களிடமிருந்தும் பணமாகவும், பொருளாகவும் சேகரிக்கப்பட்ட பெருமளவான நிவாரணப்பொருட்கள் கெலி ஓயா பகுதி வாழ் மக்களுக்கு வழங்குவதற்காக அங்குள்ள பள்ளிவாசல் மற்றும் பொறுப்பாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

மேலும் ஊரில் இருந்து சுமார் 75 பேர்கள் அளவிலான இளைஞர்களை கொண்ட குழுவினர் இந்த நிவாரணப்பொருட்களோடு குறித்த பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று வீடுகளை சுத்தம் செய்து கொடுக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

இதன் இரண்டாம் கட்டமாக கெலி ஓயா பகுதிக்கு வீடுகளை சுத்தம் செய்யும் பொருட்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் அடங்கும் பொதி ஒன்று வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன . ரூபா 1000 பெறுமதியான 680 பார்சல்களை சேகரிக்கும் இந்த வேலைத்திட்டத்துக்கு தற்போது 450 பொதிகளுக்கான பங்கு முதல் சேகரிக்கப்பட்டுள்ளதோடு மிகுதி பங்குகளை வாங்கி ஒத்துழைக்குமாறும் ஏற்பாட்டு குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.

அத்தோடு இன்றிரவும் இந்த பொருட்களுடன் மற்றுமொரு சுத்தப்படுத்தல் பணிக்காக இளைஞர் குழுவொன்று கெலி ஓயா பகுதியை நோக்கி புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கஹட்டோவிட்ட வாழ் மக்கள் ஊர் மக்களோ வெளியூரிலோ இயற்கை அனர்த்தங்களினாலோ வேறும் பாதிப்புக்களினாலோ பாதிக்கப்படும்போது என்றும் அவர்களுக்கு உதவி புரிவதில் முன்னுக்கு நிற்பவர்கள் என்பதனை இது போன்ற உதவி உபகாரங்களை கொண்டு உணர்ந்து கொள்ள முடியும்.

எம். ஆர். லுதுபுள்ளாஹ்
கஹட்டோவிட்ட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *