உள்நாடு

பாகிஸ்தானிலிருந்து மேலுமொரு தொகுதி நிவாரணப் பொருட்கள் இலங்கை வந்தடைந்தது

டிட்வா சூறாவளியால் இலங்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின் பேரில், பாகிஸ்தான் தனது மனிதாபிமான உதவிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

அதன்படி, இலங்கைக்கு மேலதிகமாக 7.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை கடந்த 8ஆம் திகதி லாகூரில் இருந்து கொழும்புக்கு வர்த்தக விமானம் மூலம் இந்த உதவிகளை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கான கூடாரங்கள், பாய்கள் மற்றும் பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இந்தச் சரக்கில் அடங்குகின்றன.

வர்த்தக விமானங்களின் சரக்கு இடவசதியைப் பயன்படுத்தி நிவாரணப் பொருட்களை விரைவாக அனுப்புவதற்கான பொறிமுறையை அந்த அதிகாரசபை உருவாக்கியுள்ளதுடன், இது எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பாகிஸ்தானிலிருந்து இலங்கை நிவாரண உதவிகள் அனுப்பப்பட்டிருந்தன.

அனர்த்த அவசரநிலை தொடங்கியதிலிருந்து, பாகிஸ்தான் தொடர்ச்சியாக அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கி வருகிறது.

பாகிஸ்தான் இராணுவத்தின் தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள், அத்துடன் கடற்படைக் கப்பல்கள் மற்றும் உலங்குவானூர்திகள் இலங்கைக் குழுக்களுடன் இணைந்து மீட்பு மற்றும் வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கு உதவுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *