2025இற்கான வர்த்தக நிறுவன மெய்வல்லுநரில் ஒட்டுமொத்த சம்பியனாகியதுMAS ஹோல்டிங்ஸ்
வர்த்தக மெய்வல்லுநர் சம்மேளனத்தினால் 40ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட 40ஆவது வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரில் ஆதிக்கம் செலுத்திய MAS ஹோல்டிங்ஸ் நிறுவனம் அனைத்துப் பிரிவுகளிலும் முதலிடத்தைப் பிடித்து தொடர்ச்சியாக 2ஆவது ஆண்டாக ஒட்டுமொத்த சம்பியனாகத் தெரிவாகியது.
வர்த்தக மெய்வல்லுநர் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் 80 வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 3000 மெய்வல்லுநர்கள் பங்குகொண்ட 40ஆவது வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடர் கடந்த நவம்பர் மாதம் 14,15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இம்முறை போட்டித் தொடரில் அனைத்துப் பிரிவுகளிலும் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த MAS ஹோல்டிங்ஸ், பெண்கள் (341 புள்ளிகள்), ஆண்கள் (214 புள்ளிகள்), பெண்கள் மாஸ்டர்ஸ் (273 புள்ளிகள்), ஆண்கள் மாஸ்டர்ஸ் (188 புள்ளிகள்) மற்றும் பெண்கள் நவீசஸ் – Novices (49 புள்ளிகள்) ஆகிய ஐந்து பிரிவுகளில் சம்பியனாகத் தெரிவாகியதுடன், 560 புள்ளிகளை ஒட்டுமொத்தமாக எடுத்து 40ஆவது வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரின் சம்பியன்களாகத் தெரிவாகினர்.
இதில் 264 புள்ளிகளை எடுத்த SLT மொபிடெல் 2ஆவது இடத்தையும், 193 புள்ளிகளை எடுத்த ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்தது.
முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற 39ஆவது வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்கள், பெண்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் மாஸ்டர்ஸ் மற்றும் நவீசஸ் ஆகிய பிரிவுகளில் MAS ஹோல்டிங்ஸ் நிறுவனம் ஒட்டுமொத்த சம்பியனாகத் தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.
MAS விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து காட்டி வரும் இந்த ஆற்றல், வயது வரம்புகளைக் கடந்து அனைத்து வகையான போட்டிகளிலும் விளையாட்டின் மீது அவர்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு சான்றாக அமைகிறது.


(மொஹமட் ரிஷாட்)
