அவசர வெள்ள நிவாரண நிதியத்திற்கு ரியாத் வாழ் இலங்கையர்களின் 100,000 ரியால்கள் ( US $ 26,666) பங்களிப்பு
இலங்கையில் அண்மைய தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பாரிய வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக,
ரியாதில் உள்ள இலங்கை தூதரகம் உடனடி நிதி சேகரிப்புக்காக தொடரான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது.
தூதரக வளாகத்தில் இடம்பெற்ற முதலாவது நிகழ்வில், ரியாத் வாழ் இலங்கையர்கள் ஒரு இலட்சம் ரியால்களை ( US $ 26,666) நன்கொடையாக வழங்கியுள்ளது. அந்த நன்கொடைப் பங்களிப்பு சவுதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவர் கௌரவ அமீர் அஜ்வத் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
அண்மைய அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமது ஒத்துழைப்பையும் ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தும் வகையில்,ரியாதில் உள்ள இலங்கை நிறுவனங்கள் ,அமைப்புகள், தனிநபர்கள் மற்றும் ரியாத் இலங்கை தூதரக உத்தியோகத்தர்கள் இந்த நிதிப் பங்களிப்பை வழங்கினர்
நாடு எதிர் கொண்டுள்ள இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில் ரியாத் வாழ் இலங்கையர்களின் பெறுமதியான
பங்களிப்பிற்காக நன்றிகளை தெரிவித்த கௌரவ தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், தாய் நாட்டில் வாழ்கின்ற சகோதர சகோதரிகளுக்கு உதவும் வகையில்
உதவிகள் கோரப்படுகின்ற போதெல்லாம் வெளிநாடுகளில்
வாழ்கின்ற இலங்கையர்கள் எந்தவித தயக்கமும் இன்றி முன்வருவதோடு துரிதமாக செயற்படுவதனை கோடிட்டு காட்டினார்.
மேலும் குறிப்பிடுகையில், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் எப்பேதுமே
தேசத்தின் எதிர்பார்ப்பிற்கான மூலமாகவும் மிகப் பெரும் பலமாகவும் இருந்து வருகின்றனர்.
தேசத்சதை மீள கட்டியெழுப்புவதற்கான இத்தகைய மகத்தான செயற்பாட்டில் பங்கெடுக்குமாறு சவுதி அரேபியாவில் வாழ்கின்ற அனைத்து
இலங்கையர்களிடமும் கௌரவ தூதுவர் வேண்டிக் கொண்டார்.
(இலங்கை தூதரகம்
ரியாத்)
