உள்நாடு

சீனன்கோட்டை நிவாரணப் பொருட்கள் கம்பளையில் பகிர்ந்தளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கென சீனன் கோட்டை பள்ளிச் சங்கத்தினால் சீனன் கோட்டை மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட உலர் உணவு பொருட்கள், உடு துணிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் 03 லொறிகள் மூலம் கண்டி மாவட்டத்திலுள்ள கம்பளை பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டது.

அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள், தண்ணீர் போத்தல்கள், புதிய ஆடை வகைகள் மற்றும் மருந்து உள்ளிட்ட பல இலட்சம் பெறுமதியான அத்தாவசிய பொருட்கள் கம்பளை, கஹடபிடிய பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

சீனன் கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாளர் எம்.எம்.எம். ஷிஹாப் ஹாஜியார் தலைமையில் சீனன் கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாளரும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் நிறைவேற்று குழு உறுப்பினருமான அஷ்ஷெய்க் அல்ஹாஜ் கலீபதுஷ் ஷாதுலி இஹ்ஸானுதீன் அபுல் ஹஸன் (நளீமி), இணைப் பொருலாளர் அல்ஹாஜ் எம்.எம். ஹில்மி மவ்ஸுன், பள்ளிச் சங்க உறுப்பினர்களான அல்ஹாஜ் இஸ்ஸத் ஸவாஹிர்இ அல்ஹாஜ் தஹ்லான் மன்ஸூர், அனர்த்த நிவாரண சேகரிப்பு குழு உறுப்பினர்களான அஷ்ஷேக் பஹ்ரி அனஸ் (நளீமி), அல்ஹாஜ் ரிம்ஸான், ஜெமீல் ஹஸன், மற்றும் ஜாமியா நளீமியா கலாபீட விரிவுரையாளர் அஷ்ஷேக் கலாநிதி அரபாத் கரீம் (நளீமி) மற்றும் அஷ்ஷேக் மக்கீ மன்ஸூர் (நளீமி) உட்பட சீனன் கோட்டை பகுதி முக்கியஸ்தர்கள் இப்பொருட்களை எடுத்துச் சென்று நேரடியாக கையளித்தனர்.

கஹட்டபிடிய பள்ளிவாசல் மற்றும் கம்பளை போதளாபிடிய சாஸ்தராலோக பௌத்த விகாரை, கெலிஓய அனர்த்த நிவாரண மையம் ஆகிய இடங்களுக்கு தலா ஒரு லொரி வீதம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கையளிக்கப்பட்டது.

சீனன்கோட்டை பள்ளிச் சங்க உறுப்பினர்கள் கம்பளை முஸ்லிம் கவுன்ஸிலின் அனர்த்த நிவாரண இணைப்பு மையத்திற்கும் விஜயம் செய்து முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடினர். பாதிக்கப்பட்ட மக்களின் தகவல்களை மேற்படி மையம் பூரணமாக திரட்டி வருகிறது.

முன்வரும் நாட்களில் சீனன்கோட்டை பகுதி மக்களிடம் சேகரிக்கப்பட்ட நிதி மூலம் முடியுமான உதவிகளை மேற்கொள்ள உள்ளதாக சீனன் கோட்ட பள்ளிச் சங்க இணைச் செயலாளர் எம்.எம்.எம். சிஹாப் ஹாஜியார் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித பேதமுமின்றி உதவி செய்ய நேரடியாக விஜயம் செய்த சீனன்கோட்டை பள்ளிச் சங்க உறுப்பினர்கள், நிவாரணக் குழு உறுப்பிணர்கள், பிரமுகர்களுக்கும் மற்றும் தாராள மனதுடன் பொருட்களை வழங்கிய சீனன்கோட்டை மக்களுக்கும் கம்பளை போதளாபிடிய சாஸ்தராலோக பௌத்த விகாரையின் அதிபதி உட்பட பள்ளிவாசல் முக்கியஸ்தர்கள் நன்றி தெரிவித்தனர்.

இயற்கை அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் உடனடியாக சீனன்கோட்டை பள்ளிச் சங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அத்தாவசிய பொருட்களையும் நிதியையும் சேகரிக்கும் பணியை ஆரம்பித்ததோடு இரத்தினக்கல் வர்த்தகர்கள், வெளிநாட்டு இரத்தினக்கல் வர்த்தகர்கள், பரோபகாரிகள், ஆண்கள், பெண்கள், பாடசாலை, பாலர் பாடசாலை, குர்ஆன் மத்ரஸா, அரபுக் கல்லூரி சிறார்கள் என எல்லோரும் மனிதாபிமான உணர்வுடன் சீனன்கோட்டை பள்ளிச் சங்க அனர்த்த நிவாரண பணிக்கு வாரி வழங்கியமை இங்கு குறிப்பிடத்தக்க விஷேட அம்சமாகும்.

சுனாமி அனர்த்தம், வெள்ளம், புயல், வன்செயல் போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட நாட்டு மக்களுக்கு சீனன்கோட்டை பள்ளிச் சங்கம் அவ்வப்போது களமிறங்கி இன, மத, மொழி பேதமின்றி நிவாரண உணதவிகளை செய்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு அப்போதைய அரசினால் ஆரம்பிக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்திற்காக பல கோடி ரூபா நிதியை சேகரித்து வழங்கியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(பேருவளை பீ.எம். முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *