உள்நாடு

அனர்த்த சூழலில் அர்ப்பணிப்புடனும் செயற்பட்ட அனைவருக்கும் நன்றி; பிரதமர் ஹரிணி அமரசூரிய

மக்கள் வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்காக அரசாங்கத்தால் வழங்கக்கூடிய அதி உச்ச நிவாரணங்களையும் ஒதுக்கீடுகளையும் வழங்குவதாகவும், மக்களுக்கு விரைவாகத் தேவையான நிவாரணங்களை வழங்குவதன் மூலம் மக்கள் வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டுவர பிரதேச மட்ட அதிகாரிகளின் வினைத்திறனான ஒத்துழைப்பு அவசியம் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அனர்த்த நிலைமையின் காரணமாக கண்டி மாவட்டத்திற்கு ஏற்பட்ட பாதிப்பினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் மக்கள் வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டு வரும் பணிகள் குறித்துப் பார்வையிட்டதன் பின்னர், கண்டி உடபலாத்த பிரதேச செயலகத்தில், 2025 டிசம்பர் 07ஆம் திகதி நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவக் குழுச் சந்திப்பின்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

கெலிஓயா, உடபலாத்த மற்றும் தொளுவ பிரதேசங்களில் அனர்த்தத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் நிவாரண விநியோகப் பணிகளையும் பிரதமர் பார்வையிட்டார்.

உடபலாத்த மற்றும் தொளுவ பிரதேசங்களை உள்ளடக்கி மின்சாரத் தடங்கல்கள் பெரும்பாலும் வழமை நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், பிரதான வீதிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய கிராமிய வீதிகள் துப்பரவு செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் இதன் போது தெரிவித்தனர்.

பிரதேசத்திற்குத் தேவையான குடிநீர் வழங்கப்பட்டு வருவதுடன், தகவல் தொடர்புத் வழமை நிலைக்கு வந்த பின்னர் வங்கிக் கடமைகளும் உரிய முறையில் சீரமைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சந்திப்பில் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

அனர்த்தத்திற்கு உள்ளான மக்களின் வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் வழமை நிலைக்குக் கொண்டு வர நாமனைவரும் மீண்டெழும் தன்மையுடனும், அர்ப்பணிப்புடனும் செயற்படும் அப்போதே அது சாத்தியமாகும்.

குறிப்பாக, பாதுகாப்பு முகாம்களில் உள்ள குழந்தைகளின் மனநலன் குறித்து நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இத்தகைய பயங்கரமான பேரழிவின் போது மக்களின் உயிர்களைக் காப்பாற்ற முடிந்ததற்கான காரணம், இவ்வாறான அனர்த்த நிலைமைகள் பற்றிய அனுபவம் இருந்தோ இல்லாமலோ, நீங்கள் புரிந்த அர்ப்பணிப்பே ஆகும்.

மிகவும் இக்கட்டான இந்த சந்தர்ப்பத்தில் கடமைக்கு அப்பால் சென்று, அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *