பேரிடரால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கும், ஓய்வூதியக்காரர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்; இலங்கை ஜனநாயக முன்னணி கோரிக்கை
“நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களில் அரச ஊழியர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதனால் அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதியக்காரர்களுக்கும் மீள செலுத்த முடியாத ஒரு மாத சம்பளத்தினை நிவாரணமாக அரசு வழங்க வேண்டும்” என இலங்கை ஜனநாயக முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணங்கள் மற்றும் மாற்று ஏற்பாடுகள் வழங்குவது தொடர்பில் இலங்கை ஜனநாயக முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னணியின் தலைவர் ஏ.பி. கமால்தீன் ஒப்பமிட்டு வெளியிட்டுள்ள அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“அரசாங்க ஊழியர்கள் தங்களது வீடுகள், உடைமைகளை இழந்தும் புயலினாலும் வெள்ளத்தினாலும் பல்வேறு விதமான பாதிப்புகளை எதிர் நோக்கியுள்ளனர். மேலும் அரச காரியாலயங்களுக்கு கஷ்டத்துக்கு மத்தியில் போக்குவரத்து செய்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்காக தங்களை அர்ப்பணித்து வருகின்றார்கள்.
இந்நாடு கடந்த காலங்களில் எதிர்கொண்ட அனர்த்தங்கள், சேதங்களை விட இவ்வருடம் சந்தித்த இயற்கையின் அழிவுகள் அதனால் ஏற்பட்ட சேதங்கள் வரலாற்றில் ஒருபோதும் சந்திக்காத சேதங்களாகவும் அழிவுகளாகவும் கருதப்படுகின்றன. நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்கின்ற மக்கள் இந்த அனர்த்தத்தினால் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அனர்த்தங்களினால் உயிர்கள், வாழிடங்கள், உடமைகளை இழந்து பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்ற மக்களையும் இந்த நாட்டையும் மீளக் கட்டி எழுப்புவதற்காக அரச ஊழியர்கள் ஆற்றி வருகின்ற பணி மகத்தானது. இரவு பகல் மற்றும் மழை வெள்ளம் பாராது அனர்த்தங்களுக்குள் சிக்கி இன்னல்களை அனுபவிக்கின்ற மக்களையும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும் அவர்களது வாழ்வியலை மீள கட்டி எழுப்பவும் அரச ஊழியர்கள் மேற்கொள்கின்ற கடமைகளை இந்த நாட்டு மக்களும் அரசாங்கமும் சாதாரணமாக கருதி விட முடியாது.
இவ்வாறான அழிவுகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு முன் வைத்துள்ள நிவாரணங்களை உரியவர்களுக்கு கொண்டு சேர்ப்பதிலும் பாதிக்கப்பட்ட மக்கள் விடுபடாமல் அவர்களுக்கான உதவிகள் கிடைக்கப்பெற வேண்டும் என்பதிலும் அரச ஊழியர்களின் சேவை மிக முக்கியமானது.
இதனால் இம்மக்களுக்கான துயர் துடைத்து அவர்களுக்குரிய உதவிகளும் நிவாரணங்களும் முறைப்படி சேர வேண்டும் என்பதற்காக பணியாற்றி வருகின்ற அரச ஊழியர்களுக்கும் அரசு வெகுமதிகளையும் நிவாரணங்களையும் வழங்க வேண்டிய கடமை இருக்கிறது.
இதற்கமைய அரச ஊழியர்களுக்கு மீளச் செலுத்த முடியாத ஒரு மாதச் சம்பளத்தை நிவாரணமாக வழங்கி, மன உளைச்சலுக்கும் தியாகங்களுக்கும் மத்தியில் செயலாற்றுகின்ற அரச ஊழியர்களுக்கும் சலுகைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
(றிபாஸ்)
