உள்நாடு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை அவசரமாக கட்டியெழுப்ப வேண்டிய தார்மீக பொருப்பில் அரசாங்கமும் இந்நாட்டு அரச அதிகாரிகளும் உள்ளார்கள்..! -ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

கடந்த 29ம் திகதி ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் மாத்தளை மாவட்டத்தில் மொத்தம் 3834 குடும்பங்களை சேர்ந்த 10927 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 28 மரணமடைந்துள்ளதாகவும் காணாமல் போனோர்களின் எண்ணிக்கை 3 எனவும் முழுமையாக சேதமடைந்த வீடுகளின் மொத்த எண்ணிக்கை 109 எனவும் பகுதியளவும் சேதமடைந்த எண்ணிக்கை மொத்தம் 879 எனவும் மாத்தளை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மொத்த பாதுகாப்பு முகாம்கள் 47 எனவும் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 1562 எனவும் மாத்தளை மாவட்ட அனர்த்த முகாமைத்து பணிப்பாளர் காரியாலயம் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை அவசரமாக கட்டியெழுப்ப வேண்டிய தார்மீக பொருப்பில் அரசாங்கமும் இந்நாட்டு அரச அதிகாரிகளும் உள்ளார்கள் என்பதை தான் வலியுறுத்தி கூறுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்
கடந்த 06ம் திகதி மாத்தளை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கையிலே அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் மாத்தளை மாவட்டத்தில் 11 பிரதேச செயலக பிரிவிகளில் இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை அவசரமாக கட்டியெழுப்பி பாதிக்கப்பட்ட இம்மாவட்டத்தின் அபிவிருத்தி பணிகளை துரிதமாக அபிவிருத்தி செய்திட சம்பந்தபட்ட அரச இயந்திரங்கள் துரிதமாக செயல்பட வேண்டும். இம்மாவட்டத்தில் பல பாடசாலைகளில் பாதிக்கப்பட்ட மக்கள் அகதிகளாக தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். அங்கே மின்சாரம் இல்லை, சுகாதார வசதிகள் இல்லை, குடிபதற்கு குடி நீர் இல்லை, பலர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் சிறுகுழந்தைகள் பல நோய்களுக்கு ஆளாகப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு தேவையான சகல விதமான அடிப்படை வசதிகளையும் பெற்றுக்கொடுத்திட இம்மாவட்டத்திலுள்ள சகலஅதிகாரிகளும் நேரம் காலம் பாராது தமது கடமைகளுக்கு அப்பால் சென்று இவைகளை நிறைவேற்றி கொடுத்திட துரிதமாக செயல்பட வேண்டும். இவ்வாறான அடிப்படைகளை நிறைவேற்றிட மாத்தளை மாவட்டத்தில் இருக்க கூடிய அரச திணைக்களங்களுக்கு ஆளணி பற்றாக்குறையாக இருந்தால் இராணுவத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ள துரிதமாக செயல்படுங்கள். கடந்த 29ம் திகதி இந்த இயற்கை அனர்த்தம் ஏற்பட்டதும் நான் இராணுவ தளபதி உட்பட முப்படை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தபோது தங்களது தலைமைத்துவத்தின் கீழ் இயங்கக் கூடிய இராணுவ, விமான, பொலிஸ் உட்பட சகல பாதுகாப்பு படையினரும் 24 மணி நேரமும் தங்களது உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்கள். எனவே இம்மாவட்டத்தில் அரசாங்க திணைக்களங்களில் ஆளணி பற்றாக்குறை இருப்பின் உடனடியாக இராணுவம் உட்பட பாதுகாப்பு படையினரின் உதவிகளை பெற்றுக்கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் உடனடியாக விவசாயத்தை ஆரம்பிக்க கமல நல சேவை திணைக்களம் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகள் சம்பந்தமாக முழு அட்டவணை ஒன்றை உடனடியாக தயார் செய்து சம்பந்தப்பட்ட திணைக்களத்திடம் ஒப்படைக்கவும். எதிர் வரும் பெரும்போக விளைச்சலுக்கு முன்னால் இப்பட்டியலை தயார் செய்து முற்று பெற செய்யுங்கள். பாதிக்கப்பட்ட 1 ஹெக்டயார் நிலத்திற்கு 1இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதி உதவி வழங்கிட அரசு முடிவெடுத்துள்ளது. பெரும்போக விளைச்சலுக்கு முன்னால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இந்த பணம் சென்றடைய வேண்டும் எனவே காலதாமின்றி இவற்றை துரித படுத்துங்கள்.
பாதிக்கப்பட்டுள்ள இல்லடங்களை இழந்தவர்களுக்கும் வசதிகளை செய்து கொடுக்க அரசு பெருந்தொகையான பணத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்ட வசிப்பிடங்கள் சம்பந்தமாக தங்கள் பகுதி கிராம சேவகர் மூலமாக பிரதேச செயலகங்கள் மூலமாக தங்களது இழப்பீடுகளை தெரிவிக்கவும். கோழி மற்றும் கால்நடை வளர்ப்பில் பாதிக்கப்பட்டோரும் இதோ போன்று தங்களது இழப்புக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து உதவிகளை பெற்றுக்கொள்ளுங்கள்.
மாத்தளை மாவட்டத்தில் 11பிரதேச செயலக பிரிவுகளில் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை உடனடியாக தேவையான அடிப்படை வசதிகளை வழங்கி எதிர்வரும் 16ம் திகதி பாடசாலை திறந்து கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதால் இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை துரிதமாக அபிவிருத்தி செய்திட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு பாடசாலை கட்டிடங்களில் தங்க வைத்திருக்கும் பொதுமக்களை பொறுத்துமான இடங்களில் குடியமர்த்தி பாடசாலைகளை திறந்திட இம்மாவட்டத்திலுள்ள கல்வி அதிகாரிகள் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நான் ஏற்கனவே கூறியபோது இந்த விடயத்தில் ஆளணி பற்றாக்குறையிருப்பின் இராணுவத்தின் உதவியை பெற்றுக்கொள்ளும்படி நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறுகின்றேன்.
இக்கலுந்துரையாடலின் போது பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க பாராளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன ஆகியோர்கள் இம்மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைப்பற்றி ஜனாதிபதியை தெளிவுப்படுத்தியதோடு மத்தியமாகாண ஆளுநர் சரத் அபேகோன் மாத்தளை மாவட்ட செயலாளர் பிரசன்ன மதநாயக்க உட்பட பொலிஸ், இராணுவ, மின்சார, சுகாதார, கமநல, விவசாய, கல்வி, வனபாதுகாப்பு, டெலிகொம், தபால் திணைக்களம், நீர் வளங்கல் வடிகாலமைப்பு சபை உட்பட சகல அரச திணைக்கள அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

(எம்.எஸ்.எம். மஸாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *