உள்நாடு

ஒன்றாகப் பயணித்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்; பாராமன்ற உரையில் ஜனாதிபதி சகலருக்கும் அழைப்பு

அனர்த்தம் மிகவும் வேதனையானது அனர்த்தத்தை எதிர்கொண்டு புதிய பாதையில் ஒன்றாகப் பயணித்து நாட்டைக் கட்டியெழுப்புவோம். நாங்கள் தொங்குபாலத்தில் நடந்து கொண்டிருக்கிறோம் என்றும் மக்களை அமைதியாக இருக்குமாறும் கூற முடியாது, நாங்கள் அவ்வாறானதொரு அரசாங்கம் அல்ல

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி 2026 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முழுமையான உரை

குறிப்பாக, நாம் நிதி அமைச்சு தொடர்பாகவும், குறைநிரப்பு மதிப்பீடுகள் தொடர்பாகவும், பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசரகால நிலையை அமுல்படுத்துவது தொடர்பான விதிகளை இன்று இந்த பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக சமர்ப்பித்துள்ளோம். இந்த அனைத்து விடயங்களிலுடன், நாம் எதிர்கொண்ட அனர்த்தம் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும். நமது நாடு பல சந்தர்ப்பங்களில் இதுபோன்ற பேரழிவுகளைச் சந்தித்துள்ளது.

சில சந்தர்ப்பங்களில் கடற்கரைப் பகுதிகளில் அனர்த்தம் ஏற்படும்போது, மலையகப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களும், ஏனைய மாகாணங்களில் வசிக்கும் மக்களும் கவலையடைகிறார்கள். மத்திய மலைநாட்டில் இந்த அனர்த்தம் ஏற்படும்போது, ஏனைய மாகாணங்களில் உள்ள மக்களும் கவலையடைகிறார்கள் ஆனால், தற்போது, ஒரு சில மாவட்டங்களைத் தவிர, ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் பெரும் எண்ணிக்கையிலானோர் இந்தப் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மக்கள் தமது கவலையை மறைத்து இந்தப் பணியில் பங்களிக்கிறார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில், நம்மோடு வாழ வேண்டிய மக்கள் மறைந்துள்ளனர் என்பதை நாம் அறிவோம். இந்த சந்தர்ப்பத்தில், தமது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் நெருக்கமாக வாழ வேண்டிய மக்களை நாம் இழந்துவிட்டோம். மேலும், சில இடங்களில் ஒட்டுமொத்த கிராமமும் இந்தப் பேரழிவால் அழிந்துள்ளன. இன்னும் சில இடங்களில் குடும்பம் குடும்பமாக பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே, இந்தப் பேரழிவு அண்மைய காலங்களில் நம் நாட்டில் நாம் கண்ட மிகப்பெரிய பேரழிவாகும். நாட்டு மக்களின் இதயங்கள் அதிர்ச்சியால் நிரம்பியுள்ளன. அவர்கள் மிகுந்த வேதனை உணர்வுடன் உள்ளனர். கண்ணீரால் அவற்றை முழுமையாக வெளிப்படுத்த முடியாது. பலர் இறந்துவிட்டனர், அவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிலர் இறந்துவிட்டனர், ஆனால் அவர்களின் உடல்கள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அழிக்கப்பட்டுள்ளன. மக்கள் இழப்பும், காணாமல் போவதும் தொடர்பாக நமது சமூகம் , ஒரு துயரமான வரலாற்றைக் கொண்டுள்ளது. நமது நாடு போர்களாலும், இயற்கை பேரழிவுகளாலும் மக்களை இழந்த துயரமான வரலாற்றைக் கொண்டுள்ளது. ஒருவரின் இழப்பு அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எவ்வளவு துயரமானது என்பதை நாம் அறிவோம்.

நாங்கள் அதை அனுபவித்தவர்கள். யாராவது காணாமல் போனால், அவர்களின் பெற்றோரும் உறவினர்களும் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அவர்கள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் பல ஆண்டுகளாக வாழ்கிறார்கள். மக்கள் காணாமல் போனவர்கள் பற்றிய கவலையுடன் வாழ்ந்து வருகின்றனர். தனிப்பட்ட முறையில், எனக்கும் இதே போன்ற அனுபவம் ஏற்பட்டுள்ளது. ஒரு குடும்பத்திற்கு, உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு, காணாமல் போவது எவ்வளவு கவலையளிக்கிறது. இந்த நேரத்தில், தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை இழந்த வேதனையுடன், கவலையில் வாழ்பவர்கள் உள்ளனர். ஒரு நாடாக, நாம் முதலில் அவர்கள் அனைவருக்கும் நமது இரங்கலைத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு இழந்தவர்களில் யாருடைய உயிரையும் நம்மால் மீண்டும் கொண்டுவர முடியாது. அதுதான் கவலையான உண்மை. ஆனால் ஒரு அரசாங்கமாக, மக்களாக, நமக்கு ஒரு பொறுப்பு உள்ளது. அனைவருக்கும் , இருந்ததை விட சிறந்த ஒரு நாட்டை உருவாக்குவதே நமது எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும்.

எனவே, நம் நாட்டு மக்களுக்கு மீண்டும் இந்த நிலை ஏற்படாமல் இருக்கவும், இதை விட சிறந்த ஒரு நாட்டை உருவாக்கவும் நாம் கடுமையாக உழைக்கத் தயாராக உள்ளோம். இது எம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு என்றும், கைவிட முடியாத இதயப்பூர்வமான அர்ப்பணிப்பு என்றும் நான் நினைக்கின்றேன்.

எந்தவொரு பேரழிவும் சொத்துக்களையும் மனித உயிர்களையும் பறித்துவிடும். ஆனால் இந்த நாட்டு மக்களின் மனிதநேயம் எந்தப் பேரழிவாலும் பறிக்க முடியாத வலுவான குணம், என்பதை இந்த பேரழிவு நமக்கு நிரூபித்துள்ளது. மக்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை வழங்கி வருகின்றனர்.

மேலும், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இந்த மக்களுக்காக இரவு பகலாக கஷ்டப்பட்டு நிதி திரட்டி வருகின்றனர். 1,500 யூனிட் இரத்தம் பற்றாக்குறை இருப்பதாக இரத்த வங்கி அறிவித்தபோது, 20,000 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது. அதுதான் எந்த பேரிடரிலும் அழிக்க முடியாத நமது நாட்டின் மனிதநேயம். உலக வரலாற்றில் வீழ்ச்சியடைந்த எந்தவொரு நாட்டையும் கட்டியெழுப்புவதில் மக்களின் இலட்சியமும் துணிச்சலும் முக்கிய காரணிகளாக இருந்துள்ளன. இரண்டாம் உலகப் போரில் ஏராளமான உயிர்கள் கொல்லப்பட்டபோது, மக்களின் துணிச்சல், அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் உலகிற்கு அமைதியைக் கொண்டு வந்தன. முன்னேற்றத்தின் விளிம்பில் இருந்த நாடுகளின் பொருளாதாரப் பாதை, உத்திகள் முக்கியமானவை அதேபோன்று அந்த மக்களின் துணிச்சலான ஈடுபாடு முக்கிய காரணியாக மாறியது. ஜப்பானும் சீனாவும் இந்த வழியில் தான் மீண்டும் எழுச்சிபெற்றன. மக்களின் நம்பிக்கையும் தைரியமும் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் நம்மை வழிநடத்தும் என்பதை நான் கூற விரும்புகிறேன். மேலும், இந்த பேரழிவு ஏற்பட்டபோது, இந்த பேரழிவிலிருந்து நமது மக்களை மீட்க முப்படையினரும் பொலிஸாரும் கடுமையாக உழைத்தனர்.

கலாவெவ பேருந்தில் இருந்த சுமார் 70 பேர் எப்போது தமது உயிரை இழப்போம் என்று பீதியில் இருந்தனர். சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வீட்டிலிருந்து கொண்டு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் என்று பேஸ்புக்கில் எழுதினர். ஆனால் அந்த நேரம், எமது கடற்படையினர் அந்த மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்ததனர். மிகவும் கடினமான சூழ்நிலையில், அவர்கள் அந்த வெள்ளநீரைத் தோற்கடித்து மக்களை காப்பாற்ற முயற்சித்தனர். இதன் விளைவாக, பேருந்தில் இருந்தவர்கள் ஒரு கூரையின் மீது ஏற்றப் வரப்பட்டனர். பின்னர், மிகக் குறுகிய நேரத்தில், பேருந்து அடித்துச் செல்லப்பட்டது. அந்த நேரத்தில், கடற்படை பயணித்த படகும் இயங்க முடியாததாகிவிட்டது. இறுதியில், அந்தப் படகில் இருந்த கடற்படை அதிகாரிகளும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அந்தக் கூரையில் ஏற வேண்டியிருந்தது. அவர்கள் 18 மணி நேரத்திற்கும் மேலாக ஒரு பாரிய வெள்ளத்தில் ஆஸ்பெஸ்டஸ் கூரையில் சுமார் 70 பேர் உயிர் பிழைக்க தைரியம் அளித்தனர்.

மிகவும் கடினமான முயற்சிக்குப் பிறகு, வெள்ளத்தில் இருந்து மீண்டு வந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு ஒருவர் இறந்தார். எங்களிடம் திறமையான முப்படையினரும் பொலிஸாரும் உள்ளனர். வித்திகுலி பண்ணையில் சிக்கிய குழுவை மீட்கச் சென்ற இரண்டு படகுகளும் பழுதடைந்தன. இறுதியாக மறுநாள் அதிகாலையில் அவர்கள் மீட்கப்பட்டனர். நொச்சியாகம பகுதியில் இரண்டு இடங்களில் சிலர் சிக்கி இருந்தனர். அனுராதபுர நகரில் மரங்களில் ஏறி இருந்தனர். சில இடங்களில், தென்னை மரங்களில் ஏறி தங்கள் உயிரைக் காப்பாற்ற முயன்றனர். நமது விமானப்படையினரும் மிகவும் வீரமிக்க செயல்கள் மூலம் அவர்களை மீட்டனர். அதன் பிறகு, மாவில்ஆறு அணை இடியும் அபாயம் உள்ளதாக எமக்குத் தகவல் வருகின்றன.

நமது சேருவல தேரர் நள்ளிரவு 12 மணிக்கு எனக்கு அழைப்பை எடுத்திருந்தார். நமது அரசியல் அதிகாரிகள் ஏற்கனவே அதில் தலையிட்டுக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், இராணுவம், பொலிஸார் மற்றும் முற்போக்கான மக்கள் மீண்டும் தலையிட்டு ஆயிரக்கணக்கானவர்களை சேருவல விகாரைக்கு அழைத்துச் சென்றனர். அந்த நடவடிக்கைகளின் போது, மிகவும் துணிச்சலான விமானப்படை அதிகாரி ஒருவர் இறந்தார்.

அவர்கள், இறக்கும் தருவாயில் கூட மற்றவர்களைப் பற்றி நினைத்துக் கொண்டே இறந்தவர்கள். முட்டாள்தனமாகப் பேசும் இந்த மக்களின் கதைகளால் அன்றி, அவ்வாறானவர்களின் கதைகளாலேயே வரலாறு எழுதப்படுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மேலும், சுண்டிக்குளம் பகுதியில் ஒரு கழிமுகத்தை வெட்டும் மிகவும் கடினமான மற்றும் அபாயகரமான பணியை மேற்கொண்ட ஐந்து கடற்படை அதிகாரிகள் அலைகளில் சிக்கி காணாமல் போனார்கள். பெரும் முயற்சிகள் செய்தபோதிலும், இன்னும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும், தர்மதாச என்ற பொலிஸ் அதிகாரி பணியில் இருந்தபோது இந்த பேரழிவில் இறந்தார். அவர்கள் தங்கள் கடமையைச் செய்ய இரவும் பகலும் கடுமையாக உழைத்தனர். மேலும், சிகிரியாவில் மின்சார சபையில் பணிபுரியும் அனுருத்த குமார, மக்களுக்கு மின்சாரத்தை சீர்செய்யும் பணியில் தனது உயிரை இழக்க வேண்டி ஏற்பட்டது.

எனவே, இந்த அனர்த்தத்தின் போது, முப்படைகள், பொலிஸார், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் தூக்கமின்றி, மிகவும் கடினமான மற்றும் மிகப்பாரிய பணியைச் செய்தனர்.

பிரதேச செயலாளர் தனது பகுதியில் யாரும் சிக்கலில் மாட்டக்கூடாது என்று நினைக்கிறார். கிராம சேவையாளர் தனது பகுதியில் யாரும் சிக்கலுக்கு உள்ளாகக் கூடாது என்று நினைக்கிறார்.

மாவட்டச் செயலாளர் தனது மாவட்டத்தில் யாரும் சிக்கலில் விழக் கூடாது என்று நினைக்கிறார். இத்தகைய அனர்த்த நேரத்திலும் கூட, குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்தவர்கள் அழகாக உடையணிந்து, நறுமணம் பூசிக்கொண்டு மாவட்ட செயலாளரை கேள்வி கேட்கிறார். இந்தப் அனர்த்தத்தில் அரச சேவை ஆற்றிய பங்கிற்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர்களில், உயிர்களைக் காப்பாற்றுவதில் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்கு சுகாதார சேவைக்கும் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

மேலும், நமது நாட்டில் ஏற்படும் எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் எப்போதும் மிகுந்த கவலையுடன் இந்தப் பணியில் தலையிட்டுள்ளனர். அதற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். எங்களிடம் மீட்பு கருவிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மிகக் குறைவு. ஆனால் நமது அயல்நாடு மற்றும் நட்பு நாடுகள் அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஹெலிகொப்டர்கள், படகுகள், பல்வேறு இயந்திரங்கள், பயிற்சி பெற்ற துருப்புக்கள் மற்றும் பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர்களின் குழுக்களை அனுப்பியுள்ளன.

இந்தப் அனர்த்தத்திலிருந்து இலங்கையை மீட்டெடுக்க உதவிய அனைத்து நட்பு நாடுகளுக்கும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தினோம். அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின்படி, ஜனாதிபதி விரும்பினால், முழு நாட்டிலும் அனர்த்த நிலைமையை அறிவிக்க முடியும். இல்லையெனில், பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 06 ஆம் திகதி அனர்த்த முகாமைத்துவ சபை கூட்டப்பட்டது.

நான் அப்போது கலந்து கொள்ளவில்லை என்றாலும், இந்தப் அனர்த்தத்திற்குப் பிறகு சபை கூடியபோது எதிர்க்கட்சித் தலைவர் கலந்து கொண்டார் என்பதை நான் கூற விரும்புகிறேன். இந்தப் அனர்த்த முகாமைத்துவச் சட்டம் பலவீனமானது, எனவே அதைத் திருத்த வேண்டும் என்பதே அன்று எமது முடிவாக இருந்தது. அனர்த்த முகாமைத்துவச் சட்டம் அத்தகைய சவாலை எதிர்கொள்ள ஒரு வலுவான சட்டம் அல்ல.

‘அனர்த்த முகாமைத்துவத் திட்டத்தைத் தயாரிப்பது அனைத்து அமைச்சுகளினதும், அரச திணைக்களங்களினதும் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களினதும் கடமை ஆகும் .’ ஆனால் அத்தகைய திட்டம் எதுவும் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. அதன்படி, இந்த நேரத்தில் அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் செயல்படுதல் பலவீனமாக உள்ளது என்றும், இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள முடியாது என்றும் நாங்கள் நினைத்தோம்.

பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் இரண்டாவது அதிகாரத்தின் கீழ் செயற்படுவதே மிகவும் வலுவானது. அதனால்தான் எதிர்க்கட்சி அவசர கால சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரியது. அதனால்தான் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்தோம். அதைத்தான் இன்று நிறைவேற்ற கேட்டுக்கொள்கிறேன்.

ஏனென்றால் இது போன்ற ஒரு அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க சாதாரண சட்டம் மாத்திரம் போதாது. இது போன்ற ஒரு அனர்த்தத்தில், சாதாரண சட்டத்தை விட உயர்ந்த சட்டம் நமக்குத் தேவை. அதன்படிதான், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தை நியமிக்க முடியும்.அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தேவையான உபகரணங்கள் மற்றம் அதிகாரிகளை ஏனைய இடங்களுக்கு அனுப்ப முடியும். அதன்படி, மிகவும் பொருத்தமான சட்டமூலம் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் என்று நாங்கள் முடிவு செய்தோம். எதிர்க்கட்சிகளிடமிருந்து கிடைத்த ஆதரவிற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

ஆனால், இந்தப் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் ஜனநாயக உரிமைகளை மீற மாட்டோம், என்னையோ அல்லது எங்கள் அமைச்சர்களையோ விமர்சிப்பதைப் பற்றி நாங்கள் கவனத்தில் கொள்ள மாட்டோம். அவதூறுகளைப் பற்றி பேசவே தேவையில்லை. அவற்றுக்கு சாதாரண சட்டங்கள் உள்ளன. ஆனால் மக்களை பயமுறுத்தவும்,தவறாக வழிநடத்தவும்,அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிடத்தில் மோதல் சூழ்நிலையை உருவாக்க எவரேனும் முயற்சித்தால், அது இந்த அனர்த்தத்திரிலிருந்து மீள்வதற்கான திட்டத்தைத் தடுத்தால், அந்த விடயத்தில் மாத்திரமே நாம் இந்தச் சட்டங்களைப் பயன்படுத்துவோம்.

கம்பளையில் 1000 பேர் இறந்ததாக ஒரு எம்.பி. கூறினார். பாராளுமன்ற சிறப்புரிமைகள் என்ற பெயரில் அவர்கள் இங்கே கூறினாலும், வெளியே சென்று அவ்வாறு கூறினால், வழக்குத் தொடுப்பார்கள். அவ்வாறு கூற முடியாது. கம்பளையில் முஸ்லிம்களே பெரும்பான்மையானவர்கள். அவர்கள் தங்களுக்கு கவனக் குறைவு இருப்பதாகவே நினைக்கிறார்கள். அவற்றுக்கு என்றால் இந்தச் சட்டம் பயன்படுத்தப்படும். இந்த அனர்த்தத்திலிருந்து மீள நமக்கு மிகவும் அமைதியான மற்றும் விவேகமான தலையீடு தேவை.

இந்தப் பணத்தை பிரதேச செயலாளர்களுக்கு விடுவிக்க முடியுமா என்பது குறித்து பாராளுமன்றத்தில் ஒரு விவாதம் நடந்தது. அரச சேவை செயலிழந்துவிட்டதாக சிலர் கூறத் தொடங்கினர். அரச அதிகாரிகள் பயப்படுகிறார்கள் என்று கூறத் தொடங்கினர். இவை பொய்கள். இந்தப் பணியில் நல்லெண்ணத்துடன் தலையிட்ட ஒவ்வொரு அதிகாரியையும் நாங்கள் பாதுகாப்போம் என்று இந்த நேரத்தில் நான் தெரிவிக்கிறேன்.

நாங்கள் ஒரு தளர்வான அதிகாரத்தை வழங்கினோம். இலங்கையில் முதல் முறையாக, ஒரு பிரதேச செயலாளருக்கு 500 இலட்சம் வரை செலவிட அதிகாரம் வழங்கப்பட்டது. ஒரு மாவட்ட செயலாளருக்கு 1000 இலட்சம் வரை செலவிட அதிகாரம் வழங்கப்பட்டது. ஒரு அமைச்சின் செயலாளருக்கு 1000 இலட்சம் வரை செலவிட அதிகாரம் வழங்கப்பட்டது. ஏனென்றால் நாங்கள் இந்த அதிகாரிகளை நம்புகிறோம். இந்த பேரழிவிலிருந்து அவர்கள்

சட்டவிரோதமாக இலாபம் ஈட்டுவார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை. நாங்கள் அவர்களை வலுவாக நம்புகிறோம்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை நாங்கள் அதிகரித்துள்ளோம். பிரதமர் தலைமையிலான குழு 76,000 பேரை அரச பணியில் இணைக்க முடிவு செய்துள்ளது. அவர்களில் பன்னிரண்டாயிரம் பேர் பட்டதாரிகள். நாங்கள் இப்படி முன்னேறிக் கொண்டிருந்த நேரத்தில் இந்த அழிவு ஏற்பட்டது. இது எம்மைப் பாதிக்கிறது.

சிலர், நாங்கள் இயன்றளவு வரி அறவிட்டே இந்த வருமானத்தை ஈட்டியதாகச் சொன்னார்கள். ஆனால் 2024 இல் இருந்த வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. வாகன இறக்குமதியைத் தவிர, 2025 ஆம் ஆண்டிற்கு வேறு எந்த மேலதிக வரிகளும் விதிக்கப்படவில்லை. சர்வதேச நாணய நிதியம் முந்தைய அரசாங்கத்திற்கு 2025 ஆம் ஆண்டிற்கான வருமான இலக்காக 15.2% ஐ வழங்கியிருந்தது. ஏற்கனவே உள்ள வரிகளுக்கு மேலதிகமாக, இதை அடைவதற்காக ஏனைய வரிகள் முன்மொழியப்பட்டன. டிஜிட்டல் சேவை வரி மற்றும் சொத்து வரி கடந்த ஏப்ரல் முதல் அமுல்படுத்தப்படவிருந்தன. ஆனால் 30% ஆக நிர்ணயிக்கப்பட்ட டிஜிட்டல் சேவை வரியை 15% ஆகக் குறைத்தோம்.

இந்த வரி விதிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை ஒத்திவைக்கப்பட்டது, எனவே அது 2025 இல் நடைமுறைக்கு வரவில்லை. 2027 இல் சொத்து வரியை பரிசீலித்து வருவதாக சர்வதேச நாணய நிதியத்திடம் தெரிவித்துள்ளோம். புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. ஏற்கனவே உள்ள வரிகள் நீக்கப்பட்டன.

மிகச் சிறந்த வரி நிர்வாகத்தை நாங்கள் நிறுவியிருப்பதே எமது பலம். அதனால்தான் எங்கள் எதிர்பார்ப்புகளை விட அதிகமான வருமானத்தைப் பெற முடிந்தது. இந்த வழியில் நாங்கள் கட்டமைத்து வரும்போதுதான் இந்த பேரழிவை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களை பொறுமையாக இருக்கச் சொல்ல முடியுமா? நாங்கள் அவ்வாறான அரசாங்கம் அல்ல.

நம்மால் முடியாது. பொருளாதார நெருக்கடியின் போது, பொருளாதாரத்தில் எடுக்கப்பட்ட ஒரு சிறிய அல்லது தவறான முடிவு பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது. ஒரு சிறிய தவறு கூட இந்தப் பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இதன் ஆபத்தான விளைவுகள் என்னவென்றால், 2022 இல் அரச வருமானம் 8.8% ஆக இருந்தது. இது இலங்கையின் வரலாற்றில் மிகக் குறைந்த வருமானமாக மாறியது.

எனவே, இவை எதுவும் பொருளாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்தும் திடீர் தூண்டுதலின் பேரில் எடுக்கப்பட்ட முடிவுகள் அல்ல. நிதி அமைச்சு உட்பட சிரேஷ்ட அதிகாரிகளுடன் பல நாட்கள் கலந்துரையாடிய பிறகு எடுக்கப்பட்ட முடிவுதான் இது. புதியவர்கள் இந்த வரவுசெலவுத்திட்டத்திற்குப் பதிலாக புதிய வரவுசெலவுத்திட்டத்தை தயாரிக்குமாறு கேட்கிறார்கள். நாங்கள் அதற்குத் தயார் இல்லை.

இது வெறும் தரவுகளின் தொகுப்பு மட்டுமல்ல. ஒரு குறிப்பிட்ட பொருளாதார உத்தியை நிறைவு செய்யும் நோக்கத்துடன் இந்த வரவுசெலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. நாங்கள் பின்வாங்க மாட்டோம். இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தைக் கேட்கிறார்கள். நாங்கள் அதைக் கொண்டுவரவில்லை. 2026 ஆம் ஆண்டிற்கான நாங்கள் முன்வைத்த வரவுசெலவுத்திட்ட ஆவணம், நமது நாட்டிற்கான நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்காக தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

2026 ஆம் ஆண்டிற்கான எமது வரவுசெலவுத்திட்டம், எங்கள் நாட்டிற்கான நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்காக தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். நாங்கள் அதை நிறுத்த மாட்டோம். ஆனால் அந்த வரவுசெலவுத்திட்ட ஆவணத்தில் சில பகுதிகளை இந்த அனர்த்தத்திற்காக பயன்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். வீதி அபிவிருத்தியை எடுத்துக் கொண்டால், ஒதுக்கப்பட்ட பணத்தில் 40 பில்லியனை இந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட வீதிகளின் புனர்நிரமாணத்திற்கு பயன்படுத்த முடியும்.

ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு குறிப்பிட்ட தொகையை பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீதி புனர்நிரமாணத்திற்காகப் பயன்படுத்துமாறு மாகாண சபைகளுக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். பொருளாதார உத்திகளின் வெற்றியைப் பேணும் அதே வேளையில், இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்க திட்டமிட்டுள்ளோம்.

அவற்றுடன், இந்த மக்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும். முதல் கட்டமாக, உலர் உணவுப் பொருட்களுக்கு வழங்கப்படும் தொகையை அதிகரித்தோம். மேலும், இன்று 50 பில்லியன் ரூபாய்க்கான குறைநிரப்பு மதிப்பீட்டை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். அந்த 50 பில்லியனுக்கு கடன் எல்லையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே ஒதுக்கிய நிதிகள் கிடைக்கின்றன. அதன்படி, 50 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு முன்வைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர்களுக்கு அவர்களின் பகுதிகளில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், நிதி அனுப்ப நாங்கள் தயாராக உள்ளோம் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளோம். அதன்படி, கிட்டத்தட்ட 10,500 மில்லியன் ஏற்கனவே மாவட்ட செயலாளர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இலங்கையில் இதற்கு முன்பு நடந்ததில்லை.

இன்று நாம் 50 பில்லியன் குறைநிரப்பு மதிப்பீட்டை நிறைவேற்றித் தருமாறு கேட்கிறோம். அதுபோன்று, நம்மிடம் 22.2 பில்லியன் உள்ளது. அதாவது அடுத்த 25 நாட்களில் 72.2 பில்லியன் செலவிட வேண்டும். நாம் அந்தப் பணத்தை இவ்வாறுதான் செலவிடுவோம்.

அவசர அனர்த்த நிலைமை முடிவுக்கு வந்த நிலையில்,அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களின் வீடுகளை சுத்தம் செய்து மீளக்குடியேறுவதற்கு ஏற்றதாக மாற்ற ரூ. 25,000 வழங்கப்பட்டுள்ளது. அந்த தொகையை அனைவருக்கும் வழங்கி வருகிறோம். முன்பு, ரூ. 10,000 மட்டுமே வழங்கப்பட்டது, அதுவும் திருப்பிச் செலுத்தும் அடிப்படையில். பாதிக்கப்பட்ட வீடுகளில் மீளக்குடியேறுவதற்கான அத்தியாவசிய சமையலறை உபகரணங்களை வாங்குவதற்கு, உரிமையாளரைப் பொருட்படுத்தாமல், ஒரு முறை வழங்கப்படும் மானியமாக ஒரு வீட்டிற்கு ரூ. 50,000 வும் நாங்கள் வழங்குகிறோம்.

மேலும், மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் இருக்கும் குடும்பங்களுக்கு வீடு திரும்ப 3 மாத காலத்திற்கு ரூ. 25,000 வழங்கவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதை 6 மாதங்களுக்கு நீடிக்கவும் எதிர்பார்க்கிறோம்.

அதன் பின்னர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு வீடுகளை இழந்த இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வாடகை வீட்டிற்குச் செல்வதற்காக மாதாந்தம் ரூ. 50,000 உதவித்தொகை வழங்கப்படும். இது அவர்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்த உதவும் வகையில் தொடர்ந்து 03 மாதங்களுக்கு வழங்கப்படும்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நெல், தானியங்கள் மற்றும் சோளம் போன்றவற்றுக்கு ஹெக்டெயாருக்கு 1,50,000 உதவித்தொகை வழங்கப்படும். இந்த நெல் வயல்களை மீண்டும் பயிரிடுவதே எமது எதிர்பார்ப்பு. சுமார் 1,60,000 ஹெக்டெயார் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, ஒரு மாதத்திற்கும் குறைவான பயிருக்கு ஹெக்டெயாருக்கு 40,000 மட்டுமே வழங்கப்படும். இந்த 1,60,000 ஹெக்டெயார்களையும் மீண்டும் பயிரிட முடிவு செய்துள்ளோம். அதற்காக விவசாயிகளுக்கு தேவையான நிவாரணத்தை வழங்குவோம்.

மேலும், இதுபோன்ற ஒரு அனர்த்தத்தில், நாங்கள் பொதுவாக மரக்கறிகளைப் பற்றி யோசிப்பதில்லை. மரக்கறி விளைச்சலுக்கு ஹெக்டெயாருக்கு ரூ. 2 இலட்சம் உதவித்தொகை வழங்கப்படும். இந்த பணம் இன்று முதல் ஒதுக்கப்படும். ஆனால் எங்கள் அமைச்சின் அதிகாரிகள் மீண்டும் பயிரிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த வீழ்ச்சி அடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பு. “ஐயோ கடவுளே” என்று கைகளை கன்னத்தில் வைத்துக்கொண்டு நாம் உட்கார்ந்து கொள்ளக்கூடாது, மாறாக இந்த நாடு வீழ்ச்சியடைந்த இடத்திலிருந்து மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்கு விவசாயம்தான் முக்கிய காரணம். எனவே, விவசாயிகள் மீண்டும் பயிர்ச்செய்கையைத் தொடங்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அதற்காக அவர்களைத் தயார்படுத்துமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறோம். பேரிடரால் பாதிக்கப்பட்ட கால்நடை வைத்திய அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு கால்நடை வளர்ப்புப் பண்ணையையும் மீண்டும் தொடங்க தலா ரூ.2 இலட்சம் வழங்க முடிவு செய்துள்ளோம்.

மேலும், பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகமும், அது சிறியதாக இருந்தாலும் சரி, நடுத்தரமாக இருந்தாலும் சரி, பாரியதாக இருந்தாலும் சரி, தமது வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க ரூ. 200,000 உதவித்தொகை வழங்கப்படும். கவலைப்பட்டுக் கொண்டிருப்பதால் எந்த அர்த்தமும் இல்லை. இவற்றை நாம் மீளமைக்க வேண்டும். மேலும், இன்று மத்திய வங்கி அந்த வர்த்தகர்களுக்கு வங்கி மட்டத்தில் சில நிவாரணங்களை வழங்க ஒரு சுற்றறிக்கையை வெளியிடுகிறது. காப்புறுதி நிறுவனங்களுடன் நாங்கள் கலந்துரையாடி காப்புறுதி கொடுப்பனவுகளை செலுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

மேலும், இந்த 2026 வரவுசெலவுத்திட்டத்தில், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களுக்கு கடன் வழங்குவதற்காக 80,000 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளோம். அந்த நிதியில் பெரும்பகுதியை இந்த வீழ்ச்சியடைந்த தொழில்களை மீட்டெடுக்க கடன் உதவி வழங்க பயன்படுத்துமாறு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். அப்போது இந்த சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும். மேலும், பதிவு செய்யப்பட்ட மீன்பிடி படகுகள் முழுமையாக சேதமடைந்தால், அந்த படகுகள் ஒவ்வொன்றிற்கும் 04 இலட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்க திட்டமிட்டுள்ளோம்.

மேலும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களைப் பெறுவதற்காக திறைசேரியிலிருந்து ரூ.15,000 உதவித்தொகை வழங்கவும், மேலதிகமாக, ஜனாதிபதி நிதியத்திலிருந்து ரூ.10,000 உதவித்தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், நிவாரணம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை பிள்ளைகளுக்கு ஏற்கனவே ரூ.6,000 உதவித்தொகை வழங்கி வருகிறோம், இது அந்தக் கொடுப்பனவைப் பாதிக்காது. இதன் மூலம், ஒரு பாரிய பேரழிவை எதிர்கொள்ளும் அளவுக்கு எங்கள் கையிருப்புக்களை வலுப்படுத்தியுள்ளோம். தற்போதைய பொருளாதாரத்திற்கு ஏற்ப இந்த நிவாரணங்களை மக்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம்.

அனர்த்தத்தின் தாக்கத்தால் சேதமடைந்த வர்த்தகக் கட்டிடங்களுக்கு ஒரு அலகுக்கு அதிகபட்சமாக 50 இலட்சம் வரை இழப்பீடு வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். அனர்த்தத்தின் தாக்கத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு புதிய வீடு கட்ட 50 இலட்சம் வழங்கப்படும். காணி இல்லையென்றால், அரச நிலம் வழங்கப்படும். காணி வழங்க காணி இல்லையென்றால், வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகைக்கு கூடுதலாக, காணியைப் பெற 50 இலட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

அனர்த்தத்தின் தாக்கத்தால் பகுதியளவு சேதமடைந்த வீடுகளை புனர்நிரமாணம் செய்ய அதிகபட்சமாக ரூ.25 இலட்சம் வழங்க எதிர்பார்க்கிறோம். ரூ.10, 15, 20, 25 இலட்சம் என 04 பிரிவுகளின் கீழ் அந்தப் பணத்தை வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். அனர்த்தத்தினால் ஏற்பட்ட உயிர் இழப்புக்காக அவர்களின் உறவினர்களுக்கு ரூ.10 இலட்சம் உதவித்தொகை வழங்கவும் முடிவு செய்துள்ளோம். 25 ஆம் திகதி ரூ.72.2 பில்லியன் நிதியுதவி வழங்கும் பணி செயல்படுத்தப்பட உள்ளது. இன்று 2026 வரவு செலவுத்திட்ட ஆவணத்தை நிறைவேற்றினோம். இது ஜனவரி முதல் செயல்படுத்தப்படும். அந்த வரவு செலவுத்திட்டத்தில் ரூ.500 பில்லியன் குறைநிரப்பு மதிப்பீட்டைக் கொண்டு வர எதிர்பார்க்கிறோம்.

நாங்கள் ஏற்கனவே IMF இன் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்குள் செயல்பட்டு வருகிறோம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த ஒப்பந்தங்கள் சர்வதேச அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்ட ஒப்பந்தங்கள். அந்த ஒப்பந்தங்களை மாற்ற ஒரு மறுஆய்வு தேவை. இப்போது நாங்கள் 5 ஆவது மீளாய்வை முடித்து ஒரு அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாட்டை எட்டியுள்ளோம். இது 15 ஆம் திகதி அவர்களின் பணிப்பாளர்கள் குழுவிற்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது நிலைமை வேறுபட்டது. நாங்கள் முன்பு எட்டிய அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாட்டிலிருந்து ஒரு வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

டிசம்பர் மாத கூட்டத்தை ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்க சர்வதேச நாணய நிதியம் எங்களுக்கு பரிந்துரைத்துள்ளது. அதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். டிசம்பரில் எங்களுக்கு 342 பில்லியன் டொலர் தொகை தவணையாக கிடைக்கவிருந்தது. அந்த தவணையை அதிகரிப்பது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம். அந்த தவணையை அதிகரிக்க எங்களுக்கு கலந்துரையாடலும் நேரமும் தேவை.

இருப்பினும், உடனடி டொலர் தேவைக்கு நிதி வழங்க சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 200 மில்லியன் டொலர் நிவாரணம் கோரியுள்ளோம். அவர்கள் அதற்கு சிறப்பாக பதிலளிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்பத் தேவையான நிதியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கியுடனும் நாங்கள் கலந்துரையாடியுள்ளோம்.

பாராளுமன்றத்தை ஜனவரி 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டத்தின் கீழ் பாராளுமன்றத்தைக் கூட்ட பிரதமருக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி, 19 ஆம் திகதி, மேற்படி குறைநிரப்பு மதிப்பீடுகளை நிறைவேற்றுமாறு பாராளுமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.

நமது உட்கட்டமைப்பு வசதியில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்க வேண்டும். டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் 30 பாலங்களின் கட்டுமானத்தை முடிக்க திட்டமிட்டுள்ளோம். நமது பாதை கட்டமைப்புக்கு இடையேயான இணைப்பை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். வீதி அபிவிருத்தி அதிகார சபை ஏற்கனவே இதற்காக மிகவும் முறையான திட்டத்தை தயாரித்துள்ளது. அதன்படி, இந்த வீழ்ச்சியடைந்த வீதிக் கட்டமைப்பை மேம்படுத்தும் திறன் எங்களிடம் உள்ளது.

மேலும், தடைப்பட்டதில் சுமார் 87% வீதமான மின்சார இணைப்புகளை மீளமைக்கவும் எம்மால் முடிந்தது. மஹியங்கனை 132V மின்மாற்றி அமைப்பின் வீழ்ச்சி காரணமாக, அம்பாறை, மட்டக்களப்பு, மஹியங்கனை போன்ற பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சார விநியோகத்தை மீட்டெடுக்க நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். மேலும், தகவல் தொடர்பு மற்றும் நீர் விநியோக கட்டமைப்புகளை மீட்டெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த வழியில், பேரழிவிற்குள்ளான மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதே எங்கள் முதன்மைத் தேவையாக மாறியுள்ளது. மேலும் நாம் பொருளாதாரத்தை மீண்டும் தொடங்க வேண்டும். நாட்டிற்கு நாம் பொறுப்பு. இதற்காக இரவும் பகலும் திட்டங்களை வகுத்து உழைக்கிறோம். மேலும் மீள் கட்டமைப்புக்கான ஜனாதிபதி செயலணியை நிறுவ நாங்கள் எதிர்பார்க்கிறோம். நிதி திரட்ட அந்த ஜனாதிபதி செயலணியின் கீழ் ஒரு குழு உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிதி கடத்தல்காரர்களால் செலவிடப்படுகிறது என்று இந்த பாராளுமன்றத்தில் கூச்சலிடுவதை நான் பார்த்தேன். இல்லை. இந்த நிதியத்தின் கணக்கு இன்னும் திறைசேரிச் செயலாளரின் பெயரில் உள்ளது. பணம் ஒருங்கிணைந்த நிதியில் வரவு வைக்கப்படுகிறது. இந்தப் பணத்தை நிதி திரட்டும் குழு அல்ல, பாராளுமன்றமே செலவிட வேண்டும்.

ஆனால் நாங்கள் ஒரு சட்டப்பூர்வ நிதியத்தை உருவாக்குகிறோம். நிதி நிர்வாகச் சட்டத்தின்படி, நீங்கள் விரும்பியபடி நிதியத்தை உருவாக்க முடியாது. ஒரு நிதியத்தை நிறுவுவதற்கு பாராளுமன்றச் சட்டம் தேவை என்று ஒரு புதிய சட்டம் வந்துவிட்டது. சுனாமி நிதியத்திற்கு என்ன நடந்தது என்பதைப் பார்த்த பிறகு இதுபோன்ற சட்டங்கள் இயற்றப்பட்டன. வரலாற்றில், இந்த நாட்டில் நிதிகள் மிகவும் பாரபட்சமான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. சட்டத்தை மீறி நிதியங்கள் உருவாக்கப்பட்டிருப்பதை நான் கண்டிருக்கிறேன். அது நடக்கவில்லை. நிதி சேகரிக்க நாங்கள் ஒரு குழுவை நியமித்துள்ளோம். சிலர் தங்கள் கொடூரமான ஆசைகளுக்காக இந்த நிதியைப் பற்றி சந்தேகங்களை உருவாக்குகிறார்கள். கடத்தல்காரர்கள் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிதியை வலுப்படுத்த விருப்பமின்மையே அதன் நோக்கம். அதிகாரத்திற்கான மோசமான ஆசையுடன் அவர்கள் இருக்கிறார்கள். மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே, இந்த நிதியத்திற்கு நிறைய பங்களிப்பு செய்கிறார்கள். அந்த நன்கொடைகள் இந்த நிதியத்தை பலப்படுத்துகிறது. எனவே, இந்த சூழ்நிலையை சமாளிக்க மிகவும் வலுவான ஒரு பொறிமுறையை நாங்கள் தயார் செய்து வருகிறோம். இதற்காக, நாங்கள் ஒரு ஜனாதிபதி செயலணியை உருவாக்குகிறோம். அதன் கீழ், 07 அலகுகள் உருவாக்கப்படும். அதன் ஒரு அலகு நிதி திரட்டுவதாகும். இரண்டாவது அலகு புனரமைப்புத் திட்டங்களைத் தயாரிப்பதாகும், மூன்றாவது பகுதி கட்டுமானப் பணிகளை மிகச் சிறப்பாக நிர்வகிக்க ஒரு உப குழுவை நியமிப்பது. மேலும், ஒரு நல்ல தகவல் தொடர்பு குழு தேவை. மேலும், வீட்டமைப்புச் செயற்பாட்டிற்கு மற்றொரு அலகு உருவாக்கப்படுகிறது. இந்த வழியில், 07 அலகுகள் உருவாக்கப்படும். இந்த நடவடிக்கைகளில் இணையுமாறு உங்களை அழைக்கிறேன்.

ஜனாதிபதி செயலணி மட்டும் போதாது என்பதை நாங்கள் அறிவோம். விரைவில் இந்த பாராளுமன்றத்தில் ஒரு விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றுவோம். இந்த சூழ்நிலையைச் சமாளிக்க, குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கான தொடர்ச்சியான திட்டம் தேவை. அதற்காக ஒரு விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தைக் கொண்டுவர நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.மேலும், எங்களுக்கு நிலையான திட்டங்கள் தேவை.

இந்த பாராளுமன்றத்தில் ஒரு ஆளும் கட்சியும் ஒரு எதிர்க்கட்சியும் உள்ளன. இந்தப் பேரழிவிலிருந்து மீண்டும் இதுபோன்ற பேரழிவு ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க நாம் ஒரு நிகழ்ச்சி நிரலுக்குச் செல்ல வேண்டும்.

எனவே, இந்த பாராளுமன்றத்தில் அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும் விட்டு விலகி, மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தேசிய சபையாகச் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். அரசியல் பிரச்சினைகளை அரசியல் களத்திலிருந்து பேசுவோம். இந்தப் பேரழிவை எதிர்கொண்டாலும், ஒரு பொதுவான நிகழ்ச்சி நிரலைக் கொண்டு வந்து, நாடு மாறியுள்ள இந்தப் பேரழிவிலிருந்து மீள்வதற்கு

உழைப்போம். எனவே, பொது மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஒரு தேசிய சபையாகச் செயல்பட்டு, அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் இந்தப் பிரச்சினையை நிலையான முறையில் தீர்க்க வேண்டும் என்று நான் அழைக்கிறேன். நமது தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்களையும் அதில் எங்களுடன் இணையுமாறு நாங்கள் அழைக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *