பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக விஷேட ஜும்ஆ நிதி சேகரிப்பு; முஸ்லிம் திணைக்கள பணிப்பாளர் நவாஸ் வேண்டுகோள்
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விஷேட ஜும்ஆ நிதி சேகரிப்பும் மற்றும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவித்திட்டத்தை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் கேட்டுக் கொள்கின்றார்.
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டிருப்பதனால் அவர்களுக்கு உதவும் வகையில் அவர்களின் நலன்கருதி எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தினத்தில் விஷேட ஜும்ஆ நிதியை சேகரித்து அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் குறித்த பகுதி பிரதிநிதிகளையும் இணைத்துக் கொண்டு தங்களது பள்ளிவாசலுக்குட்பட்டபாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு திணைக்கள சுற்று நிருபம் ஒன்றின் மூலம் சகல பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள் மற்றும் நம்பிக்கைப் பொறுப்பாளர்களிடம் பணிப்பாளர் கேட்டுக் கொள்கின்றார்.
அவ்வாறு தங்களது பகுதி மக்கள் பாதிக்கப்படவில்லையாயின் ஏனைய இடங்களில் இதுவரை எவ்வித உதவிகளும் வழங்கப்படாதவர்களை இனங்கண்டு அவர்களுக்கு அந்தியினை பயன்படுத்தி தாங்கள் வழங்கிய உதவி எந்தப்பகுதிக்கு எவ்வாறு வழங்கப்பட்டது என திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும் பணிப்பாளர் கேட்டுள்ளார்.
மேலும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்கள் தனிப்பட்ட உறவினர்களின் வீடுகள், பள்ளிவாசல்கள், பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் தற்காலிகமாக தங்கி வாழ்கிறார்கள். இவ்வாறு வாழ்பவர்கள் அரசாங்கத்தின் உதவியை பெறுவதற்கு அப்பகுதி கிராம அலுவலர் ஊடாக தமது பாதிப்புகள் தொடர்பான தகவல்களை கட்டாயம் வழங்கி பதிவு செய்ய வேண்டி இருப்பதால் அதற்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு பள்ளி நிருவாகிகளிடம் 2025.12.02 ஆம் திகதி சுற்று நிருபம் மூலம் கேட்டுள்ளார்.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
