நிவாரணப் பணிகளுக்காக ஜப்பானிய மருத்துவக் குழு இலங்கை வருகை
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், ஜப்பானின் வெளிநாட்டு உதவி முகவரகமானது மருத்துவக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.
சுமார் 30 உறுப்பினர்களைக் கொண்ட இம் மருத்துவக் குழுவினர் நேற்று (03) டோக்கியோவிலுள்ள ஹனேடா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டிருந்தனர்.
ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க மற்றும் ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்தின் (JICA) அதிகாரிகள் வழியனுப்பி வைப்பதற்காக விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர், எங்களுக்குத் தேவைப்படும் நேரத்திலும், தேவைப்படும் இடத்திலும் நீங்கள் முன்வந்து உதவிய விதத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.
மருத்துவக் குழுவின் தலைவரான இவாசே கிச்சிரோ தெரிவிக்கையில், ” சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு எமது மனமார்ந்த ஆதரவை வழங்க நாங்கள் விரும்புகிறோம் என்றார்.
கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சிலாபம் நகரில் சிகிச்சையளிப்பதற்காக இக்குழுவினர் சுமார் இரண்டு வாரங்கள் தங்கியிருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலைகளும் கடுமையாக சேதமடைந்துள்ளமையும் இவாசே கிச்சிரோ சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
