பாதிக்கப்பட்ட மக்களை மீட்க பணத்தை தடையாகக் கருதாமல் தலையீடு செய்யுங்கள்..! – ஜனாதிபதி
பணத்தை எந்த விதத்திலும் தடையாகக் கருதாமல் மீட்பு மற்றும் நிவாரண சேவைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று (28) காலை மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர்களுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டபோது ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அனர்த்த நிவாரண சேவைகளுக்காக இதுவரை 1.2 பில்லியன்ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் 2025 வரவுசெலவுத் திட்டத்தில் அவசரத் தேவைகளுக்காக மேலும் 30 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
மக்களை மீட்பதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும் மேலும் நிதி தேவைப்பட்டால், அவற்றைக் கோருமாறும், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு தற்போது கிடைக்கும் நிதியை அவசர நிலைமைக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
நிதி செலவிடுவதற்கு சுற்றறிக்கைகள் தடையாக இருப்பதைத் தடுக்க உடனடியாக ஒரு புதிய சுற்றறிக்கையை வெளியிடுமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தினார்.
இடம்பெயர்ந்த மக்களுக்காக பராமரிக்கப்படும் முகாம்களின் நிர்வாகத்தை இராணுவத்திடம் ஒப்படைக்குமாறும் அறிவுறுத்தினார்.
அனர்த்தத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்குத் தேவையான படகுகள், ஹெலிகொப்டர்கள் மற்றும் ஏனைய உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் குறித்து உடனடியாக அறிவிக்குமாறு அரசாங்க அதிபர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க பாதுகாப்பு தலைமையகத்தில் ஒரு தனிப் பிரிவைப் பேணவும், அவர்களைத் தொடர்பு கொள்ள பத்து விசேட தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தவும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்தார்.
வெள்ளம், மண்சரிவு மற்றும் மரங்கள் வீழ்தல் காரணமாக சேதமடைந்துள்ள உட்கட்டமைப்பு வசதிகள் குறித்த ஆவணங்களைத் தயாரித்து பொது நிர்வாக அமைச்சிற்கு அனுப்புமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி மேலும் அறிவுறுத்தினார்.
அனர்த்த நிலைமை தணிந்தவுடன், அந்த ஆவணங்களின்படி முப்படைகளைப் பயன்படுத்தி தொடர்புடைய பழுதுபார்ப்பு பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்
