சீரற்ற வானிலை யால் ரயில் சேவைகள் பாதிப்பு
சீரற்ற வானிலை காரணமாக அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரையோர ரயில் மார்க்கம் மற்றும் களனிவெளி ரயில் மார்க்கத்தில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளமையால் அந்த மார்க்கங்களில் ரயில் சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், வடக்கு ரயில் மார்க்கம் வெல்லவ பகுதியில் நீரில் மூழ்கியுள்ளதால் வடக்கு ரயில் மார்க்கத்திலான ரயில் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும், புத்தளம் ரயில் மார்க்கத்திலும் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், சீரற்ற வானிலை காரணமாக மலையக ரயில் மார்க்கத்தில் கொழும்பு கோட்டை – பதுளை இடையே இயங்கும் அனைத்து ரயில்களையும் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை நானுஓயா வரை மட்டுமே இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
