வாழைச்சேனையில் படகு நீரில் மூழ்கியது – இருவர் மீட்பு; ஒருவர் மாயம்!
வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க மூவருடன் சென்ற இயந்திரப் படகொன்று வியாழக்கிழமை (27) கடலில் மூழ்கியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) ஆம் திகதி படகு உரிமையாளர் உட்பட மூவர் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மீண்டும் கரைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது வாழைச்சேனை முகத்துவார கடற்பரப்பில் வைத்து இயந்திரப் படகு நீரில் மூழ்கியுள்ளது.
இதில், பயணித்த உரிமையாளரும் மற்றுமொருவரும் பாதுகாப்புடன் கரை திரும்பியுள்ளனர்.
அவர்களுடன் படகில் சென்ற ஓட்டமாவடி – நாவலடி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய எம்.றிகாஸ் என்பவர் காணாமல் போயுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மாயமான நபரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
(எச்.எம்.எம்.பர்ஸான்)
