பிரபல சமூக சேவையாளர் தேசபந்து பீ.எம். பாரூக் காலமானார்
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் குருநாகல் மாவட்ட அஹதியா சம்மேளனத்தின் தலைவரும் நாடறிந்த முன்னணி சமூக சேவையாளருமான தேசபந்து அல்ஹாஜ் பீ.எம் பாரூக் (ஜே.பி) கொழும்பில் 27ஆம் திகதி இறைவனடி சேர்ந்தார். இவரது மறைவு குறித்து முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் அல்ஹாஜ் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆழ்ந்த அனுதாபச் செய்தி ஒன்றை விடுத்துள்ளார். அவர் அச்செய்தியில் கூறியதாவது:-
தேசபந்து பீ.எம். பாரூக்கின் திடீர் மறைவானது குருநாகல் மாவட்டத்திற்கு மாத்திரமன்றி முழு நாட்டிற்கும் ஈடு செய்ய முடியாத மாபெரும் ஓர் இழப்பாகும்.
குருநாகல் மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் சிறு வயதில் இருந்தே சமூக சேவை, பொதுப் பணிகளில் ஈடுபட்டு தேசிய மட்டத்தில் பல அமைப்புகளின் உயர்பதவிகளை பெற்றுக் கொள்ளும் அளவுக்கு உயர்ந்தார். சமூக சேவை, அரசியலின் மூலம் சமூகத்திற்காக சேவை செய்வதற்கென தன்னை அர்ப்பணித்து ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக அளப்பரிய சேவை செய்து வந்தார்.
எனது தந்தையான முன்னாள் சபாநாயகர் மர்ஹூம் எம்.ஏ. பாக்கீர் மாக்காருடன் இணைந்து அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் ஊடாக ஆரம்பத்தில் குருநாகல் மாவட்டத்தில் பாரிய பணிகளைச் செய்தார். அதன் மூலம் இந்த மாவட்டத்தில் அவர் பிரபல்யம் அடைந்தார். அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத் தலைவராக பதவி வகித்து நாடு பூராகவும் முஸ்லிம் கிராமங்களுக்குச் சென்று அப்பகுதி மக்களின் பிரச்சினைகளைக்,குறைகளை கேட்டரிந்து அவற்றுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க உறிய இடத்திற்கு அழைத்துச் சென்று தீர்த்து வைப்பதில் அதிக ஈடுபாடு காட்டினார். எனது தந்தையுடன் எப்படி மிக அன்பாகப் பழகினாரோ அதே போன்று என்னுடனும் நெருங்கிப் பழகி பல சேவைகளை அரசியல் மூலம் சமூகத்திற்குப் பெற்றுக் கொடுத்தார்.
பிரதேச சபை உறுப்பினராகவும் பதவி வகித்து மக்களுக்கு பணி செய்தவர் மர்ஹும் பி.எம் பாரூக் குருநாதர் மாவட்டத்தில் பௌத்த மக்களுடனும் மதகுருமார்களுடனும் சிறந்த உறவைப் பேணி இரு சமூகங்களுக்கு இடையிலும் இணைப்புப் பாலமாக செயற்பட்டு வந்தார். மர்ஹூம் பி.எம் பாரூக் குருநாகல் மாவட்டத்தில் அவர் ஒரு பெரிய வெற்றிடத்தை விட்டுச் செல்கிறார்.
அவர் மனித நேயம் மிக்க ஒரு மாமனிதர். சமூக சேவைப் பணிகளினால் முஸ்லிம் சமூகத்தின் உள்ளங்களில் என்றும் அவர் நிலைத்து நிற்பார். அவன் தனது புதல்வரையும் சமூக சேவைப் பணியில் இணைத்து எம்மை விட்டுப் பிரிந்துள்ளார்.அவரது புதல்வர் இதே அமைப்பில் இரண்டாவது உப தலைவராக பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.
(பேருவளை பீ எம் முக்தார்)
