சாய்ந்தமருதில் வீதியை விட்டு விலகி கால்வாய்க்குள் விழுந்த கார்; மூவர் உயிரிழப்பு
கனமழை ,வெள்ளம் காரணமாக சாய்ந்தமருது வொலிவேரியன் பகுதியிலுள்ள கால்வாய்க்குள் காரொன்று சிக்கியதில் காரினுள் இருந்த மூவரும் உயிரிழந்துள்ளனர்.
கல்முனை மாநகர வொலிவேரியன் கிராமத்தில் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாயல் பின் வீதியில் பாதையை விட்டு விலகி சொகுசு கார் ஒன்று நீரில் பாய்ந்தது. நீரில் பாய்ந்த காரில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒரு சிறுமியும் இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
கார் நீரில் முற்றாக மூழ்கியிருந்த நிலையில் சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக மீட்பு தொண்டர்களின் போராட்ட மீட்புக்கு பின்னரே கார் கரையேற்றப்பட்டு காருக்குள் இருந்த மூவரையும் அம்பியூலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காரிலிருந்து மீட்கப்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்த நிலையில் மூவரும் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேச ஜனாஸா அமைப்புக்கள், கல்முனை சுழியோடிகள், மீட்பு படையினர், பொலிஸார், கடற்கடையினர், பிரதேச செயலக அதிகாரிகள், கல்முனை மாநகர சபை ஊழியர்கள், பொதுநல அமைப்புக்களை சேர்ந்தவர்கள் என பலரும் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் போன்றோர்களும் விஜயம் செய்திருந்தனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(நூருல் ஹுதா உமர்)
