கலாஓயாவில் அதிகரிக்கும் வெள்ளம்; அருகிலிருப்போருக்கு அறிவுறுத்தல்
கலா ஓயா ஆற்றின் தாழ்நிலப் பகுதிகளுக்கு பாரிய வெள்ள அபாய நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கலாவெவ நீர்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு 44,000 கன அடி நீர் இராஜங்கனைக்கு விடுவிக்கப்படுவதுடன், அங்கிருந்து மேலும் 35,000 கன அடி நீர் கலா ஓயாவுக்குள் மீண்டும் வெளியேற்றப்படவுள்ளதால் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், இராஜங்கனை, நொச்சியாகம, வண்ணாத்திவில்லு மற்றும் கருவலகஸ்வெவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நில பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் அப்பகுதியினூடாகப் பயணிக்கும் சாரதிகள் அனைவரும் நிலைமை குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
அத்துடன், நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளதால், பாலம் போன்ற இடங்களில் உள்ள மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், கலா ஓயாவை அண்மித்த பகுதிகளில் உள்ள அனைத்து செயற்பாடுகளையும் தவிர்க்குமாறும் அந்த திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
