உலகம்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வியாழக்கிழமை நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வியாழக்கிழமை நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அவரை வரவேற்கும் விதமாக நடிகர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து, தலைமைக்கு காலக்கெடு விதித்தார், செங்கோட்டையன். இதையடுத்து அவரது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், தினகரன், சசிகலா ஆகியோருடன் தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய முடிவு செய்தார். புதன்கிழமை விஜய்யை நேரில் சந்தித்தும் பேச்சு நடத்தினார். இதன் தொடர்ச்சியாக வியாழக்கிழமை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் வருகை தந்தார்.

அவரை கட்சி பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் தலைவர் விஜயை சந்தித்த செங்கோட்டையன், கட்சியில் இணைந்தார். அவருக்கு உறுப்பினர் அட்டையை நடிகர் விஜய் வழங்கினார். நிகழ்ச்சியில் திருப்பூர் தொகுதி முன்னாள் எம்.பி., சத்யபாமா உள்ளிட்டோரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அனைவருக்கும் விஜய் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

செங்கோட்டையனுக்கு, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி என நான்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக அமைப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், தலைமை நிர்வாகக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக அவர் செயல்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையனை வரவேற்கும் விதமாக, நடிகர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார். வீடியோவில் விஜய் கூறியதாவது: அனைவருக்கும் வணக்கம், 20 வயது இளைஞராக இருக்கும் போதே, எம்ஜிஆரை நம்பி, அவரது மன்றத்தில் இணைந்தவர் செங்கோட்டையன். சின்ன வயதிலேயே எம்எல்ஏ என்ற பெரிய பொறுப்பை ஏற்றவர். அதன் பிறகு அவரது பயணத்தில், இந்த இயக்கத்தில் இருபெரும் தலைவர்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கைகுரியவராக அரசியல் களத்தில் இருந்தவர்.

நல்லதே நடக்கும்
இப்படி 50 வருடமாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் இன்றைக்கு, அவருடைய அரசியல் அனுபவமும், அவர்களுடைய அரசியல் களப்பணியும், நம்முடைய தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஒரு பெரிய உறுதுணையாக இருக்கும். இந்த நம்பிக்கையுடன், இன்றைக்கு அவருக்கும், இணைந்து பணியாற்ற நம்முடன் கை கோர்க்கும் அனைவரையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன். நல்லதே நடக்கும், நல்லதே நடக்கும், நல்லது மட்டும் நடக்கும், வெற்றி நிச்சயம். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *