உள்நாடு

அக்குறணை மற்றும் அம்பாறை வெள்ளப் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும்; சபையில் மு.கா தலைவர் ஹக்கீம்

அக்குறணை வெள்ளப் பிரச்சினை, கல்முனை -கிட்டங்கி விவகாரம்,ஹெட ஓயா திட்டம் போன்றவை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி மாவட்ட எம்.பியுமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் திங்கள் கிழமை(24) கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு என்பன தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவற்றை அவர் சம்பந்தப்பட்ட அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

அங்கு அவர் பேசுகையில்,

இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் ( SLLRDC ) ஒரு முக்கியமான அரச நிறுவனம். குறிப்பாக, நாட்டில் வெள்ளக் கட்டுப்பாடு குறித்த விசேட அறிவுள்ள 400க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் அங்கு கடமையாற்றுகின்றனர்.

அந்தக் கூட்டுத்தாபனம் மூலம் நம் நாட்டில் வெள்ளக் கட்டுப்பாடு பற்றிய பல்வேறு திட்டங்களைத் தயாரித்து வருகிறார்கள்.
இன்றைய(24) பத்திரிகையிலும் அதுபற்றி வெளியாகியுள்ளது, நீர்ப்பாசனத் திணைக்களம் பல்வேறு பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெள்ள எச்சரிக்கை என்று கூறும்போது, நமக்கு நினைவுக்கு வரும் ஒரு விடயம் அக்குறணை நகரத்தின் வெள்ளப் பெருக்கு ஆகும்.

இது குறித்து இந்த பாராளுமன்றத்தில் அடிக்கடி பேசப்படுகின்றது.இந்த பகுதி ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் இங்கு என்னையும் குறை கூறியிருந்தனர்.

அப்பொழுது,நகர அபிவிருத்தி அதிகாரசபை சுமார் ஒரு வருட காலமாக என் பொறுப்பில் இருந்தபோது, நான் சில நடவடிக்கைகளை முன்னெடுத்தேன்.

அப்பொழுது நாங்கள் பல நிறுவனங்களை ஒருங்கிணைத்து ஒரு பணிக்குழுவை (Task Force) அமைத்திருந்தோம். அந்தப் பணிக்குழு மூலம் உரிய முறையில் ஆய்வு செய்து, இதை விஞ்ஞானப்பூர்வமாகக் கண்டறிந்து, இதைத் தீர்த்து வைக்க திட்டமிட வேண்டும் என்று தீர்மானித்தோம்.

அது தொடர்பான அறிக்கைதான் இது. முன்மொழியப்பட்ட நீரியல்(Hydrolic)ஆய்வு மற்றும் மழைநீர் வடிகாண் வடிவமைப்பு, வெள்ளத் தணிப்புத் திட்ட வடிவமைப்பு (Design of Flood Mitigation Proposal for Akurana) ஆகியவை இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தால் (SLRDC) மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய காணி அபிவிருத்தி நிறுவனத்தினால் வழங்கப்படும் சாத்தியவள அறிக்கையொன்றைதயாரிப்பதற்கு 23 மில்லியன் ரூபாய் கோரி உள்ளனர்.

எனவே, அந்த 23 மில்லியனை வழங்கும்படி நான் கடந்த அரசாங்கத்திடமும் கேட்டேன். இந்த அரசாங்கத்திலும் அமைச்சர் லால் காந்த தலைமையிலான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் இரண்டு மூன்று முறை நான் முன்மொழிந்துள்ளேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை.

இது குறித்து வேறொரு மாற்றுத் திட்டத்தைப் பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மூலம் செய்ய வேண்டும் என்ற ஒரு யோசனை இருந்தது. ஆனால்,எந்தவொரு விஞ்ஞானியும் இதை ஏற்றுக்கொள்வார்.அதுபற்றி அமைச்சரும் கூட இன்று காலையில் என்னிடம் சொன்னார்.

வெள்ளக் கட்டுப்பாடு குறித்து விசேஷ அறிவு இந்த இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திடம்தான் உள்ளது.

பிரஸ்தாப கூட்டுத்தாபனம் இந்தச் சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரிப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. ஏனென்றால், இந்த ஆற்றுப் பள்ளத்தாக்கில் உமங் ஓயா, ஒவிஸ்ஸ ஓயா, பலபிட்டியா ஓயா, வஹகல ஓயா போன்ற பல ஆறுகள் வந்து ஒன்று சேர்ந்து பிங்கா ஓயாவுடன் மகாவலி கங்கையுடன் ஒன்றாக இணைகின்றன. இந்த பிங்கா ஓயாவில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது உருவாகும் இந்த பாரிய பிரச்சினையால், கடந்த ஒன்று அல்லது இரண்டு தசாப்தங்களில், அக்குறணை நகரம் சுமார் ஏழு அல்லது எட்டு முறை நீரில் மூழ்கியுள்ளது.

எனவே, இது குறித்து நாங்கள் அடிக்கடி பேசினாலும் கூட, இந்தச் சாத்தியக்கூறு அறிக்கையை தயாரித்து முடிக்க அந்த 23 மில்லியனை வழங்குமாறு அமைச்சரிடம் நான் வினயமாகக் கேட்டுக்கொள்கிறேன்.

ஏனென்றால், இதைச் செய்வதன் மூலமாகவே இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை சட்டப்பூர்வமாகத் தீர்மானிக்க முடியும்.

அதுமட்டுமல்ல, இந்த நகர அபிவிருத்தி அதிகாரசபை மீண்டும் மீண்டும் வந்து அங்கீகாரமற்ற கட்டுமானங்கள் உள்ளன என்று கூறுகின்றது. ஆனால், அங்கீகாரமற்ற கட்டுமானங்கள் குறித்து நான் இங்கு ஒரு கேள்வியைக் கேட்டபோது, ஒரு பெரிய பட்டியலையே கொடுத்தார்கள்.

அந்தப் பட்டியலில் உள்ள தேவையற்ற கட்டுமானங்களை அகற்ற வழக்குத் தொடரச் சொன்னபோதிலும், இன்னும் வழக்குத் தொடரப்படவில்லை. இது குறித்தும் நகர அபிவிருத்தி அதிகாரசபை குறித்தும் நான் மூன்று முறை எங்கள் மாவட்ட அபிவிருத்திக் குழுவில் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளேன்.
ஆனால் எதுவும் செய்யப்படவில்லை.

அக்குறணை பிரதேச சபையில் அந்தக் காலங்களில் ஏதாவது ஊழல்கள் நடந்திருந்தால், அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும், அது குறித்துத் தகவல் திரட்ட வேண்டும் என்று சொல்லுங்கள். முன்னாள் அமைச்சர்களான எங்களுக்கு நாங்கள் எடுத்த முயற்சிகளுக்கு நன்றி சொல்லாமல், அடிக்கடி குறை கூறிக் கொண்டு, இதற்கு எதுவும் செய்யாமல் இருப்பது குறித்து எனது வருத்தத்தை தெரிவிக்கின்றேன்.

அமைச்சர் புதிதாகப் பொறுப்பேற்ற இரண்டு நிறுவனங்கள் மூலம் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வை வழங்குவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

இனி, தொல்பொருள் திணைக்களம் குறித்துப் பேசுவதானால், இந்த விடயம் சற்று முன்பு எழுப்பப்பட்டதால், எனக்கும் சில கருத்துக்கள் தெரிவிக்க உள்ளன.

அத்துடன் பௌத்த சாசன அமைச்சின் வாக்கெடுப்பின் போதும் நான் இதைப் பற்றி விரிவாகப் பேச எண்ணியுள்ளேன்.

பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களுக்கான சமயத் தலங்களில் ஒன்றாக விளங்கும் பலங்கொடையிலுள்ள தப்தர் ஜெய்லானி, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் (UDA) தேவையற்ற தலையீட்டால் புனிதத் தன்மையை இழக்க நேர்ந்துள்ளது.

இது காலப்போக்கில் அங்கு பல புதிய கட்டுமானங்களுக்கும் வழிவகுத்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள், தலைமை பிக்குவின் தலையீட்டால் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்.

தொல்பொருள் துறையால் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகைகள் தப்தர் ஜெய்லானியின் இருப்பை அல்லது அதன் வரலாற்றுச் சான்றுகளை குறிப்பிடாமல், ஒருதலைப்பட்சமாக உள்ளன.

நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்தப் பகுதியை ஒரு(பௌத்த) புனிதப் பகுதியாக அறிவித்ததன் மூலம், தப்தர் ஜெய்லானிக்கு வருபவர்கள் மீது தடைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலை குறித்துப் பௌத்த சாசன அமைச்சின் வாக்கெடுப்பின் போது பேசித் தீர்வு காண்போம்.

அமைச்சரின் கூற்றுப்படி, அபிவிருத்தி அதிகாரசபை, நாடு முழுவதும் பத்து நகரங்களைக் கண்டறிந்துள்ளதாகக் கூறியுள்ளார். ஜனாதிபதி அவர்கள் யாழ்ப்பாணம், எஹலியகொட,மட்டக்களப்பு ,சிலாபம் மற்றும் மாத்தறை பற்றிப் பேசினார்.
மற்ற பத்து நகரங்கள் என்னவென்று எனக்குத் தெரியாது.
நான் கண்டி நகரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன்.

கண்டி,நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகவும், குறிப்பாக பௌத்தர்களுக்கு மிக முக்கியமான நகரமாகவும் உள்ளது.

நகர மறுசீரமைப்புத் திட்டங்களின் போது கண்டியில் பல பகுதிகள் கவனிக்கப்பட வேண்டும், குறிப்பாக இங்கு போதுமான சேவைகள் அற்ற பல குடியிருப்புகளில் (underserved settlements) குறைந்த வசதிகளுடன் மக்கள் வாழும் மஹியாவ, கட்டுகலை, தெய்யன்னாவல போன்ற பகுதிகள் உள்ளன.

கண்டி,கட்டுகலையைப் பற்றிப் பேசுகையில், நாம் அனைவரும் இளம் தடகள வீராங்கனை சபியா யாமிக் (Safia Yamic) பெற்ற மாபெரும் சாதனையைப் பாராட்டுகின்றோம். அவர் மூன்று தங்கப் பதக்கங்களையும் மூன்று சாதனைகளையும் பெற்றார்.

அவர் முன்னைய பதினெட்டு ஆண்டுகால சாதனையை முறியடித்திருந்தார், மேலும், அவர் இந்த வசதி குறைந்த பகுதியில் வாழ்ந்து வருபவர்.அது கண்டியில் உள்ள மிகவும் பின்தங்கிய குடியேற்றப் பகுதி.

அவரது அற்புதமான சாதனைக்காக நான் எனது பாராட்டுகளைப் பதிவு செய்கின்றேன். நாம் அனைவரும் அதைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம். சபியா யாமிக் என்ற அந்த வீராங்கனை குறித்து நாம் அனைவரும் பெருமை கொள்கிறோம். அந்த வீராங்கனை கட்டுகலை பிரதேசத்தில் இருந்து வருகிறார். அத்தகைய ஒரு கடினமான பகுதியில் இருந்து வந்து அவர் சாதித்துள்ளார்.

நான் அந்த வீராங்கனைக்கும், அவரது பெற்றோருக்கும், குறிப்பாக அவரது தந்தையாருக்கும் என் பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன். அவரது தந்தையாரை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும்; மேலும், அவர்கள் இவை அனைத்தையும் மீறி சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்.

ஆனால் உண்மை என்னவென்றால், நகர மறுசீரமைப்புத் திட்டங்கள் என்று வரும்போது, அடுக்குமாடி வீடுகளைக் கட்டி, ஒரு நல்ல சூழலை உருவாக்குவதற்கான இந்த முயற்சியில், கண்டி நகரம் முழுவதையும் நாங்கள் கவனத்தில் கொள்ளவில்லை. குறிப்பாக, மஹியாவ, கட்டுகலை, தெய்யன்னாவல போன்ற பகுதிகள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் வாழும் பகுதிகளாக இருப்பதால், இது குறித்து நிச்சயமாக முயற்சி எடுக்கப்பட வேண்டும் என்று நான் முன்மொழிகின்றேன்.
அது மட்டுமல்ல, இப்போது நீண்ட காலமாக, 2000ஆம் ஆண்டு முதல், கண்டி மாவட்டத்தில், கண்டி நகரில் உள்ள போகம்பரைச் சிறைச்சாலை வளாகம் இப்போது முற்றிலும் காலியாக உள்ளது.

சிறைக் கைதிகளைப் பல்லேகலைக்கு கொண்டு சென்றுள்ளனர் ஆனால், அந்த இடத்தை அபிவிருத்தி செய்வது குறித்து வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கொண்டுவருவோம் என்று கூறி, அதற்கான பெரிய திட்டங்களை வகுத்தாலும், இதுவரை எதுவும் நடக்கவில்லை.

இது குறிப்பாக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான திட்டமாக இருப்பதால், உடனடியாக ஏதாவது செய்யப்பட வேண்டும். கண்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பலர் ஓர் இரவுக்கு மேல் தங்க மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது, ஏனென்றால், அங்கே பொழுதுபோக்குக்கு அதிக இடங்கள் இல்லை என்பதே அதற்கான காரணமாகச் சொல்லப்படுகின்றது.

எனவே, கண்டி மாவட்டத்தில் உள்ள போகம்பரைச் சிறைச்சாலை வளாகத்தை, அது இப்போது முற்றிலும் காலியாக உள்ளதால், மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

தற்போது,எஹெலேபொல வளவில் மெழுகு அருங்காட்சியகம் (Wax Museum) மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளது, அதைத் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. அதுமட்டுமல்ல, பல பழைய கட்டிடங்கள் உள்ளன. 200க்கும் மேற்பட்ட பழைய கட்டிடங்களை பேணிப் பாதுகாக்க ஜப்பானிய உதவி கிடைக்கும் என்று கூறப்பட்டது. அதில் எதுவும் இதுவரை நடக்கவில்லை. அதையும் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

அதே சமயம், நாங்கள் வெள்ளத்தைப் பற்றிப் பேசும்போது, குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில், இந்த மழைக்காலத்தில் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகிறது.

எனவே, கல்முனை பகுதியில் உள்ள கிட்டங்கி பம்ப் ஹவுஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் எப்போதும் வெள்ளத்தில் மூழ்கும். இப்போது, அதைப் பற்றிப் பேசும்போது, முந்தைய திட்டமான CRIP (Climate Resilient Infrastructure Project) மூலம் ஒரு திட்டம் இருந்தது. அது இப்போது முடிவுக்கு வந்துவிட்டது.

ஆனால், அவர்கள் கல்லாறு ஓடைக்கு அருகில் உள்ள தண்ணீரை கடலுக்குள் செல்வதைத் தடுக்க ஒரு அணையைக் கட்ட முன்மொழிந்தனர். மணல் திட்டுகள் உருவாகுவதால், அவர்கள் ஒரு காற்றடை அணைக்கு (deflatable dam) முன்மொழிந்தனர்.
இதனால், நீர்மட்டம் உயரும்போது, அவர்கள் அணையைக் காற்றிறக்கி, தண்ணீரை கடலுக்குள் பாய அனுமதிக்கலாம். எனவே, இது சமர்ப்பிக்கப்பட்ட ஒரு திட்டம்.
ஆனால், இதுவரை எதுவும் நடக்கவில்லை. அந்தத் திட்டம் திடீரென முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், இப்போதும் கிட்டங்கி பம்ப் ஹவுஸினால் நிலைமையைச் சமாளிக்க முடிவதில்லை.

இது மட்டுமல்லாமல், உதுமாலெப்பை எம்.பி இங்கு ஒரு பிரச்சினையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அதாவது, கல்லாறு முதல் அக்கறைப்பற்று மற்றும் அதற்கு அப்பாலுள்ள சின்னமுகத்துவார பகுதி வரையிலான முழுப் பகுதியின் வடிகால் குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே, இந்தப் பகுதி முழுவதும் முறையான ஆய்வு செய்யப்பட வேண்டும். இந்த வெள்ளக் கட்டுப்பாடு திட்டம் மேற்கொள்ளப்பட்டால், பல ஆயிரம் ஏக்கர் பயனுள்ள நெல் வயல்கள் மீட்டெடுக்கப்படும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.எனவே, அமைச்சர் அதை மேற்கொள்வார் என்று நான் முன்மொழிகிறேன்.

அதனுடன், வாசித் எம்.பி தனது பொத்துவில் பிரதேசத்துக்கான நீர் வினியோகம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு கட்டாயத்தேவை. நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் ஆகிய இரண்டிற்கும் முக்கியமான ஹெட ஓயா நீர்த்தேக்கம் திட்டத்தை குறைந்தபட்சம் தொடங்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, சியம்பலாண்டுவ விவசாயிகள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததால், அது நடக்கவில்லை. அருகிலுள்ள பிற திட்டங்கள் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த ஹெட ஓயாதிட்டத்தை (Heda Oya Project) தொடங்க பல ஆண்டுகளாக நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.

நீர் வழங்கல் பொறுப்பிலுள்ள அமைச்சர், நீர்ப்பாசன அதிகாரிகளுடன் பேசி, ஹெட ஓயா திட்டத்தில் வேலையைத் தொடங்க முயற்சிப்பார் என்று நம்புகிறேன். நிச்சயமாக, நாட்டில் தற்போதுள்ள கடன் சூழ்நிலையுடன், இதற்கு வெளிநாட்டில் இருந்து நிதி தேவைப்படும். இதற்கு முன்னுரிமை அளிப்பது, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்துடன் (DER) கலந்துரையாடுவது ஒரு முக்கியமான விடயமாக இருக்கும். இதன் மூலம் நீங்கள் ஹெட ஓயா திட்டத்தைத் தொடங்கலாம்.

அதனுடன், இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது.அது பொத்துவில் பஸ் நிலையம் தொடர்பானது. அது கொழும்பில் இருந்து வந்து கொழும்புக்குத் திரும்பும் ஏராளமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குச் சேவை செய்கின்றது. ஆனால், அந்த பஸ் நிலையத்தில் எந்த வசதியும் இல்லை, மிகவும் மோசமான நிலையில் உள்ளது.அதற்கு ஏதாவது செய்யப்பட வேண்டும். எனவே, அது முறையாகக் கட்டப்பட வேண்டும், பஸ் சேவைகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

உண்மையில், கொழும்பு-பொத்துவில் பகுதிக்கு பிரத்தியேகமாக சில நீண்ட தூர பஸ்களை நீங்கள் சேவையில் ஈடுபடுத்த முடிந்தால், அது அப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு பெரும் உதவியாக இருக்கும்.

நான் வசிக்கும் கண்டியில் உள்ள மஹகந்த கிராம அலுவலர் பிரிவில், மஹகந்த நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான 42 பேர்ச்ஸ் பரப்புள்ள ஒரு தனி நிலத்தை வழங்கும்படி எனது கோரிக்கையின் பேரில் நகர அபிவிருத்தி அதிகாரசபையால் (UDA) வழங்கப்பட்ட ஓர் ஆவணத்தை நான் இங்கு சபையில் சமர்ப்பிக்கிறேன்.

அங்கு ஒரு பஸ் நிலையம் கட்டப்பட வேண்டும். ஏனென்றால்,அது பேராதனை நகரம் மற்றும் கலஹா நகரத்திற்கு இடையே உள்ள ஒரு விசேடமான பஸ் தரிப்பிடமாகும் . அந்த ஒரு சிறிய நிலத்துண்டானது, அது பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமானது. அதில் ஒரு சிறிய தொழிலாளர் வசதி மையம் உள்ளது; யாரும் தங்குவதில்லை. எனவேதான் அதைப் பற்றி நாங்கள் ஒரு கோரிக்கை விடுத்தோம். அதையும் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு உரையை நிறைவு செய்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் உரைக்கு பிரதி அமைச்சரின் பதில்:

முதலாவது காரணம், மஹியாவ பகுதியில் உள்ள குறைந்த வாழ்க்கை நிலை பற்றியது. மஹியாவ பகுதியில் MC மற்றும் MMC என இரண்டு பகுதிகள் உள்ளன. MC பகுதியில் முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். ஆனால் அங்கு நிலைமை தரமாக உள்ளது.

MMC பகுதியில்தான் வாழ்க்கை நிலை மிகவும் குறைவாக உள்ளது மற்றும் சிக்கல் உள்ளது. இது குறித்து, சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியை மேம்படுத்த, அமைச்சுக்கள் மாற்றப்பட்ட ஒரு வாரத்திற்குள்,நகர அபிவிருத்தி அதிகார சபை (UDA), போன்றவற்றுடன் ஒரு கூட்டம் நடத்தப்பட்டு, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக, மக்கள் இங்கிருந்து மாற விரும்புகிறார்களா, அல்லது இங்கேயே வீடுகளைக் கட்டி குடியேற விரும்புகிறார்களா என்று அறிய ஒரு சமூக ஆய்வு செய்யப்பட வேண்டும். அன்றைய தினம் வந்திருந்த பல்கலைக்கழக சமூக அறிவியல் துறை நிபுணர்கள் அதை இலவசமாகச் செய்ய ஒப்புக்கொண்டனர், அவர்களுக்குப் போக்குவரத்து வசதியை மட்டுமே UDA வழங்கும். அந்த வேலை தொடங்கப்பட்டுள்ளது.

சமூக ஆய்வுக்குப் பிறகு, மக்கள் எந்த விதத்தில் குடியேற்றப்படுவார்கள் என்ற முடிவுக்கு வர ஒரு சாத்தியப்பாட்டு ஆய்வு செய்யப்படும்.

இரண்டாவது விடயம், அக்குறணை வெள்ளப் பிரச்சினை ஆகும். இந்த வெள்ளப் பிரச்சினை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் (DCC)எப்போதும் விவாதிக்கப்பட்டு ட
வருகிறது, அதன் தலைவராக அமைச்சர் லால் காந்த இருக்கிறார். பாராளுமன்ற உறுப்பினர் முன்வைத்த அறிக்கையின்படி, உரிய திட்டத்தை செயல்படுத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

மூன்றாவதாக, போகம்பரை பற்றி பாரம்பரிய மதிப்பீடு (Heritage Assessment) ஒன்று செய்யப்படுகின்றது. இந்த மதிப்பீட்டுப் பணிக்கு இரண்டு மாதங்கள் கால அவகாசம் தேவை. அதன் பிறகு, அடுத்த வருடம் மே மாதமளவில், தனியார் -அரச பங்களிப்புடனான (Public-Private Partnership) திட்டமாக இதன் வேலைகளைத் தொடங்க முடியும் என்று அமைச்சர் பதிலளித்தார்.

(எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA)- ஓட்டமாவடி.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *