சிவப்பு எச்சரிக்கை நிலைமைகளுக்கு மத்தியில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை விடுக்கும் அவசரகால வேண்டுகோள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டல்கள்
வேகமாக மோசமடைந்து வரும் வானிலை காரணமாக இலங்கை தற்போது நாடு தழுவிய சிவப்பு எச்சரிக்கையின் கீழ் உள்ளது. ஒரு சூறாவளி அல்லது புயல் அமைப்பு தீவை நெருங்கி வருகிறது. மேலும் அடுத்த 12 மணிநேரம் மிகவும் முக்கியமானதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆபத்தான நிலையிலிருந்து அல்லாஹ் எம்மனைவரையும் பாதுகாப்பானாக!
இவ்வேளையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை முஸ்லிம் சமூகத்தை நேசம், ஒற்றுமை மற்றும் சேவை மனப்பான்மையுடன் ஒன்றுபட்டு நிற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறது.
- உடனடி உதவியை வழங்குங்கள்:
பின்வருவனவற்றை வழங்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் இயன்றவரை உதவுமாறு அனைத்து முஸ்லிம்களையும் ஜம்இய்யா கேட்டுக்கொள்கிறது.
● உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்கள்
● ஆடை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள்
● தற்காலிக தங்குமிட உதவி
● நிதி உதவி
● தொண்டர் சேவைகள்
அனைத்து நிவாரண முயற்சிகளும் உங்கள் உள்ளூர் மஸ்ஜிதுகள் மற்றும் ஜம்இய்யாவின் பிரதேசக் கிளைகள் மூலமாகவும், தொடர்புடைய உள்ளூர் அதிகார சபைகளுடனும் இணைந்து ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
இதனால் சரியான அமைப்பு, பாதுகாப்பு மற்றும் முறையான உதவி விநியோகம் உறுதிசெய்யப்படும்.
இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை பிழையான வழங்கல்களை தடுக்கிறது. வெளிப்படைத் தன்மையை உறுதி செய்கிறது; மற்றும் மிகப் பாதிப்பிற்குள்ளாகும் குடும்பங்களை விரைவாகவும் நேர்த்தியாகவும் சென்றடைய வழிவகுக்கிறது.
- பெரும் பாதிப்புக்களின் போது தர்மம் குறித்த இஸ்லாமிய வழிகாட்டுதல்கள்:
● தர்மம் தீங்கிலிருந்து எம்மை காப்பதுடன், கஸ்டங்களிலிருந்து போது ஒரு கேடயமாக மாறி அல்லாஹ்வின் கருணையைப் பெற்றுத் தருகின்றது.
● தர்மம் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தருகிறது.
● தர்மம் இதயத்தை மென்மையாக்குவதுடன் இறைவனின் திருப் பொருத்தத்தையும் பெற்றுத் தருகின்றது.
● மற்றவர்களுக்கு உதவுவது அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு வருகிறது.
●மற்றவர்களின் சுமைகளை யார் இலகுவாக்குகிறாரோ, அதற்கு பதிலாக அல்லாஹ் அவர்களின் சுமைகளை இலகுவாக்குகிறான். பேரிடர்கள் நம் இதயங்களை உசுப்புகின்றன. மன மாற்றத்திற்கு நம்மை அழைக்கின்றன. நமது பொறுமையைச் சோதிக்கின்றன. மேலும் சேவை மற்றும் ஆன்மீக உயர்வுக்கான வாய்ப்புகளை வழங்குகின்றன.
வல்லமை பொருந்திய அல்லாஹ் கட்டளையிடுகிறான்:
“ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும், அவன் தூதரும் உங்களை உங்களுக்கு உயிர் அளிக்கக்கூடிய காரியத்தின்பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள்…” (அல்-குர்ஆன் 08 : 24)
எனவே, அல்ஹம்துலில்லாஹ் ‘அலா குல்லி ஹால்’ என்று கூறி, பின்னர் அர்த்தமுள்ள செயலில் ஈடுபடுவதன் மூலம் நாங்கள் பதிலளிக்கிறோம்.
- பலத்த காற்றின் போது இஸ்லாமிய நடைமுறை:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காற்றை சபிப்பதைத் தடை செய்துள்ளதுடன் அது அல்லாஹ்வின் கட்டளைப்படி மட்டுமே வீசுகிறது என்பதை நமக்கு நினைவூட்டியிருக்கிறார்கள்.
காற்றுகள் அல்லாஹ்வின் படைகளில் ஒன்றாகும், அவன் விரும்பியபடி கருணையாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ அனுப்பப்படுகின்றன என்று இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
- பாதுகாப்பிற்கான பிரார்த்தனைகள்:
‘வலுவான காற்று மற்றும் கருமேகங்கள் சூழும் போது பாதுகாப்பிற்காக சூரா அல்-ஃபலக், சூரா அந்-நாஸ் ஆகியவற்றை ஓதுமாறு இஸ்லாம் வழிகாட்டுகிறது.’ (அபூ தாவூத்)
● பலத்த காற்று வீசும் போது ஓதும் துஆ:
اللَّهُمَّ إِني أَسْأَلُكَ خَيْرَهَا ، وَخَيْرِ مَا فِيهَا ، وخَيْرِ ما أُرسِلَتْ بِهِ ، وَأَعُوذُ بك مِنْ شَرِّهِا ، وَشَرِّ ما فيها ، وَشَرِّ ما أُرسِلَتْ بِهِ (صحيح مسلم)
● மற்றொரு துஆ:
اللَّهُمَّ لَقِحًا لَا عَقِيمًا (ابن حبان)
● நன்மை தரும் மழைக்கு துஆ:
اللهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا ، اللهُمَّ عَلَى الأَكَامِ وَالجِبَالِ وَالآجَامِ وَ الظَّرَابِ والاَودِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ (صحيح البخاري)
- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரதிபலிப்பு:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திடீரென மேகங்கள் தோன்றுவதைக் கண்டால் மழை வரும் என நம்பினாலும் முன்பு அழிந்த நாடுகளைப் போல தானும் தண்டிக்கப்படுவேனோ என்று அஞ்சுவார்கள் என ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இது நமக்கு பணிவு, விழிப்புணர்வு, உண்மையான பிரார்த்தனையுடன் அல்லாஹு தஆலாவின் பக்கம் திரும்புவதை கற்பிக்கிறது.
இறுதி வேண்டுகோள்:
இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை சமூகத்திற்கு பின்வருமாறு வேண்டுகோள் விடுக்கிறது:
● தாராளமாக நன்கொடையளியுங்கள்
● தீவிரமாகச் சேவை செய்யுங்கள்
● பொறுப்புடன் ஆதரவளியுங்கள்
●மஸ்ஜிதுகள், பிரதேசக் கிளைகள் மற்றும் உள்ளூர் அதிகார சபைகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுங்கள்.
●அனைத்து இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.
அல்லாஹ் நம் நாட்டைப் பாதுகாப்பானாக! பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தைப் போக்குவானாக! அவனுக்காக எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சிகளையும் ஏற்றுக் கொள்வானாக!
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
