உள்நாடு

வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் சேவை இன்று ஆரம்பமானது

வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் சேவை இன்று (24) காலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்பிமல் ரத்னாயக்க தலைமையில் மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் ஆரம்பமானது. 

இங்கு பேருந்து சாரதிகள் போதைப்பொருள் பாவித்துள்ளார்களா என்பதைக் கண்டறிவதற்காக மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதுடன், அது தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தினால் முன்னெடுக்கப்பட்டது. 

அதற்கமைய, இன்றைய தினம் மாகும்புர – மாத்தறை, மாகும்புர – காலி, மாகும்புர – பதுளை, கொழும்பு – அம்பாறை ஆகிய அதிவேக நெடுஞ்சாலைப் பேருந்துகளுக்காக வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. 

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் பிமல் ரத்னாயக்க கருத்து தெரிவிக்கையில், இன்றைய தினம் இதற்கு சமாந்தரமாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினால் பொரளையிலிருந்து கடவத்தை வரையும், அதேபோல ஊவா மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினால் பதுளை – பண்டாரவளை, தம்புள்ளை – மஹியங்கனை, மொனராகலை – பிபிலை மற்றும் மொனராகலை – வெல்லவாய ஆகியவற்றுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்காக வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். 

அத்துடன், நாளை (25) கொழும்பு – வவுனியா, கடவத்தை – மகரகம, மாகும்புர – தங்காலை மற்றும் மாகும்புர – அங்குனுகொலபெலஸ்ஸ வரை சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்காக இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இதற்கிடையில், இன்றைய தினம் இதற்கு சமாந்தரமாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினால் வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் திட்டத்தை ஆரம்பிப்பதற்காக தலங்கம கொஸ்வத்தை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர், ஓய்வுபெற்ற கமாண்டர் காமினி ஜயசிங்க, இந்த நடவடிக்கை வரும் டிசம்பர் மாதமளவில் மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைப் பேருந்துகளுக்கும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

டிசம்பர் மாதமளவில் அந்த நடவடிக்கையை ஆரம்பித்து, பின்னர் வரும் 2026 ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் மேல் மாகாணத்தின் அனைத்து பேருந்துகளுக்கும் வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தலைவர் கருத்து தெரிவித்தார். 

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர், ஓய்வுபெற்ற கமாண்டர் காமினி ஜயசிங்க, 

“நாங்கள் இப்போது இந்த மாதத்தின் எஞ்சிய சில நாட்களிலும் மற்றும் டிசம்பர் மாதத்திற்குள்ளும் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து பேருந்துகளுக்கும் இந்த முறையை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறோம். 

அதன் பின்னர் ஜனவரி மாதத்தில் மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்துகளுக்கு அறிமுகப்படுத்தவும், அதேபோல் தெரிவு செய்யப்பட்ட சில சாதாரண பேருந்துகளுக்கு அறிமுகப்படுத்தவும் எதிர்பார்க்கிறோம். 

அதேபோல் அடுத்த வருடம் முடிவடையும் போது, மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளுக்கும் அட்டை மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டைப் பெற்றுக்கொள்ளும் சேவையை ஆரம்பித்து அதனை நிறைவு செய்யவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *