தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2,000 கிலோ பீடி பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 35 கிலோ வீதம் 59 மூட்டைகளில் இருந்து சுமார் 2,000 கிலோ இந்திய மதிப்பிலான ரூ.69 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ராமசந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், ஏட்டு இருதயராஜ்குமார் இசக்கிமுத்து, காவலர் பேச்சிராஜா ஆகியோர் வெள்ளிக்கிழமை அதிகாலையில் தூத்துக்குடி, ஸ்டெர்லைட் பைபாஸ் ஜோதிநகர் விலக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது லோடு வேன் மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக பீடி இலைகள் மூட்டைகளில் பதுக்கி வைக்கபட்டிருந்தது தெரியவந்தது. அதை சோதனை செய்ததில் சுமார் 35 கிலோ வீதம் 59 மூட்டைகளில் இருந்து சுமார் 2,000 கிலோ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டது. இந்த பீடி இலைகளின் மதிப்பு சுமார் இந்திய மதிப்பிலான ரூ. 69 லட்சம் ஆகும். கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேல் நடவடிக்கைக்காக சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)
