உள்நாடு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு மக்கள் வழங்கிய ஆணையை பாவித்து மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் கோரிக்கை!

நமது நாட்டின் அரசியல் வரலாற்றினை நோக்கும் போது தமிழ் பேசும் மக்களின் பெரும் ஆதரவுடன் 1994ல் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட திருமதி சந்திரிக்கா அம்மையார் அவர்கள் இனப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவார் என தமிழ் பேசும் சமூகம் எதிர்பார்த்தது. இனப் பிரச்சினை தீர்வு தொடர்பான முன்மொழிவுகளை பெருந்தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் பாராளுமன்றத்தில் முன்வைத்த போது அதற்கு பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். சந்திரிக்கா அம்மையார் 02 தடவைகள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போதும் இனப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 02 தடவைகள் ஜனாதிபதியாக இருந்தார். யுத்தத்தை இல்லாமல் செய்தார், பல வரலாற்று அபிவிருத்திகளை செய்தார். ஆனால் இனப் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை. மஹிந்த ராஜபக்ஷ இன பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருந்தால் இஸ்லாமிய நாடுகளின் மன்னர்கள் போன்று மஹிந்த மரணிக்கும் வரை ஜனாதிபதியாக இருந்திருப்பார்.

தமிழ் பேசும் மக்களின் பெரும் ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன நல்லாட்சி அரசாங்கத்தால் இன பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார் என தமிழ் பேசும் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் எந்தவிதமான செயற்பாடுகளும் முன்னெடுக்காமல் மைத்திரிபால சிறிசேனவின் பதவி காலம் முடிவு பெற்றது.

அதனை அடுத்து இனவாதத்தினை மூலதனமாக பாவித்து ஆட்சிக்கு வந்த கோத்தபாய ராஜபக்ச தனது காலம் முடிவதற்குள் நாட்டை விட்டு தப்பி ஓடும் நிலைமை உருவானது. தற்காலிகமாக ஜனாதிபதிப் பதவிக்கு பாராளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க இனப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என கூறிவிட்டு அவரும் தோல்வி அடைந்து விட்டார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு பெரும்பான்மை மக்களின் ஆணையும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையும் கிடைத்துள்ள இச்சந்தர்ப்பத்தினை பாவித்து தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என 03வது வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குதல், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை மாற்றுதல், 13வது சரத்தை முழுமையாக அமுல்படுத்துதல் மற்றும் மின்சார கட்டணத்தை 33% குறைப்போம் என்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளில் கௌரவ ஜனாதிபதி அவர்கள் ஈடுபட வேண்டும். NPP அரசாங்கத்திற்கு பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் வாக்களித்துள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்காமல் விட்டதால் அப்பாவியான ருஷ்தி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அன்று அப்பாவியான ருஷ்டியை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கையொப்பமிட்டு முஸ்லிம்களின் பெரும் வெறுப்பை சம்பாதித்தீர்கள்

கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களின் புனித அல்-குர்ஆன் இலங்கை சுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டது. முஸ்லிம்களை பழிவாங்கும் நோக்குடன் முஸ்லிம் உலமாக்களை பயமுறுத்திய நிகழ்வுகளும் நடைபெற்றன. இறைவன் கண்மணி நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஊடாக இந்த மனித சமூகத்துக்கு இறக்கி வைக்கப்பட்ட புனித அல்-குர்ஆனின் புனிதத்துவம் கெடும் வகையில் அடிக்குறிப்பு இடப்படுவதையோ அல்லது ஒரு பயங்கரமான பண்டமாக ஒதுக்கி வைப்பதையோ நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

இது ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறல் செயலாகும். கட்சி பேதமின்றி ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு சமய விவகார அமைச்சர் அவர்களுக்கு வழங்கிய மனு தொடர்பாக அரசு தரப்பில் இருந்து சாதகமான பதில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. இதனை முஸ்லிம் சமூகம் மிகவும் மன வேதனையுடன் நோக்குகிறது. குறித்த மனுவை அதிமேதகு ஜனாதிபதியின் கவனத்திற்கு நான் இந்த சபையில் மேலும் சமர்ப்பிக்கின்றேன்.

இன ஒற்றுமை, சமூக நீதி, தேசிய ஒருமைப்பாடு பற்றி கதைக்கும் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இந்த அல்-குர்ஆன் விடயத்தில் நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்துள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட கல்வி மறுசீரமைப்புக் குழுவில் முஸ்லிம் ஒருவரை நியமனம் செய்யுமாறு கோரிக்கை விடுத்த போதும் இதுவரையும் இக்குழுவில் முஸ்லிம் ஒருவர் நியமனம் செய்யப்படாத நிலைமை தொடர்கிறது. அண்மையில் கலாசார அமைச்சினால் நியமிக்கப்பட்ட 19 தொல்பொருளியல் ஆலோசனைக் குழுவில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பிரதிநிதிகள் இல்லாத நிலமையில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடயங்களில் தேசிய நல்லிணக்க அமைச்சு ஈடுபட்டு சகல இனங்கள் மத்தியில் சமத்துவம் பேணப்படும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டிய பாரிய பொறுப்பு தேசிய நல்லிணக்க அமைச்சுக்கு உள்ளது என்பதனை உணர்ந்து செயற்பட வேண்டும்.

தேசிய நல்லிணக்க அமைச்சொன்று செயற்பட்டு வருகின்றது. இந்த அமைச்சினூடாக எமது நாட்டின் தேசிய நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அண்மையில் நடைபெற்ற தேசிய நல்லிணக்க அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் நமது நாட்டில் அமுல்படுத்தப்படும் கிளீன் ஸ்ரீலங்கா திட்ட ஆலோசனைக் குழுவில் முஸ்லிம் ஒருவரை ஏன் நியமனம் செய்யவில்லை என கேட்டேன். நீதி அமைச்சர் இது தொடர்பாக பிரதி அமைச்சர் முலப்பர் மௌலவி பதிலளிப்பார் என தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் முலப்பர் மௌலவி கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் எங்களின் அமைச்சு ஊடாக முன்னெடுக்கப்படவில்லை. அது ஜனாதிபதியும், ஜனாதிபதி செயலகமும் முன்னெடுத்து வருவதாக பிரதி அமைச்சர் பதிலளித்தார். நான் சொன்னேன் தேசிய நல்லிணக்க அமைச்சின் செயற்பாடுகள் ஜனாதிபதி, பிரதம மந்திரி, அமைச்சுகள் கவனம் எடுத்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தேன். இதுவரையும் கிளீன் ஸ்ரீலங்கா ஆலோசனைக் குழுவில் ஒரு முஸ்லிம் கூட இணைத்துக் கொள்ளாத நிலமை தொடர்கிறது.

இதுவரையும் அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவர் நியமனம் செய்ய முடியாத நிலமை நமது நாட்டில் தொடர்கிறது. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பொறுப்பை கொடுப்பதற்கு தகுதிகள் இல்லை என்று ஒருவரும் தகுதியானவர்களுக்கு அமைச்சுப் பதவியை கொடுப்போம் என்று இன்னும் ஒருவரும், நாங்கள் ஜனாதிபதியிடம் அமைச்சு கேட்டால் உடனே ஜனாதிபதி அவர்கள் எங்களுக்கு அமைச்சு ஒன்று தருவார் ஆனால் நாங்கள் கேட்கவில்லை என்று இன்னும் ஒருவரும் சொல்லிக்கொண்டே போகின்றனர். நீதித்துறையில் நேரடியாக ஈடுபட்ட கடந்த கால அரசாங்கங்களுக்கு என்ன நடந்தது என்பதனை நாம் எல்லோரும் பாடமாக கற்றுக் கொண்டோம். எனவே, நீதித்துறை சுதந்திரமான முறையில் செயற்பட வேண்டும் அதற்கு நாம் இடமளிக்க வேண்டும். ஏற்கனவே நீதிபதி லபார், நீதிபதி நவாஸ் ஆகியோருக்கு அநீதி இழைக்கப்பட்டது. தற்போது 28 வருட காலமாக நீதிபதியாக தனது கடைமையை நேர்மையாகவும் நாட்டுப்பற்றுடனும் செயற்பட்ட நீதிபதி இளஞ்செழியன் அவர்களுக்கு இந்த அரசாங்கத்தால் நீதி மறுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

1996ம் ஆண்டு யாழ் மண்ணில் அரங்கேறிய சூரியக்கதிர் நடவடிக்கைகளின் போது செம்மணி புதைகுழி, கிரிசாந்தி என புதைகுழிகள் தோண்டுமாறு அழைக்கப்பட்ட 08 நீதிபதிகள் வழக்கை விசாரணை செய்ய மறுத்தபோது 09வது நீதிபதியாக களத்தில் இறங்கிய நீதிபதி இளஞ்செழியன் எனக்கு பதவி உயர்வு வழங்காமல் இந்த அரசாங்கம் அநீதி இளைத்துள்ளதாக அவரே மனம் நொந்த நிலையில் அண்மையில் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு நமது நாட்டில் நீதியையும், சட்டத்தையும் மதித்து நாட்டுப்பற்றுடன் நீதித்துறையில் செயற்படுபவர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. நீதிச் சேவையில் இருந்து நான் ஒரு போதும் விரும்பி ஓய்வு பெறவில்லை என்றும் கட்டாயப்படுத்தி ஓய்வு பெறப்பட்டேன் எனவும் மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் நீதிபதியுமான மாணிக்கவாசகம் இளஞ்செழியன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். எனவே, நீதித்துறை சுதந்திரமான முறையில் இயங்க வேண்டும். ஏற்கனவே நீதியரசர்கள் லபார், நவாஸ் ஆகியோர்கள் நீதித்துறையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

(கே. எ. ஹமீட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *