நாமல் ராஜபக்ஷவின் சட்டக் கல்வித் தகுதியின் உண்மைத்தன்மை குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, நாடாளுமன்றத்தில் பாரிய கேள்வி
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டக் கல்வித் தகுதியின் உண்மைத்தன்ம குறித்து இணையத்தில் வெளியான பல புலனாய்வு அறிக்கைகளை மேற்கோள் காட்டி, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, நாடாளுமன்றத்தில் பாரிய கேள்விகளை எழுப்பினார்.
இணையத்தில் வெளியிடப்பட்ட பல புலனாய்வு அறிக்கைகளை மேற்கோள் காட்டி அவர் இந்த கேள்விகளை முன்வைத்தார்.
நாமலின் சட்டகல்வி பட்டத்தின் மர்மம்” (The Mystery of Namal’s Law Degree) மற்றும் “நாமலின் சட்டக் கல்லூரி சேர்க்கை கோப்பில் பட்டச் சான்றிதழ் இல்லை” (No Degree Certificate in Namal’s Law College File Admission) ஆகிய தலைப்புகளில் வெளியான அறிக்கைகளில் இந்த வெளிப்பாடுகள் விவரிக்கப்பட்டுள்ளதாகவும், இவை கவலையைத் தூண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நாமல் ராஜபக்ஷ, சிட்டி ஒஃப் லண்டன் பல்கலைக்கழகத்தில் பெற்ற சட்டப் பட்டம் அதன்பின்னர் இலங்கை சட்டக் கல்லூரி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டப் படிப்பில் சேர்க்கை பெறுவதற்காக அதைப் பயன்படுத்தியதில் உள்ள முரண்பாடுகளை ஊடகவியலாளர் நிர்மலா கண்ணங்கர அம்பலப்படுத்தியுள்ளதாக நளிந்த ஜயதிஸ்ஸ சபையில் தெரிவித்தார்.
அதில், 2009 செப்டம்பர் 15 ஆம் திகதியன்று வழங்கப்பட்ட சட்டக் கல்விக்கான சான்றிதழில், 54 நாட்களுக்கு முன்னர் பதவி விலகிய துணைவேந்தர் கையொப்பமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது அதன் செல்லுபடியாகும் தன்மை குறித்து சந்தேகங்களை எழுப்புகிறது.
நாமல் ராஜபக்ஷ, 2009 செப்டம்பர் 25 அன்று சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால், சிட்டி ஒஃப் லண்டன் பல்கலைக்கழகம், சட்டக் கல்லூரியால் 2009 அக்டோபர் 15 ஆம் திகதியன்றே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாமல் ராஜபக்ஷ ‘Bachelor of Law with Honors Class 3’ பட்டம் பெற்றுள்ளதாகக் கூறுகிறார். இந்தக் கல்வித் தகுதி பிரித்தானியாவின் சட்டப் பதிவுக்கான தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை.
எனவே, “சபையின் மற்றும் அதன் உறுப்பினர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க,” மதிய உணவுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகி இது குறித்து தெளிவுபடுத்துமாறு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, நாமல் ராஜபக்ஷவிடம் வலியுறுத்தினார்.
