மதினா புனித யாத்திரையின் போது டீசல் டேங்கர் மோதி பேருந்து தீக்கிரை: சவுதியில் 45 இந்தியர்கள் உயிரிழப்பு நடந்தது என்ன? ஹைதராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் விளக்கம்
சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட இந்திய யாத்ரீகர்கள் 45 பேர், பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். டீசல் டேங்கர் மீது பேருந்து மோதியதில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மல்லேபல்லி, பஜார் காட், ஆசிஃப் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த இஸ்லாமிய குடும்பத்தார், புனித ஹஜ் யாத்திரை செல்ல தீர்மானித்தனர். அதன்படி 4 சுற்றுலா ஏஜென்சிகள் மூலம் மொத்தம் 54 பேர், ஹைதராபாத்தில் இருந்து கடந்த 9-ம் தேதி சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
சவுதியில் மதினாவுக்கு புனித யாத்திரையை தொடங்கிய நிலையில், திங்கள்கிழமை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஹைதராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் கூறியதாவது: மெக்காவில் அனைவரும் பிரார்த்தனைகள் செய்து முடித்து விட்டு மதினாவுக்கு ஒரு சுற்றுலா பேருந்தில் செல்ல தீர்மானித்தனர். ஆனால், இதில் 4 பேர் மட்டும் மெக்காவிலேயே தங்கிவிட்டனர்.
பேருந்தில் இடம் இல்லாத காரணத்தால் எஞ்சிய 4 பேர் காரில் மதினாவுக்கு சாலை மார்க்கமாக சென்றனர். பேருந்தில் மொத்தம் 46 பேர் மதினாவுக்கு சென்று கொண்டிருந்தனர். மதினாவுக்கு 25 கி.மீ முன்னதாக இவர்கள்சென்ற பேருந்து, எதிரே வந்த டீசல் டேங்கர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த கோர விபத்து நடந்துள்ளது.
.அப்போது, அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளனர். டீசல் டேங்கர் மோதியதால், பேருந்து முழுவதும் உடனடியாக தீப்பிடித்து எரிந்தது. பேருந்தில் இருந்து வெளியே வர அவர்கள் முயற்சித்தும் பலனில்லை. இந்த கோர விபத்தில் 18 பெண்கள், 10 சிறுவர்கள், 17 ஆண்கள் என 45 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அப்துல் ஷோயப் என்பவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
பேருந்தில் இருந்த தீயை உள்ளூர் மக்கள் அணைக்க முயன்றுள்ளனர். அதன்பின்னர், தீயணைப்பு படையினர், போலீஸார் விரைந்து சென்று தீயை அணைத்தனர். 45 பேர் உயிரிழந்துள்ள விவரத்தை ஹஜ் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஹைதராபாத் பஜார் காட் பகுதியை சேர்ந்த 18 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உயிரிழந்தவர்களில் ஒருவர் மட்டும் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர். மற்ற 44 பேரும் ஹைதராபாத் பகுதியை சேர்ந்தவர்கள். மெக்காவில் தங்கிய 4 பேரும், பேருந்தில் இடம் இல்லாததால் இவர்களுக்கு முன்பு காரில் சென்ற 4 பேரும் உயிர் தப்பினர். சவுதி அரேபியாவில் பேருந்து விபத்தில் 45 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்ததும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளதாவது: மெக்கா – மதினா புனிதப் பயணம் மேற்கொண்ட 45 இந்திய இஸ்லாமியர்கள் உயிரிழந்ததை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவர்களது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ரியாத் மற்றும் ஜெட்டாவில் உள்ள நம் நாட்டின் தூதரகத்தினர் உடனடியாக சம்பவம் நடந்த இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் தேவைப்பட்ட உதவிகளை செய்து வருகின்றனர். நம்முடைய அதிகாரிகளும் சவுதி தூதரகத்தினருடன் பேசி தேவைப்பட்ட உதவிகளை செய்யுமாறு பேசி உள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உயிர் பிழைத்த ஒரே ஒரு அதிர்ஷ்டசாலி: சவுதி அரேபியா பேருந்து விபத்தில் 46 பேரில் 45 பேர் உயிரிழந்த நிலையில், முகமது அப்துல் ஷோயப் (24) என்ற இளைஞர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த அப்துல் ஷோயப், தனது குடும்பத்தினருடன் மெக்கா மற்றும் மதினாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்டார். மெக்காவில் இருந்து மதினாவுக்கு சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது இவர் பேருந்து ஓட்டுநரின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு பயணித்துள்ளார். டேங்கர் லாரி மோதும்போது, இவர் கீழே குதித்ததால் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இந்த கோர விபத்தில் உயிர் தப்பிய ஒரே நபர் இவர்தான். தற்போது அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவருடன் வந்த குடும்பத்தினர் அனைவரும் பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.
இந்த நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில்,” மதீனாவில் இந்தியர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானது அறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் மற்றும் குடும்பங்களுக்கு ரியாத் தூதரகம் மற்றும் ஜெட்டா துணைத் தூதரகம் முழு ஆதரவு அளித்து வருகின்றன.” எனக் குறிப்பிட்டுள்ளார்.ஜெட்டா துணைத் தூதரகம் வெளியிட்டிருக்கும் பதிவில், 24 மணிநேர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை அறிய 8002440003 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)
