2ஆவது ஒருநாள் போட்டி; முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. அதில் முடிவுக்கு வந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரில் 1:0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் முதல் போட்டிக்கு முன்னர் பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பினை தொடர்ந்து இலங்கை அணியின் சில வீரர்கள் பாதுகாப்பு காரணங்களை முன்னிலைப்படுத்தி மிகுதிப் போட்டிகளில் விளையாட மறுத்திருந்தனர்.
இருப்பினும் பாகிஸ்தானின் பாதுகாப்பு தொடர்பில் தெளிவு படுத்தப்பட்டு பின்னர் போட்டிகளில் பங்கேற்க இலங்கை அணி வீரர்கள் சம்மதம் தெரிவித்திருந்தார்கள். இதற்கமைய இன்றைய 2ஆவது போட்டியில் முதல் போட்டியில் ஆடிய இலங்கை அணியிலிருந்து ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மகேஷ் தீக்சன விற்கு பதிலாக பிரமோத் மதுஷான் அணியில் உள்ளவாங்கப்பட்டுள்ளார்.
மேலும் பாகிஸ்தான் அணி சார்பில் அணியின் தலைவரான சஹீன் அப்ரீடிக்கு பதிலாக இன்றைய போட்டியின் தலைவராக சல்மான் ஆஹா செயற்படுகிறார். மேலும் பாஹிம் அஸ்ரபிற்கு பதிலாக அப்ரார் அஹமட்டும், அப்ரீடிக்கு பதிலாக வசீம் ஜுனியரும் அணியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)
