மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவுக்கு இயந்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவுக்கு இயந்திரங்கள் கையளிக்கு நிகழ்வு செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்றது.
குறித்த வைத்தியசாலையில் மகப்பேற்றுப் பிரிவுக்கான இயந்திரங்கள் இல்லாமையால் பல வருடங்களாக மகப்பேற்றுப் பிரிவு இயங்காமல் காணப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில், வைத்தியர்கள், ஊர் பிரமுகர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் ஆகியோர் எடுத்துக் கொண்ட முயற்சியால் மகப்பேற்றுப் பிரிவை இயங்க வைக்க பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் சி.ரி.ஜீ, இயந்திரம், ஸ்பைனல் போர்ட் ஆகியவை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மீராவோடை பிரதேச வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரி வை. சோபிதா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வரன், நிர்வாக உத்தியோகத்தர் ரகுராஜா, திட்டமிடல் வைத்திய அதிகாரி தனூசியா, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான கே.பி.எஸ்.ஹமீட் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


(எச்.எம்.எம்.பர்ஸான்)
