இலங்கை கிரிக்கெட் அணி க்கு பாகிஸ்தானில் கடும் பாதுகாப்பு; போட்டி தினங்களில் மாற்றம்
இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து எழுந்துள்ள பாதுகாப்பு கவலைகளை அடுத்து, பாகிஸ்தானில் உள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளதாக அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூரியவுடன் ஜனாதிபதி கலந்துரையாடி, பாகிஸ்தான் அதிகாரிகளுடன் நெருக்கமாக இணைந்து அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகோந்தவும் பாகிஸ்தானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் நேரடியாகப் பேசியதன் மூலம், இலங்கை அணியைச் சுற்றியுள்ள பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலிலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மற்றும் இடைக்கால உள்துறை அமைச்சராகவும் உள்ள மொஹ்சின் நக்வி, நேற்றிரவு இலங்கை வீரர்களைச் சந்தித்து, பாதுகாப்பு உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
இந்நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகள் ஒவ்வொன்றும் ஒரு நாள் பின்னுக்கு மாற்றப்பட்டுள்ளன. அவை தற்போது வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். டி20 மும்முனைப் போட்டித் தொடர் வரும் 18ஆம் திகதி ராவல்பிண்டியில் ஆரம்பமாகவுள்ளது.
