தலாவ பஸ் விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு
தலாவ ஜயகங்க சந்திப்பகுதியில் நேற்று திங்கட்கிழமை (10) பிற்பகல் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 47 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
17 வயதுடைய தலாவ மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இன்று 12.30 மணியளவில் தலாவ பகுதியில் இருந்து ஜயகங்கை ஊடாக 411கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த பஸ் பின்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு முந்திச் செல்வதற்காக இடம் கொடுக்க முயற்சித்த போது
தலாவ நகரை கடந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் 06 அடி பள்ளத்தில் கவிழ்ந்து 47 பயணிகள் காயமடைந்துள்ளனர். இதன் போது க . பொ . த . உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மற்றும் க .பொ . தராதர சாதாரண தர கருத்தரங்கில் கலந்து கொண்ட 09 மாணவர்களும் பயணித்துள்ளனர்.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்களை தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இதன் போது 17 வயதுடைய மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தது.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 47 பேரில் 16 ஆண்களும் 31 பெண்களும் அடங்குகின்றனர். இவர்கள் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன் இவர்களுக்கான சிகிச்சை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் திலக்கரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



(ஆரிப் – அநுராதபுரம்)
