“பிரஜாசக்தி” தவிசாளர்களுக்கு நியமனங்கள் வழங்கி வைப்பு
ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உதித்த, கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் “பிரஜாசக்தி” வறுமை ஒழிப்புக்கான தேசிய இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கான சமூக அபிவிருத்திக் குழுக்களின் தவிசாளர்களுக்கான நியமனங்கள் நேற்று (06) வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
அம்பாறை மாவட்ட கரையோர பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் சாய்ந்தமருது, கல்முனை, நிந்தவூர் மற்றும் காரைதீவு ஆகிய பிரதேசங்களினுடைய நியமனங்கள் அந்தந்த பிரதேச செயலக கேட்போர் கூடங்களில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கான ‘பிரஜாசக்தி’ வறுமை ஒழிப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள இத்தவிசாளர்கள், கிராம அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரித்தல், நடைமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வைப் பணிகளுக்காக அரசினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், பிரதி, உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள், அபிவிருத்தி, காரியாலய, கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.







(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
