2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஜனாதிபதியால் நாளை பாராளும்னறில் சமர்ப்பிப்பு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நாளை (07) நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் நாளை பகல் ஒரு மணிக்கு வரவுசெலவுத்திட்டம் தொடர்பான ஜனாதிபதியின் விளக்கவுரையும் இடம்பெறவுள்ளது.
எனவே, “இம்முறை அபிவிருத்தி சார்ந்த வரவு செலவுத் திட்டமே முன்வைக்கப்படும். இதுவரை காலமும் சலுகைகள் கிடைக்காத மக்களுக்கும் எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் வர்த்தக சமூகத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள் என சகலருக்கும் அவசியமான அபிவிருத்தி வரவுசெலவுத் திட்டத்தை அதாவது நாட்டை கட்டியெழுப்பும் வரவுசெலவுத்திட்டத்தை முன்வைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக” கொழும்பில் நேற்று (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் சமர்ப்பிக்கப்படும் இரண்டாவது வரவுசெலவுத் திட்டமாக இது அமைவதுடன் மிகவும் முக்கியமான திருப்புமுனையாகவும் இது கருதப்படுகிறது. பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கமைவாக இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புகளை மீள செலுத்தும் பணிகள் எதிர்வரும் 2028ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பமாகின்றன.
எனவே, அதற்கு இடைப்பட்ட 2026 மற்றும் 2027ஆம் ஆண்டு ஆகிய இரு வருடங்கள் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் முக்கியமாக இரு வருடங்களாக கொள்ளப்படுகின்றன. 2028 ஆம் ஆண்டாகும் போது இலங்கை 05 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக செலுத்த வேண்டி ஏற்படுமென்று நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளார்கள்.
அண்மையில் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற “இலங்கையின் மீட்சிக்கான பாதை: கடன் மற்றும் நிர்வாகம்” (Sri Lanka’s Road to Recovery: Debt and Governance) என்ற கருத்தரங்கில் “2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை நாட்டில் உருவாக்கப்படுமென” ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு ஏதுவாக இம்முறை வரவுசெலவுத் திட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பின்னணியில், வரவுசெலவுத் திட்டம் மீதான உரை நாளை இடம்பெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து நவம்பர் 08ஆம் திகதி முதல் டிசம்பர் 05ஆம் திகதிவரை விவாதத்தை நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.
நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் நாளை 07ஆம் திகதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டுக்காக (வரவுசெலவுத்திட்ட உரை) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து நவம்பர் 08ஆம் திகதி முதல் நவம்பர் 14ஆம் திகதி வரை 06 நாட்கள் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை நடத்துவதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நவம்பர் 14ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு இரண்டாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இதன் பின்னர் நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 05ஆம் திகதி வரை 17 நாட்கள் குழுநிலை விவாதம் நடத்தப்படவுள்ளதுடன், டிசம்பர் 05ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு மூன்றாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் வரவுசெலவுத்திட்ட விவாதம் இடம்பெறும். குழுநிலை விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் திங்கட்கிழமைகளில் காலை 9.30 மணிக்கும் ஏனைய நாட்களில் காலை 9.00 மணிக்கும் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய இக்காலப் பகுதியில் நிலையியற் கட்டளை 22இல் குறிப்பிடப்பட்டுள்ள 01 முதல் 06 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு மேலதிகமாக வாய்மூல விடைக்கான ஐந்து கேள்விகள் மற்றும் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்வி ஒன்றுக்காகவும் நேரத்தை ஒதுக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக்காலப் பகுதியில் மாலை 6.00 மணிவரையும் வரவுசெலவுத்திட்ட விவாதத்தை நடத்துவதற்கும் வாக்கெடுப்பு நடத்தப்படும் தினங்கள் தவிர்ந்த ஏனைய தினங்களில் மாலை 6.00 மணி முதல் 6.30 மணிவரையான காலப்பகுதியை ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கு 50:50 என்ற அடிப்படையில் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைகளுக்காக ஒதுக்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
