உலகம்

தெலங்கானாவில் பேருந்து மீது டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்தில்மூன்று மாத பெண் குழந்தை உட்பட 24 பேர் உயிரிழப்பு..!

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் செவெல்லா அருகே மிர்ஜாகுடா – கானாபூர் சாலையில் திங்கள்கிழமை காலையில் ஆர்டிசி பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் மூன்று மாத பெண் குழந்தை உட்பட 24 பேர் உயிரிழந்தனர்.

விகாராபாத் – ஹைதராபாத் சாலையில் திங்கள்கிழமை காலை 7.30 மணியளவில் இரு சக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது டிப்பர் லாரி ஆர்டிசி பேருந்து மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த பயங்கர விபத்தில் 24 பேர் இறந்ததாக செவெல்லா அரசு மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்

இதுகுறித்து பேசிய செவெல்லா அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் ராஜேந்திர பிரசாத், “ இந்த விபத்தில் இதுவரை இருபது பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களின் உடல்கள் எங்கள் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனை நடைமுறைகள் முடிந்த பிறகு உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். சிறு காயங்களுடன் உள்ள 6 பயணிகள் செவெல்லா சமூக சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலத்த காயங்களுடன் உள்ளவர்கள் பட்டினம் மஹிந்திரா ரெட்டி மருத்துவமனை மற்றும் பாஸ்கர் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்” என்றார்

இந்த நிலையில், செவெல்லாவில் நடந்த லாரி – பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனை மற்றும் உஸ்மானியா பொது மருத்துவமனைகளில் ஏற்பாடுகள் செய்யுமாறு அதிகாரிகளுக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவு பிறப்பித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த அவர், ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

.தெலங்கானா சுகாதார அமைச்சர் சி. தாமோதர் ராஜ நரசிம்மா, மூத்த சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் தொலைபேசியில் பேசி, செவெல்லா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களின் நிலை குறித்து விசாரித்தார். உயர் சிகிச்சை தேவைப்படுபவர்களை உடனடியாக ஹைதராபாத்திற்கு மாற்றுமாறும், மூத்த அதிகாரிகள் தாமதமின்றி மருத்துவமனைகளுக்குச் செல்லுமாறும் அவர் அறிவுறுத்தினார்.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *