உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு
க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள 2,362 பரீட்சை நிலையங்களில் உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இம்முறை பரீட்சைக்காக பாடசாலை விண்ணப்பதாரர்கள் 246,521 பேரும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் 94,004 பேரும் உட்பட மொத்தம் 340,525 விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளனர்.
அத்துடன், இம்முறை உயர்தரப் பரீட்சைக்காக நடத்தப்படும் அனைத்து தனியார் வகுப்புகள், பாடத்திட்டங்கள் தொடர்பான கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகள் மற்றும் ஊகக் கேள்வித்தாள்கள் கலந்துரையாடல் உட்பட பரீட்சை தொடர்பான அனைத்து விளம்பர நடவடிக்கைகளும் நாளை (04) நள்ளிரவு 12.00 மணி முதல் தடை செய்யப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
பரீட்சைக்கான பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதாகவும், அனுமதி அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் இன்று முதல் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே,
“இந்த சந்தர்ப்பத்தில் பிள்ளைகள் பாடத்திட்டத்தை முடித்து பரீட்சைக்கு தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். எனவே, மிகவும் நல்ல மனநிலையுடன் பரீட்சைக்கு தயாராகுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
வினாத்தாள்களில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த வருடத்தைப் போலவேதான் இருக்கும்.
எனவே, பிள்ளைகள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அட்டவணைக்கு அமைய பரீட்சைக்கு நன்கு தயாராகி, நல்ல மனநிலையுடன், அமைதியாக உங்களுக்கு கிடைக்கும் வினாத்தாளை உரிய நேரத்திற்குள் நன்றாக வாசித்து, பதில்களை ஒழுங்கமைத்துக்கொண்டு பதிலளிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
பெற்றோர்களுக்கும் நான் சொல்ல விரும்புவது, இது பிள்ளைகளின் பாடசாலை வாழ்க்கையின் இறுதி ஆண்டில் நடைபெறும் பரீட்சை.
இந்தப் பரீட்சை பிள்ளைகளின் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான பரீட்சையாகும்.
எனவே, இந்தப் பரீட்சையின் போது பிள்ளைகள் அழுத்தம் இல்லாமல் பரீட்சையை எதிர்கொள்வதற்கு வீட்டின் சூழலையும் நன்கு தயார் செய்து, பிள்ளைகளுக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்காமல், பரீட்சைக்கு அமைதியாக முகங்கொடுக்கத் தேவையான சூழலை அமைத்துக்கொடுக்குமாறு நான் அன்பான பெற்றோர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
