புத்தளம் சர்வ மத அமைப்பின் முன்னோடி சமூக நலத்திட்ட நிகழ்வு
முந்தல்புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பு, தேசிய சமாதான பேரவையின் ஆதரவுடன் புத்தளம் மாவட்டத்தில் பல்வேறு சமய நல்லிணக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் இன்று(31.10.2025) அந்த அமைப்பு புத்தளம் வண்ணாத்தவில்லு பிரதேசத்திலுள்ள மல்வில கிராமத்தில் ஒரு முன்னோடி சமூக நலன் திட்டத்தை மேற்கொண்டது.
மல்வில கிராமம் தொல்லியல் சிறப்பம்சம் நிறைந்த பகுதியாகும்.இக்கிராம மக்கள் பல்வேறு சிரமங்களையும் சவால்களையும் நீண்டகாலமாக எதிர்நோக்கி வருகின்றனர்.இக்கிராமத்தில் உள்ள பௌத்த விகாரையின் மதகுரு பொலன்னறுவை சீலானந்த தேரர் அவர்கள், சர்வமத அமைப்பின் நிர்வாகக் குழுக் கூட்டங்களில் பலமுறை தனது பிரதேச மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்ததன் பேரில், மாவட்ட சர்வமத குழுவினர் மக்களின் பிரச்சினைகளுக்கு பங்களிப்புச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த சமூக நலன் திட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
அந்த வகையில், பஹன மீடியா நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் ஸெய்யித் சாலிம் ரிபாயி மௌலானா, தனது பெற்றோர்களின் பெயரில் குடும்பத்தினரின் சார்பில் நிர்மாணித்த குழாய்க் கிணறு அங்குரார்ப்பணமும், சகல மதங்களையும் சேர்ந்த சிறார்கள் கற்கும் சர்வமத அறநெறி பாடசாலை அங்குராப்பணமும் இன்று நடைபெற்றன.இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாரளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.முஹம்மது பைஸல், புத்தளம் மாநகர மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் இணைந்து அங்குார்ப்பணம் செய்து வைத்தனர்.
நிகழ்வில் அரசு அதிகாரிகள், பொறுப்பான தலைவர்கள், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மத் பைசல், புத்தளம் மாநகர சபை முதல்வர். பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத், புத்தளம் மற்றும் வண்ணாத்தவில்லு பொலிஸ் நிலைய அதிகாரி, வனவிலங்கு திணைக்கள அதிகாரி ஆயுர்வேத மருத்துவமனை அதிகாரி மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக, பிரதேச மக்கள் வருகை தந்திருந்த அரச பிரதிநிதிகளுடன் பகிரங்க கலந்துரையாடலில் ஈடுபட்டு, நீண்டகாலமாக எதிர்நோக்கும் காட்டுயானைத் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளையும் முன்வைத்தனர்.இதனிடையே மல்வில மக்களின் பிரச்சினைகள்,தேவைகள் அடங்கிய புத்தளம் சர்வமத அமைப்பு தயாரித்த அறிக்கையும் பிரமுகர்களிடம் கையளிக்கப்பட்டன.
இதற்கிடையில், பாராளுமன்ற உறுப்பினர் பைசல் எம்.பி., மக்கள் முன்வைத்த பிரச்சினைகளை தீர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்ததோடு தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.
முன்மாதிரியான இத்திட்டத்தை செயற்படுத்திய புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பினர் பாராட்டுக்குரியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




(எம்.ஏ.ஏ.காசிம்)
