உள்நாடு

வடக்கு முஸ்லிம் வெளியேற்றத்தின் 35 ஆவது ஆண்டு நினைவுகூறல் யாழ்ப்பாணம் முஸ்லிம்களால் முன்னெடுப்பு

1990 களில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் முன்னெடுக்கப்பட்ட வடக்கு முஸ்லிம் மக்கள் மீதான பலவந்த இனச்சுத்திகரிப்பின் 35ஆவது வருட நினைவுகூறலும் ஊடகவியலாளர் மாநாடும் யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில் “எங்கள் நிலம், எங்கள் வாழ்வாதாரம் – எங்கள் அடிப்படை உரிமைகள்” எனும் தொனிப்பொருளில் நேற்று 2025.10.30 ஆம் திகதி யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகம் சார்பில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல் அஸீஸ் (காஸிமி), யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர் கௌரவ பி.எஸ்.எம்.சரபுலனாம், மக்கள் பணிமணை தலைவர் மௌலவி பி.ஏ.எஸ்.சுப்யான் (யாகூத்தி), மௌலவி அப்துல் மலிக், யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர் கௌரவ என்.எம்.அப்துல்லாஹ் மற்றும் யாழ் பெண்கள் அபிவிருத்தி மையத்தின் தலைவர் ஜனாபா சியானா நியாஸ் உள்ளிட்டோர் தமது கருத்துரைகளை முன்வைத்திருந்தனர்.

இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட முக்கிய கருத்துக்களின் சுருக்கமாக பின்வரும் அம்சங்களைக் குறிப்பிட முடியும்.

கடந்த 35 வருடங்களாக வடக்கு முஸ்லிம் மக்களின் விவகாரங்கள் போதுமான அளவிற்கு கருத்தில் எடுத்துக் கொள்ளப்படவோ அல்லது அவர்களுக்கான போதுமான தீர்வுகள் கிடைத்து விட்டதாகவோ வடக்கு முஸ்லிம்கள் இன்று வரை கருதவில்லை.

தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இதுவரை நீதி வழங்கப்படவில்லை என்றே வடக்கு முஸ்லிம் மக்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றார்கள். இவ் விடயத்தில் உரிய முன்னேற்றங்கள் ஏற்படுவதற்கு இலங்கை முஸ்லிம் மக்கள் சார்பிலும், தமிழ் மக்கள் சார்பிலும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டியது அவசியமாகும்.

வடக்கிலே ஒரு பலமான சமூகமாக “தமிழ் முஸ்லிம்” மக்கள் “வடக்கு மக்கள்” என்ற அடையாளத்தோடு ஐக்கியமாக ஒன்றினைவதற்கான முன்னெடுப்புக்களை இரு தரப்பினரும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னை அரசாங்கங்கள் விட்ட தவறை செய்யாமல் விரைந்து வடக்கு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் சார்ந்து உரிய தீர்வை வழங்குவதில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

வடக்கு முஸ்லிம் மக்கள் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டமையானது “இனச்சுத்திரிப்பு நடவடிக்கை என்பதுடன் முஸ்லிம் சமூகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல் நடவடிக்கை” என்பதை ஏற்று 1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புக்களை ஈடுசெய்யும் வகையிலும், எமது மீள்குடியேற்றத்தில் உள்ள தடைகளை கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையிலும் அமையக் கூடிய “ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நிறுவ வேண்டும்” என்றும் வடக்கு முஸ்லிம் மக்கள் நீண்டகாலமா எதிர்பார்த்திருக்கும் விடயமாகும்.

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திலுள்ள பிரச்சினைகளான காணி, வீடு, உட்கட்டமைப்புக்கள், மீள்குடியேற்ற கொடுப்பனவுகள், வெளியேற்றப்பட்ட போது ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்டஈடுகள், கல்வி, வாழ்வாதாரங்கள் மற்றும் தொழி வாய்ப்புக்கள் போன்ற அனைத்திலுமே குறைபாடுகள் காணப்படுகின்றது. இவற்றை வடக்கில் மீள்குடியேறும் முஸ்லிம் மக்களுக்கு முறையாக பெற்றுக் கொடுக்கும் வகையில் உருவாக்கப்படும் புதிய பொறிமுறையான ஜனாதிபதி ஆணைக்குழு உரிய சிபாரிசுகளை அரசிற்கு முன்வைக்க வேண்டும் என்பதுடன், உரிய சட்ட மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளை வடக்கு முஸ்லிம் மக்கள் சார்ந்து எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

வடக்குமாகாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் தமிழ் மக்களினதும், தமிழ் அரசியல் தலைவர்களினதும் ஈடுபாடும், பங்களிப்பும் எதிர்காலத்தில் முழுமையாகக் கிடைக்கப்பெற வேண்டும் என்றும், அதனை பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டனர்.

மேற்படி வடக்கு முஸ்லிம் மக்களின் 35 ஆவது இனச்சுத்திகரிப்பு நினைவுகூறல் ஊடக மாநாட்டில் உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி பதில் அதிபர் எம்.எஸ்.எப்.சப்னா, பாடசாலை ஆசிரியர்கள், மாநகரசபை உறுப்பினர் கௌரவ ஆர்.எப்.றிஸ்லா, சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மகேந்திரன் திருவரங்கன், இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

(என்.எம்.அப்துல்லாஹ்-
சுயாதீன ஊடகவியலாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *