ஓட்டமாவடியில் ஒரே மேடையில் 265 மாணவர்கள் கௌரவிப்பு
ஓட்டமாவடி தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு (29) புதன்கிழமை இடம்பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப் பிரிவு ஏற்பாடு செய்த இந்நிகழ்வு அதன் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் இடம்பெற்றது.
இதில், 2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரம், க.பொ.த உயர் தரம் ஆகிய பரீட்சைகளில் அனைத்துப் பாடங்களிலும் ஏ பெறுபேறுகளைப் பெற்ற மாணவ, மாணவிகள் பணப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன், மாணவர்களின் கரங்களினால் அவர்களின் பெற்றோர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வின்போது, மட்டக்களப்பு மத்தி மற்றும் கல்குடா கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 265 மாணவ, மாணவிகள் ஒரே மேடையில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டதுடன், ஏனைய அதிதிகளாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.எம்.சுபைர், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.




(எச்.எம்.எம்.பர்ஸான்)

