பேருவளை சட்டவிரோத வரி அறவீடு விவகாரம்: சட்ட நடவடிக்கை கோரி பேருவளை நகரசபைத் தலைவரிடம் வியாபாரிகள் மீண்டும் கூட்டுமனு!!

பேருவளை பாக்கீர் மக்கார் மாவத்தை சந்தையில் சட்டவிரோதமாக வரிப் பணம் அறவிட்டு வந்த அதிகாரிக்கு எதிராக 14 நாட்களுக்குள் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, சந்தை வியாபாரிகள் அனைவரும் கையொப்பமிட்ட மேலுமொரு மனு நகரசபைத் தலைவர் மபாஸிம் அஸாஹிர் அவர்களிடம் இன்று (28) சமர்ப்பிக்கப்பட்டது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நகரசபையின் உத்தியோகபூர்வ அனுமதி மற்றும் டெண்டர் இன்றி, சட்டவிரோதமாக தினசரி வரிப்பணம் அறவிடப்பட்டு வந்தமை குறித்து நகரசபைத் தலைவரிடம் முறையிடப்பட்டதை அடுத்து, குறித்த வரி அறவீடு உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட்டது.
நகரசபைத் தலைவர் மபாஸிம் அஸாஹிர் அவர்களின் இந்த உடனடி நடவடிக்கைக்கு சந்தை வியாபாரிகள் கூட்டாக நன்றி தெரிவித்தனர்.
இந்நிலையில், குறித்த சட்டவிரோத அறவீட்டில் ஈடுபட்ட அதிகாரி மீது உடனடியாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கமைய, வியாபாரிகள் சார்பாக இனாமுல் ஹசன் என்பவர், கையொப்பமிடப்பட்ட புதிய மனுவை நகரசபைத் தலைவர் மபாஸிம் அஸாஹிர் அவர்களிடம் நேரில் கையளித்தார்.
அந்த மனுவில், ‘சட்டவிரோதமாக நடந்தேறிய இந்த நிதி மோசடி குறித்து 14 நாட்களுக்குள் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என வியாபாரிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத நடவடிக்கையைத் தடுத்து நிறுத்திய நகரசபைத் தலைவரின் உடனடி செயலுக்கு நன்றி தெரிவித்த வியாபாரிகள், குற்றமிழைத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நகரசபைத் தலைவரின் முந்தைய உறுதிமொழியை நிறைவேற்றக் கோரியுள்ளனர்.
ஊழலுக்கு எதிரான தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் உள்ள நகரசபையின் நிதிக் கட்டுப்பாட்டையும், நியாயத்தையும் நிலைநாட்ட இந்த நடவடிக்கை அவசியம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பேருவளை : ஸாபித் துல்பிகார்
