கட்டுரை

அறிவுக்கடல் சங்கைக்குரிய கலாநிதி அஷ்ஷெய்கு முஹம்மது இப்றாஹிம் அல் – பாஸி (ரஹ்)

ஷாதுலிய்யா தரீக்காவின் உலக ஆன்மீகத் தலைவர் மர்ஹம் சங்கைக்குரிய ஷெய்கு ஸஜ்ஜாதா மர்ஹம் கலாநிதி அஷ்ஷெய்ஹ் முஹம்மத் அல் பாஸி பின் அஷ்ஷெய்ஹ் முஹம்மத் இப்றாஹிம் அல் – பாஸி அல் மக்கி. அஷ்ஷாதுலி (ரஹ்) அல் மக்கி அஷ்ஷாதுலி (ரஹ்) அவர்களின் 29 வருட ஞாபகர்த்த மஜ்லிஸ் நிகழ்ச்சிகள் நாளை 28.10.2025 ஆம் கங்கானம்கொட பளீள் ஹாஜியார் மாவத்தையில் உள்ள நூரானிய்யா ஸாவியா மஸ்ஜிதில் சீனன் கோட்டை பள்ளிச் சங்க இனைச் செயலாளரும் அகில இலங்கை ஜெம்மியத்துல் உலமா சபையின் நிரைவேற்றுக் குழு உறுப்பினருமான கலீபதுஷ் ஷாதுலி அஷ் ஷேஹ் இஹ்ஸானுதீன் அபுல் ஹஸன் (நளீமி) தலைமையில் நடைபெறும். ரயீஸுல் முகத்தமுஷ்ஷாதுலி

மௌலவி அல்ஹாஜ் எம்.என்.எம் இக்ராம் (அல்-பாஸி) விஷேட சொற்பொழிவாற்றுவார் இதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.

ஷாதுலிய்யாத் தரீக்காவின் உலக ஆன்மீகத் தலைவராக இருந்து தரீக்காவின் வளர்ச்சிக்காக அழியாத சேவைகளைச் செய்தார் பெரியார் சங்கைக்குரிய ஷெய்கு ஸஜ்ஜாதா மர்ஹ_ம் கலாநிதி அஷ்ஷெய்ஹ் முஹம்மத் அல் பாஸி பின் அஷ்ஷெய்ஹ் முஹம்மத் இப்றாஹிம் அல் – பாஸி அல் மக்கி. அஷ்ஷாதுலி (ரஹ்)இவ்வுலகை விட்டு பிரிந்து 29 வருடங்களாகின்ற போதிலும் இப்பெரியார் இஸ்லாத்திற்கு விசேடமாக ஷாதுலிய்யாத் தரீக்காவின் வளர்ச்சிக்கும் ஆற்றிய பணிகள் என்றும் அழியாததே. சுமார் எட்டு தசாப்தங்களுக்கு மேலாக இவ்வாறு சேவையாற்றிய அறிவுக்கடல் அஷ்ஷெய்ஹ் முஹம்மத் அல் பாஸிஅல் மக்கி அஷ்ஷாதுலி (ரஹ்) அவர்கள் 07/09 / 1997 தங்களது 102 ஆவது வயதில் புனித மக்கமா நகரில் உள்ள ஷாதுலிய்யா தரீக்காவின் தலைமையகமான “பைத்துல் பாஸி”யில் வபாத்தானார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரது மறைவு கேள்விப்பட்டதும் உலகெங்கிலுமுள்ள ஷாதுலிய்யா தரீக்காவின் இஹ்வான்கள் குறிப்பாகவும் முஸ்லிம் சமுதாயம் பொதுவாகவும் ஆழ்ந்த கவலையும் மன வேதனையையும் அடைந்தனர் என்பதில் ஐயமில்லை.

சங்கைக்குரிய சேகு நாயகம் அவர்கள் நபிகள் கோமான் முஹம்மது (ஸல்) அவர்களின் நேரடி வழித் தோன்றலில் மக்காவில் பிரபல்யமும் கௌரவமும் மிக்க அல்பாஸி குடும்பத்தில் பிறந்தார்கள். உலக ஷாதுலிய்யாத் தரீக்காவின் தலைவராகப் பல்லாண்டுகள் அரும்பெரும் பணியாற்றிய அன்னார் எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் இறையியல் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளார்கள். அன்னார் இஸ்லாமிய சட்டத்துறையில் வல்லுநராகவும் ஒரு சிறந்த இஸ்லாமிய கவிஞராகவும் தலைசிறந்த சன்மார்க்க போதகராகவும் இஸ்லாமிய தத்துவ ஞானத்தில் தேர்ச்சி பெற்ற சன்மார்க்க பெரியாராகவும் தலைசிறந்த பேச்சாளராகவும் கல்விமானாகவும் திகழ்ந்தார்கள். ஆன்மீகத் துறையில் அன்னாரது சேவைகள் சவுதி அரேபியா மன்னர்களினதும் உலக இஸ்லாமிய தலைவர்கள் இஸ்லாமிய பேரறிஞர்கள் உட்பட முழு உலக முஸ்லிம்களின் கவனத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றிருந்தது என்றால் அது மிகையாகாது. அன்னார் “முஅத்தா ” எனும் ஹதீஸ் கிரந்தம் முழுவதும் மனனஞ் செய்திருந்தார்கள். சங்கைக்குரிய செய்கு நாயகம் கலாநிதி அல் பாஸி அவர்கள் சவுதி அரேபியா அரச ஆலோசனைச் சபையின் முன்னாள் உறுப்பினராகவும் உலக முஸ்லிம் காங்கிரஸின் தலைவராகவும் சேவையாற்றியுள்ளார்கள்.

சேகு நாயகம் அவர்கள் அப்போது புனித மக்காவில் உள்ள புனித கஃபத்துல்லாவில் பாபுல் அஜ்யாத் நுழைவாயில் விரிவுரைகள் பல நிகழ்த்தி வந்துள்ளார்கள். புனித கஃபாவில் மஃரிப், இஷாத் தொழுகைகளுக் கிடையே புனித குர்ஆன் விளக்கம், அல் ஹதீஸ் விளக்கம் ஆகியவற்றை மாலிக்கி மத்ஹபு பிரிவுக்கு உட்பட்டதாக இஸ்லாமிய மனிதவியல் சட்ட கோட்பாட்டின் மீது விரிவுரை நிகழ்த்தி வந்துள்ளார்.

ஹஜ் காலத்தில் சேகு நாயகம் அவர்கள் நான்கு மத்ஹபுகளுக்கும் கடமைகள் பற்றிய விளக்கவுரை நிகழ்த்துபவராகத் திகழ்ந்தார்கள். இப்புனித பணியை பல ஆண்டுகள் செய்து வந்த அன்னார் தமது மூப்புக் காரணமாக இப்பணியில் இருந்து தாமே ஓய்வு பெற்றுக்கொண்டார்.

அன்றைய சவுதி மன்னரான அப்துல் அஸீஸ் மற்றும் மேன்மை தங்கிய அரசர் ஸவூத் பின் பைசால் ஆகியோருடன் நெருங்கிப் பழகிய அன்னார் சவூதி அரசால் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பல அரசுத் தூதுக் குழுக்களில் அங்கம் வகித்து வந்தார்கள். இதன் மூலம் ராஜதந்திர ரீதியில் அன்னாரது பணி பாராட்டத்தக்கதாக அமைந்திருந்தது. ஷாதுலிய்யா தரீக்காவின் உலக சேகு ஸஜ்ஜாதாவாக திகழ்ந்த அன்னார் மக்காவின் புனித கஃபத்துல்லாஹ் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 200 யார் தூரமளவில் அமைந்துள்ள ஷாதுலிய்யா தரீக்காவின் தலைமையகமான புனித பைத்துல் பாஸியில் உலக ஷாதுலிய்யா இஹ்வான்களை சந்தித்து வந்தார்கள். பல முறை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அன்னார் இலங்கையில் தனது இரு இஹ்வான்களையும் ஏனைய முஸ்லிம்களையும் சந்தித்து அவர்களுக்காக பிரார்த்தித்து வந்தார்கள். குறிப்பாக இலங்கைத் திருநாட்டில் சாந்தி சமாதானம் நிலை பெற அன்னார் அடிக்கடி புனித கஃபாவில் பிரார்த்தித்து வந்தார்கள். சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் அவர்களின் பணிகள் மூலம் இலங்கையில் மாத்திரமன்றி மொரோக்கோ, அல்ஜீரியா, துருக்கி, திருப்பாலிடானியா, எகிப்து, இந்தியா, சூடான், லிபியா உட்பட பல உலக நாடுகளிலும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஆன்மீக ஒளியை பெற்றவர்களாக திகழ்கிறார்கள். இலங்கையில் ஷாதுலிய்யா தரீக்காவின் கோட்டையாகத் திகழும் சீனன் கோட்டை பள்ளி சங்கத்தின் கோஷகராகவும் அன்னார் திகழ்ந்தார்கள். ஒரு தடவை ஹஜ்ஜுக்குச் சென்று புனித கஃபாவுக்கு போவதற்கு முந்திய தினம் சேகு நாயகத்தின் ஆசீர்வாதத்தை பெறச் சென்ற இலங்கை ஹஜ்ஜாஜிகளிடம் இந்தத் தடவை உங்களுக்கு ‘ஹஜ்ஜுல் அக்பர்’ கிடைத்திருக்கிறது என்று சேகு நாயகம் ஹஜ்ஜாஜிகளிடம் சொல்லியுள்ளார்கள். இது 70 ஹஜ்ஜுகளைச் செய்த நன்மைகளை உங்களுக்கு வழங்கும், நீங்கள் வருவதற்கு சில நேரத்திற்கு முன்னர்தான் நாளை அரபா என்று ஜும்மா நடத்தும் மக்கா இமாம் அவர்கள் என்னிடம் வந்து அவருக்கு துஆ செய்யுமாறு கேட்டு விட்டுச் சென்றார்கள். நானும் எனது பெயரில் துஆ செய்யுமாறு அவரிடமும் உங்களிடமும் வேண்டுகிறேன் என்றார்கள்.

புனித அரபா ஜமாஅத்தை வழி நடாத்தும் இமாம் அவர்களும் சேகு நாயகத்தின் மதிப்பு கண்ணியம் அறிந்து அன்னாரின் இல்லம் வந்து ஆசிர்வாதம் பெறுகிறார்கள் என்றால் சேகு நாயகம் ஒரு பக்குவப்பட்ட மதிக்கப்பட்ட ஒரு மார்க்க அறிஞர் என்பதை உணர முடியும். சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் அவர்கள் 1991 ஆம் ஆண்டில் இலங்கை வந்திருந்தபோது ஒருநாள் அவர்களை சந்தித்து நாம் அறிவுரைகளைக் கேட்டு கொண்டிருந்தோம். அப்போது அன்னாரின் இருபுறமும் அன்னாரின் சகோதரர் மர்ஹும் அஷ்ஷெய்கு முஹம்மது அப்துல் வஹாப்,செய்ஹ் ஸஜ்ஜாதா அல் – பாஸி அவர்களின் புதல்வர் சேகு லாபிகுல் மதனி அல் – பாஸி அவர்களுமாக மூன்று பேரும் மூன்று கதிரைகளில் உட்கார்ந்தவர்களாக இருந்தார்கள். சேகு நாயகம் அவர்கள் தமது சொற்பொழிவின் நடுவில் அங்கிருந்த கலீபா மௌலவி அப்துல் ஹமீத் (பஹ்ஜி) அவர்களைப் பார்த்து இன்னொரு கதிரையைக் கொண்டு வருமாறு பணித்தார்கள். கலீபாவுக்கும் ஏனையோருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. கலீபா இன்னொரு கதிரையைக் கொண்டு வந்து சேகு நாயகத்தின் அருகில் வைத்தார்கள். தொடர்ந்து அவர் தமது முஸாக்ராவை நடத்திக் கொண்டு போகும் போது திடீரென எழுந்து நின்றார்கள். சற்று நேரத்தில் தமது அன்புக்குரிய சேகு நாயகம் மர்ஹும் அஷ்ஷெய்கு ஹம்ஸா பின் அஷ் ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் அலவியத்துல் காதிரி அவர்கள் வந்து ஒருவரையொருவர் அணைத்து முஸாபஹா செய்தனர். இந்நிகழ்ச்சி அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது. அஷ்ஷெய்கு ஹம்ஸா ஆலிம் அவர்களுடைய வருகை பற்றி எந்த முன்னறிவிப்பும் இல்லாத போதும் காமிலான குதுபாகிய சங்கைக்குரிய சேகு நாயகம் அவர்களுக்கு தமது அகக் கண்ணுக்கு அன்னாரின் வருகை தென்பட்டது என்பதுதான் உண்மை. அழகிய தோற்றம் கொண்டு அன்னார் தக்வா உள்ள ஓர் அடியானாக இவ்வுலகில் அவாழ்ந்தார் எவ்வேலையிலும் தஸ்பீஹ் கோர்வையை கையில் வைத்து திக்ர் ஸலவாத் ஓதியதோடு இரவு மற்றும் அதிகாலை வேலையில் புனித அல் குர்ஆனை ஓதபவராகவும் இருந்ததை நாம் கண்கூடாகக் கண்டோம். சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் அவர்கள் நம் மத்தியில் இன்றில்லை. ஆனால் இறை நல்லடியார்கள் உலகில் வாழ்ந்தாலும் நன்மை மறைந்தாலும் நன்மை என்ற அமுத மொழிக்கு ஒப்ப அன்னாரது போதனைகளை நாம் எடுத்து நடப்பதுடன் தரீக்காவின் நல் அமல்களை சரியாக கடைப்பிடித்தொழுக வேண்டும். அதுவே நாம் அன்னாருக்கு செய்யக்கூடிய கௌரவமாகும்.

அஸர் தொழுகையை தொடர்ந்து கதமுல் குர்ஆன் மஜ்லிஸ{ம்,

மஃரிப் தொழுகையை தொடர்ந்து வலீபா, யாகூதிய்யா, ஹரீரி மௌலித் மஜ்லிஸ{ம். இஷா தொழுகையை தொடர்ந்து ஹலரா, முதாகராவும் இடம் பெறும் இம் மஜ்லிஸில் கலீபதுஷ் ஷாதுலிகளான மௌலவி எம்.எம்.எம் ஸைனுல்ஆப்தீன் (பஹ்ஜி), மௌலவி அல் ஹாஜ் எம்.ஐ.எம் ரபீக் (பஹ்ஜி), மௌலவி எம்.ஐ.எம் பாரூக் (மக்கி), மௌலவி எம்.ஜே.எம் பஸ்லான் (அஷ்ரபி – பீ ஏ) நூரானிய்யா ஸாவியா மஸ்ஜிதின இமாம்; களான மௌலவி எம் ஆஸாத் (அஜ்வாதி) மௌலவி எம்.அப்துர் ரஹ்மான் (ஷாதுலி) ஆகியோர் கலந்து கொள்வர்.

(பேருவளை பீ. எம். முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *