உள்நாடு

நாட்டில் அரசியல்வாதிகள், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம்

வெலிகம பிரதேச சபைத்தவிசாளரின் கொலைக்குற்றவாளிகளை உடனடியாகக்கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெலிகமவில் புதன்கிழமை (22) காலை இடம்பெற்ற வெலிகம பிரதேச சபைத்தவிசாளருடைய அகோரமான கொலைச்சம்பவம் எல்லோரையும் மிக மோசமாகப் பாதித்துள்ளது.

இக்கொலைச்சம்பவம் சம்பந்தமாக உரிய விசாரணை மேற்கொள்ளப்படுவதுடன் சட்ட, ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சர் இது சம்பந்தமான விளக்கத்தை பாராளுமன்றத்தில் விடுக்க வேண்டும்.

இன்று அரசியல்வாதிகளுடைய பாதுகாப்பு மாத்திரமல்ல, பொதுமக்களுடைய பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கின்றது. திட்டமிட்டு பட்டப்பகலில் ஒரு காரியாலயத்திற்குள் புகுந்து ஒரு உள்ளூராட்சி சபைத்தவிசாளரைக்கொலை செய்வது சாதாரணமான விடயமல்ல.

இந்த உள்ளூராட்சித்தவிசாளரை நியமனமிக்கின்ற தினத்தில் அவருக்குச்சார்பாக வாக்களிக்கவிருந்தவர்களை கடத்திச்சென்று தடுத்து வைத்திருந்த சம்பவம் அரசாங்கத்தின் மேல் சந்தேகமெழுந்திருந்தது.

இப்பின்னணியில் இவ்வாறான கொலை நடைபெற்றிருப்பது என்பது அரசியல் ரீதியாக இதற்கு சம்பந்தமிருக்கிறதா? ஏற்கனவே இதை வேறுபக்கங்களில் திசைதிருப்புவதற்காக கொலையுண்டவரை அவமானப்படுத்தும் அடிப்படையில் சில காரணங்களைச்சொல்ல சில ஊடகங்கள் முயற்சிக்கின்றன. அதற்குப்பின்னால் அரச தரப்பினரும் இருக்கிறார்களா? என்ற சந்தேகம் வலுவாக இருக்கிறது.

இச்சூழ்நிலையில் இது சம்பந்தமாக அவசரமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நீதிமன்றத்திற்குள்ளே கொலைச்சம்பவத்தை திட்டமிட்டார் என்ற அடிப்படையில் நாட்டிற்கு வெளியில் சென்று பெண்ணொருவரைக் கைது செய்ய முடியுமாயின், இன்று நாட்டுக்குள்ளே கொலையை நடாத்திய கொலைதாரிகளை மிக அவசரமாககைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென மிக அழுத்தம் திருத்தமாக வேண்டிக்கொள்கின்றோம் எனத்தெரிவித்தார்.

(எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *