புத்தளம் – ரத்மல்யாய கிராம சேவகர் பிரிவில் சாதனையாளர்களை கெளரவித்த EDUCUS இளைஞர் அமைப்பு
புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 618/பி ரத்மல்யாய கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட சாதனையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள்,சமூக சேவையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று நேற்று(19) புத்தளம் ரத்மல்யாய அஸ்னா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
புத்தளம் ரத்மல்யாய பகுதியில் இயங்கி வரும் EDUCUS இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எம்.கியாஸ் ஆசிரியர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக புத்தளம் மாநகர சபையின் மேயர் கெளரவ பொறியியலாளர் ரின்ஷாட் அஹ்மட் அவர்கள் கலந்துகொண்டதுடன்,
புத்தளம் மாநகர சபை உறுப்பினர் எம்.டி.எம்.சஹ்ரான், பொறியியலாளர் முஹம்மது யாசின், சட்டத்தரணி முஹம்மட் ஜிப்fபின், புத்தளம் மாநகர மேயரின் இணைப்பாளர் முஹம்மது ஜஹாஸ், நுரைச்சோலை மு.ம.வி ஓய்வு பெற்ற பிரதி அதிபர் முஹம்மது ரஸீன், உட்பட உலமாக்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள், தொழிலதிபர்கள், கல்விமான்கள், சமூக சேவையாளர்கள், ரத்மல்யாய EDUCUS இளைஞர் அமைப்பின் பிரதிநிதிகள், இளைஞர் அமைப்பினர், பெற்றோர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது ரத்மல்யாய கிராம சேவகர் பிரிவில் முதல் கலாநிதியான வவுனியா பல்கலைக்கழகத்தின் வருகை விரிவுரையாளரும், புத்தளம் எருக்கலம்பிட்டி மு.ம.வி ஆங்கில பாட ஆசிரியருமான அஷ்ஷெய்க் பி.நிஹ்மதுல்லாஹ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும், 2023 ஆம் ஆண்டு இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தால் இலங்கையிலிருந்து நால்வருள் ஒருவராகத் தெரிவுசெய்யப்பட்டு நேபாளத்தின் தலைநகரம் காத்மண்டுவில் இடம்பெற்ற சர்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் மாநாட்டில் இலங்கையினைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஐ.எம்.இஷ்பாக், மலேசியாவில் நடைபெற்ற ஜூனியர் அபகஸ் போட்டியில் கலந்துகொண்ட அப்துல் பாசித் ,இசையும், அசையும் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்ற எம்.ஆர்.மர்யம் ஆகியோர் புத்தளம் மாநகர மேயரினால் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன், ரத்மல்யாய கிராம சேவகர் பிரிவில் இருந்து 2020 – 2023 ஆண்டு காலப் பகுதியில் பல்கலைக்கழகம் சென்ற மாணவர்கள்,
சாதாரண தரப் பரீட்சை சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள், ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையல் சித்திபெற்ற மாணவர்கள்,
சமூக சேவையாளர்கள், சமூக சேவை கழகங்கள்
மற்றும் உலமாக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் dream Way International, Ever Green மற்றும் Muhamathiya பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.













(ரஸீன் ரஸ்மின்)