உள்நாடு

பொருளாதார மீட்சிக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் வித்திடும் மெய்ஞ்ஞான ஒளியாக அமையட்டும்; பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

தீபாவளியைக் கொண்டாடும் உலகெங்குமுள்ள மக்களுக்கும், விசேடமாக இலங்கைவாழ் மக்களுக்கும் எனது உளம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தீபாவளி தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தீபாவளிப் பண்டிகை இருள் நீங்கி, ஒளி பிறப்பதை அடையாளப்படுத்துகின்றது.

இன்று, இலங்கை தேசம் ஒரு முக்கியமான திருப்புமுனையில் நிற்கிறது. நீண்ட கால பொருளாதார, சமூக இருளிலிருந்தும், பின்னடைவுகளிலிருந்தும் விடுபட, மக்கள் புதிய எதிர்பார்ப்புக்களையும், நம்பிக்கைகளையும் சுமந்து நிற்கும் ஒரு காலகட்டம் இது.

மக்களின் வளர்ச்சிக்கான ஒரு புதிய யுகத்தை நாம் கூட்டாக ஆரம்பித்துள்ளோம்.

இந்தத் தீபாவளியின் ஒளி, பொருளாதார மீட்சிக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் வித்திடும் மெய்ஞ்ஞான ஒளியாக அமையட்டும்.

நாம் அனைவரும் கலாசாரப் பல்வகைமையின் மதிப்பை உணர்ந்து, கௌரவம், ஏற்றுக்கொள்தல், சகோதரத்துவம் ஆகிய பண்புகளுடன் கைகோர்ப்போம்.

வீடுகளிலும், நகரங்களிலும் ஏற்றப்படும் ஆயிரக்கணக்கான தீபங்களின் ஒளி, அனைத்து இலங்கையர்களினதும் மனங்களில் நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் ஞானத்தின் ஒளியைப் பரவச் செய்வதாக அமையப் பிரார்த்திக்கிறேன் என பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *