சுகாதாரத்தையும் கல்வியையும் அடிப்படை உரிமைகளாக ஆக்க வேண்டும்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
இலவச சுகாதாரம் என்பது மனித மற்றும் அடிப்படை உரிமையாகும். நாட்டின் உச்ச சட்டமான அரசியலமைப்பின் 3 ஆம் அத்தியாயத்தில் அடிப்படை உரிமைகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், இலவச சுகாதாரதம் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை. நாட்டு மக்களுக்கு சுகாதாரத் துறையை ஓர் அடிப்படை உரிமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு இங்கு எந்த சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லை. நமது நாட்டின் அடிப்படை உரிமைகளும் மனித உரிமைகள் சட்டங்களும் மேற்கத்தியத்தை மையப்படுத்திய வலதுசாரிக் கண்ணோட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளமையே இதற்குக் காரணமாகும். இந்த அடிப்படை உரிமைகளில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மாத்திரமே உள்ளடங்கி காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நமது நாட்டின் அரசியலமைப்பின் 6 ஆவது அத்தியாயத்தில் வாழ்வதற்கான உரிமை சேர்க்கப்பட்டிருந்தாலும், அரசியலமைப்பின் 29 ஆவது பிரிவின் கீழ், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எந்த உரிமைகளையும் நீதிமன்றத்தில் சவால் விடுக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இது பாரதூரமான ஓர் விடயமாக காணப்படுகின்றன. நமது நாட்டின் உச்ச சட்டமான அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்பட்டு, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுடன், பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவையும் அடிப்படை உரிமைகளாக அமைந்து காணப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ரூ. 31 இலட்சம் மதிப்புள்ள இரத்த மாற்று இயந்திரமொன்றையும், (Dialysis Machine), 6.5 இலட்சம் மதிப்புள்ள RO plant இயந்திரமொன்றையும், மொத்தமாக 39 இலட்சம் மதிப்புள்ள வைத்தியசாலை உபகரணங்களை அநுராதபுரம், கெபிதிகொல்லாவ தள வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கி வைத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அண்மையில் அனுராதபுரம், கெபிதிகொல்லாவ பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராயும் நோக்கில், கெபிதிகொல்லாவ சந்தைத் தொகுதி வளாகத்தில், கிராமத்துக்கு கிராமமாக, வீட்டுக்கு வீடாக எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவை இடம்பெற்றது. அச்சமயம், விடுக்கப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றி வைக்கும் முகமாகவே நேற்றைய தினம் இது இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.
ஐக்கிய நாடுகளின் வேலைத்திட்டத்தினுள் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சாசனம் 1940 களின் பிற்பகுதியில் வெளியிடப்பட்டன. இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற மேற்கத்திய நாடுகளாலயே இவை உருவாக்கப்பட்டன. 50 கள் மற்றும் 60 களில் ஏகாதிபத்தியத்திற்கு உட்பட்டிருந்த பிற நாடுகள் சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து, அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் மட்டும் போதாது என்றும், பொருளாதார, சமூக, கலாச்சாரம், மத, கல்வி மற்றும் சுகாதார உரிமைகளும் இதில் சேர்க்கப்பட வேண்டும் என்று மக்கள் தெரிவித்தனர். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இரண்டாவது சாசனமாக சர்வதேச பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள்
சாசனம் உருவாக்கப்பட்டாலும், நமது நாட்டின் அரசியலமைப்பு முதல் சாசனத்தை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 ஒவ்வோரு குடிமகனும் அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்.
குடிமக்களாக சகல பிரஜைகளையும் நாட்டின் உச்ச சட்டமான அரசியலமைப்புச் சட்டத்தை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பாடசாலை கல்வியிலும், சகல பாடசாலை நூலகத்திலும் இந்த அரசியலமைப்பின் பிரதிகள் இருக்க வேண்டும். எந்தக் கட்சியினராக இருந்தாலும் சரி, தயவுசெய்து இந்தச் செய்தியை கிராமத்து மக்களுக்கு எடுத்துச் செல்லுங்கள். சுகாதாரம் இன்னும் அடிப்படை மற்றும் மனித உரிமையாக அமைந்து காணப்படாமையால், நமது மனித உரிமைகள் அத்தியாயத்தில் இதனை சேர்க்க வேண்டும். இவை மனித உரிமைகளாகவும் அடிப்படை உரிமைகளாகவும் மாற்றப்பட்ட பின்னர், ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு அரசாங்கமும் அச்சப்படும். இவ்வாறு அடிப்படை உரிமையாக மாற்றினால் ஆட்சியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பொறுப்புகள் வரும். இந்த வசதிகள் கிடைக்கவில்லை என்றால், குடிமக்களுக்கு பிரஜைகளுக்கு இவற்றை சவால் விடுக்க உரிமை காணப்படும். குறைபாடுகளை ஒரே நொடியில் தீர்த்து வைக்க முடியாது தான். என்றாலும், இவை அடிப்படை உரிமைகளாக மாறும் பட்சத்தில், இந்தக் குறைபாடுகளை ஏதோ ஒரு வகையில் நிவர்த்தி செய்து வைப்பது அரசாங்கத்தின் பொறுப்பாக மாறும். அவ்வாறு அரசாங்கம் தமது பொறுப்பை நிவர்த்தி செய்து வைக்காத விடத்து, அதை நீதிமன்றத்தில் சவால் விடுப்பதன் மூலம், உகந்த சுகாதார கட்டமைப்பை பெற்றுக் கொள்வதற்கு மக்களுக்கு உரிமை காணப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 சுகாதார கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகளை தேசிய நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கி தீர்வு காண வேண்டும்.
பல குறிகாட்டிகளின் படி, நமது நாட்டின் சுகாதார கட்டமைப்பு குறித்து பெருமை கொள்ளலாம். உலகின் பல நாடுகள் நமது நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொள்கின்றன. நமது நாட்டில் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைத் துறைகள் என்பன வலுவானதாக காணப்படுகின்றன. பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தாதியர்கள் போன்ற பதவிகளை வகிப்பவர்கள் நோய் தடுப்புச் சேவைக்கு சிறந்த சேவைகளைப் பெற்றுத் தருகின்றனர். இந்த நல்ல பணிகளை செய்து வரும் தரப்பினர் விடயங்களிலும் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. இவற்றை தேசிய நிகழ்ச்சி நிரலின் மேல் மட்டத்திற்கு கொண்டு வந்து தீர்க்க என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 இதற்காக கட்சி பேதமின்றி அனைவரும் அணிதிரள வேண்டும்.
எனவே, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் போலவே, பொருளாதாரம், சமூகம், அரசியல், கலாச்சாரம், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றை அடிப்படை உரிமையாக மாற்றுவதற்கு அனைவரும் போராட வேண்டும். இது கட்சி பேதங்கள் இல்லாமல் நடக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.



