உள்நாடு

“இருள் சூழ்ந்த நேரத்தில் உதவிய உண்மையான நண்பன் இந்தியா”; புதுடில்லி பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரிணி பேச்சு

கல்வியும், கருணையும் ஒன்றாக கைகோர்த்துச் செல்ல வேண்டும் என்று இந்தியாவின் புதுடில்லி பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூர்யா தெரிவித்தார்.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, இந்திய அரசு சார்பில் இலங்கை அரசுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. மேலும் இலங்கை மக்களுக்காக இந்திய அரசு உணவு, நிதி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைத்து பலமுறை உதவிக்கரம் நீட்டியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் நிதி உதவியை இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்யா நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார். இலங்கையின் பிரதமராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக ஹரிணி அமரசூர்யா, 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு இன்று வருகை தந்துள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக புதுதில்லி பல்கலைக்கழகத்திற்கு சென்று, அங்குள்ள மாணவர்களை சந்தித்து பேசினார்.

ஹரிணி அமரசூர்யா புதுதில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார். கடந்த 1991 முதல் 1994 வரை புதுதில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை சோஷியாலஜி படித்து பட்டம் பெற்றுள்ளார். தற்போது இலங்கையின் பிரதமராக பதவியேற்று, தங்கள் பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு விருந்தினராக வருகை தரும் முன்னாள் மாணவி ஹரிணி அமரசூர்யாவை வரவேற்க மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாக காத்திருந்தனர். அவரை வரவேற்கும் விதமாக பெரிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

பின்னர் பல்கலைக்கழக வளாகத்திற்கு வருகை தந்த பிரதமர் ஹரிணி அமரசூர்யாவை, பல்கலைக்கழக முதல்வர் அஞ்சு ஸ்ரீவஸ்தவா வரவேற்றார். அதைத் தொடர்ந்து மாணவர்களின் உற்சாக வரவேற்பை ஹரிணி ஏற்றுக்கொண்டார். இதன் பின்னர் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுடன் ஹரிணி அமரசூர்யா உரையாடினார். அப்போது மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

மாணவர்களிடம் பேசியபோது, “கல்வியும், கருணையும் ஒன்றாக கைகோர்த்துச் செல்ல வேண்டும். கருணை இல்லாமல் அறிவு முழுமையடையாது” என்றார். மேலும், “ஜனநாயகம் என்பது விளையாட்டு அல்ல, அது கடின உழைப்பு” என்று குறிப்பிட்ட அவர், “வீட்டிலோ, அலுவலகத்திலோ அல்லது நாடுகளுக்கு இடையிலோ தடைகளை உருவாக்க வேண்டாம், பாலங்களை உருவாக்குங்கள்” என்று தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது இந்தியா அளித்த நிதி உதவி குறித்து பேசிய அவர், “இருள் சூழ்ந்த நேரத்தில் உண்மையான நண்பனைப் போல் இலங்கைக்கு இந்தியா கைகொடுத்து உதவியது” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *