ஆரோக்கியமான நாளைக்காக இன்றைய பாதுகாப்பான உணவு
“உலக உணவு தினம்” ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 16 ம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இவ்வாண்டின் கருப்பொருள் “ஆரோக்கியமான நாளைக்காக இன்றைய பாதுகாப்பான உணவு” என்பதாகும்.
இந்த கருப்பொருள், இன்றைய பாதுகாப்பான உணவுத் தேர்வுகள் நாளைய ஆரோக்கியமான எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்குகின்றன என்பதில் கவனம் செலுத்துகிறது.
பாதுகாப்பான உணவுப் பழக்கவழக்கங்கள் மூலம் எதிர்கால ஆரோக்கியத்தை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு எம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.
இன்றைய உலகில் வேகமான வாழ்க்கை முறை காரணமாக, மனிதர்கள் சுலபமாகக் கிடைக்கும் துரித உணவுகள் மற்றும் செயற்கை பொருட்களைக் கொண்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வதை பார்க்கிறோம். இதனால் பல்வேறு உடல் நலப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன.
பாதுகாப்பான, சத்தான உணவு என்பது மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும். இயற்கையாக விளையும் காய்கறிகள், பழங்கள், முழுத்தானியங்கள், மற்றும் நச்சு மருந்துகள் இல்லாத விளைபொருட்கள் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் வழங்குகின்றன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன.
பாதுகாப்பான உணவு…
உடல்நலத்தைக் காக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
நோய்களைத் தடுக்கிறது.
ஆரோக்கியமான சமுதாயத்திற்கான அடித்தளமாக அமைகிறது.
“பாதுகாப்பான உணவு என்பது ஆரோக்கியமான வாழ்க்கையின் காப்புறுதி.”
நாம் உண்ணும் உணவு தான் நம் உடலையும், மனதையும் வடிவமைக்கிறது. நாம் ஆரோக்கியமான எதிர்காலத்தை விரும்புகிறோம் என்றால், நல்ல உணவுப் பழக்கத்தை வளர்க்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களும் சமூக அமைப்புகளும் சேர்ந்து பிள்ளைகள் மற்றும் பெற்றோரிடையே பாதுகாப்பான உணவு பற்றிய விழிப்புணர்வை தொடர்ந்து பரப்பினால், முழு சமூகமும் ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கி நகர முடியும்.
ஆரோக்கியமான உணவு பழக்கத்துடன் நாம் நீண்ட நாட்கள் வாழலாம், நோயின்றி மகிழ்ச்சியாக இருக்கலாம். அதுவே நமது வாழ்வையும், நமது நாட்டின் எதிர்காலத்தையும் அழகாக வடிவமைக்கும்.
✒️ அஸ்ஹர் அன்ஸார்
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்