றிஷாதுக்கெதிரான மனு தள்ளுபடி
வட மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக, 2018ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நாகலந்த கொடிதுவக்கு மற்றும் மலிந்த சேனவிரத்ன ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று (15) தள்ளுபடி செய்யப்பட்டது.
ஏழு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கில், பலமுறை நீதிமன்ற உத்தரவுகள் வழங்கப்பட்டபோதிலும், வழக்குத் தாக்கல் செய்தவர்கள் நடைமுறைப்படி வழக்கை முன்னெடுக்கத் தவறியதால், தீர்ப்பின்றி இவ்வழக்கு நீடித்தது.
இந்த வழக்கிற்கு சட்ட அடிப்படை எதுவும் இல்லை என்றும், உண்மையான சட்டக் காரணங்களுக்காக அல்லாமல், ஊடகக் கவனத்தைப் பெறுவதற்காகவே தொடரப்பட்டது என்றும், முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா நீதிமன்றத்தில் வாதிட்டார்.
மேலும், மனுதாரர்கள் தொடர்ந்து வழக்கை முன்னெடுக்கத் தவறியதால், வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியிருந்த நிலையில், அந்தச் சமர்ப்பிப்பிற்கு இணங்க, இன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த ரிட் மனுவைத் தள்ளுபடி செய்தது.