இலங்கைக்கு எப்போதும் முன்னுரிமை அளிப்போம்; சீன ஜனாதிபதிஉறுதி
இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் சீனா உறுதியாக உள்ளதென சீன ஜனாதிபதி சி ஜின்பிங் கூறியுள்ளார்.
பெய்ஜிங்கில் பிரதமர் கலாநிதிய ஹரிணி அமரசூரிய மற்றும் சீன ஜனாதிபதி இடையேயான சந்திப்பின் போதே
அவர் இதனை கூறியுள்ளார்.
சீனாவும் இலங்கையும் நீண்டகால பாரம்பரிய நட்பை கொண்டுள்ளதாகவும் இரு நாடுகளும் அமைதி மற்றும் சகவாழ்வு
என்ற ஐந்து அம்சக் கொள்கையின் அடிப்படையில் இருதரப்பு உறவுகளை தொடர்ந்து வளர்த்து வருகின்றன என்றும்
சி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
மேலும் சீனா தனது அண்டை நாடுகளுடனான தனது இராஜதந்திரத்தில் இலங்கைக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கும் என்று சீன ஜனாதிபதி
உறுதியளித்தார்.
பாரம்பரிய நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கூடிய சீன-இலங்கை சமூகத்தை
கூட்டாக கட்டியெழுப்பவும், இரு நாடுகளின் மக்களுக்கும் அதிக செழிப்பை ஏற்படுத்தவும் சீனா இலங்கையுடன் இணைந்து
பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் சீனா ஆதரவளிக்கிறது.
“துறைமுகப் பொருளாதாரம், நவீன விவசாயம், டிஜிட்டல் பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட
பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் தயாராக உள்ளது.
இந்த வழியில், இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை ஆதரிக்கவும், சட்ட அமலாக்கம்,
சர்வதேச தொலைத்தொடர்பு குற்றங்களை எதிர்த்துப் போராடுதல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பலதரப்பு கட்டமைப்புகளில் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் சீனா நம்புகிறது” என்றார்.
இதேவேளை, பெண்கள் மீதான உலகளாவிய உச்சி மாநாட்டில் சி ஜின்பிங் வெளியிட்ட அறிக்கை ஆழமானது
எனபிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
உலகளாவிய பெண்கள் இயக்கத்தை ஊக்குவிப்பதில் சீனா ஆற்றிய முக்கிய பங்கை இது பிரதிபலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சீனாவுடனான தனது உறவுகளை மதிக்கும் இலங்கை, ஒரே சீனா கொள்கையை கண்டிப்பாக கடைபிடிப்பதாகவும் கூறினார்.
இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு சீனா வழங்கும் மதிப்புமிக்க ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அவர், சீன பாணி
நவீனமயமாக்கல் அனுபவத்தைப் படிப்பதன் மூலமும், சீனாவுடனான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதன் மூலமும் தனது நாட்டில்
ஒரு புதிய வளர்ச்சியை அடைய விரும்புவதாகக் கூறினார்.
தற்போதைய பதற்றமான சர்வதேச சூழ்நிலையை அமைதிப்படுத்த சி ஜின்பிங் முன்வைத்த நான்கு உலகளாவிய முயற்சிகள்
முக்கியமானவை என்றும், அந்த முயற்சிகளை செயல்படுத்தவும், உலகளாவிய தெற்கில் பொதுவான ஆதாயங்களை உறுதி
செய்யவும் இலங்கை சீனாவுடன் இணைந்து செயல்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.