வாழைச்சேனை கடல் பரப்பில் கவிழ்ந்த ஆழ்கடல் படகு..! தெய்வாதீனமாக உயிர் தப்பிய 3 மீனவர்கள்..!
ஆழ்கடலுக்கு தொழிலுக்காக சென்ற படகு பாரிய அலையின் காரணமாக நீரில் மூழ்கியபோது அதில் பயணித்த தொழிலாளர்கள் மூன்று பேரும் தெய்வாதீனமாக உயிர் தப்பி இன்று (12.10.2025) கரைக்கு வந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
வாழைச்சேனையில் இருந்து கடந்த 04.10.2025 அன்று தொழில் நிமித்தம் எம்.எச்.முஹம்மட் அலீம் என்பவருக்கு சொந்தமான ஆழ்கடல் படகில் மூன்று பேர் தொழிலுக்காக ஆழ்கடலுக்கு சென்று மீண்டும் 10.10.2025 அன்று கரைக்கு திரும்பிக்கொண்டு இருந்த வேளையில் கரைக்கு 113 கிலோ மீற்றர் இருக்கும் போது அதிகாலை 3 மணியளவில் பாரிய அலை ஒன்று ஏற்பட்ட போது படகில் நீர் புகுந்ததினால் படகின் பின்புறம் நீரில் மூழ்க எத்தணித்தது. அதேவேளை அருகில் இருந்த படகுக்கு செய்கை மூலம் தெரியப்படுத்திய போது அவர்களின் உதவியுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை கரைக்கு வந்து சேர்ந்ததாக படகில் சென்றவர்கள் தெரிவித்தனர்.
படகில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவை சேர்ந்த பிறைந்துரைச்சேனையை வசிப்பிடமாக கொண்ட ஹலால்தீன் (வயது – 42), பாலைநகரை சேர்ந்த ஜே.எம்.நவ்சாத், தியாவட்டவானை சேர்ந்த ஆர்.எம்.பைஸர் ஆகிய மூவருமே உயிர் தப்பி கரைக்கு வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக படகு உரிமையாளரால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(ஏ.எஸ்.எம்.முர்ஷித்)