உள்நாடு

பேரிடரின்போது உயிரை துச்சமாகக் கருதி களப்பணியாற்றிய மனிதாபிமான அமைப்புகளுக்கு வீரமானிடர் விருது..!

பேரிடர்களின்போது தமது உயிரைப் பணயம் வைத்து – உயிராபத்தை எதிர்நோக்கிய மக்களைக் காப்பாற்றிய அல்லது அதற்காக முனைந்த வீர மானிடர்களை விருது வழங்கி கெளரவிக்கும் தேசிய விழா சனிக்கிழமை (11) பாராளுமன்ற சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள காணிச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பொது மக்கள் வீரச் செயலுக்கான மன்றத்தின் ஏற்பாட்டில் 28 ஆவது முறையாக இடம்பெற்ற இந்த விருது விழாவின்போது அம்பாறை மாவட்டத்தில் உத்வேகத்துடன் செயற்படுகின்ற நான்கு மனிதாபிமான அமைப்புகளும் வீர மானிடர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளன.

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை, மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு, காரைதீவு ராவணா அமைப்பு மற்றும் கல்முனை ஆழ்கடல் சுழியோடிகள் அமைப்பு என்பனவே இவ்வாறு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டிருக்கின்றன.

கடந்த வருடம் நவம்பர் 26 ஆம் திகதி வெள்ள அனர்த்தத்தின் போது காரைதீவு – மாவடிப்பள்ளி பாலத்தில் உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்ததால் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிருக்காக போராடிக் கொண்டிருந்தவர்களை – தமது உயிரை துச்சமாகக் கருதி- அர்ப்பணிப்புடன் போராடி அவர்களில் சிலரை உயிருடன் மீட்டதுடன் அந்த அனர்த்தத்தில் உயிரிழந்த அரபுக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 09 பேரின் ஜனாஸாக்களை மீட்டு, தமது மனிதாபிமானத்தையும் வீரதீரச் செயலையும் இந்த அமைப்பினர் நிருபித்திருந்தனர்.

இது தவிர மற்றும் பல அசாதரண சந்தர்ப்பங்களிலும் இவர்கள் துரிதமாக செயற்பட்டு, இடர்களில் சிக்கிக் கொள்ளும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை முன்னெடுத்து வருகின்றனர். தமது உயிரை துச்சமாக மதித்து- தமது நேர காலங்களையும் தொழில் துறைகளையும் தியாகம் செய்து- அர்ப்பணிப்பு மிக்க உன்னத சேவைகளை முன்னின்று செய்வதற்காகவே தேசியளவிலான இவ்விருதுக்கு இவர்கள் தெரிவு கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அஸ்லம் எஸ்.மெளலானா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *